காயல்பட்டினம் நகராட்சி பொன்விழா ஆண்டு நகர்ப்புற வேலைவாய்ப்புத் திட்டம் மூலம் 2013-14 ஆண்டிற்கான - வறுமைக் கோட்டிற்குக் கீழ் வாழும் பயனாளிகளுக்கு தொழில் திறன் பயிற்சி வழங்குவது தொடர்பாக, 27.03.2013 மற்றும் 28.03.2013 (புதன், வியாழன்) ஆகிய இரண்டு நாட்களில் நகராட்சி வளாகத்தில் சிறப்பு முகாம் மூலம் பயனாளிகள் தேர்வு நடைபெற்றது.
இம்முகாமில் காயல்பட்டினம் நகராட்சிக்குட்பட்ட - வறுமைக் கோட்டிற்குக் கீழ் வாழும் குடும்பங்களைச் சேர்ந்த மாணவ-மாணவியர் பயிற்சிக்காக விண்ணப்பித்தனர்.
ப்ளாஸ்டிக் பொருட்களைத் தவிர்க்க வேண்டியதன் அவசியம் குறித்து விளக்கிப் பேசி, அது தொடர்பாக நகராட்சியால் மேற்கொள்ளப்படும் திட்டப் பணிகளுக்கு உறுதுணையாக இருக்குமாறு, முகாமில் கலந்துகொண்ட மாணவ-மாணவியரிடம், காயல்பட்டினம் நகராட்சியின் சுகாதார ஆய்வாளர் எஸ்.பொன்வேல் ராஜ் கேட்டுக்கொண்டார்.
இம்முகாமின்போது, காயாமொழி ஆரம்ப சுகாதார நிலையத்தின் காயல்பட்டினம் பகுதி சுகாதார ஆய்வாளர் சோமசுந்தரம், காயல்பட்டினம் நகராட்சியின் துப்புரவுப் பணி மேற்பார்வையாளர் லக்ஷ்மி, நகராட்சி அலுவலர் ராதாகிருஷ்ணன் உட்பட பலர் உடனிருந்தனர்.
விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்பட்ட மாணவ-மாணவியருக்கு, திருச்செந்தூரிலுள்ள தனியார் கணனி மையத்தில் பயிற்சி வழங்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது. |