சுற்றுச்சூழல் பாதுகாப்பு இயக்கமான பூவுலகின் நண்பர்கள் - விதையிலிருந்தே மரம் ... என்ற
தலைப்பில் சுற்றுச்சூழல் இதழியல், எழுத்துக்கான பயிற்சிப் பட்டறை - மே 24, 25, 26 (வெள்ளி, சனி,
ஞாயிறு) ஆகிய மூன்று தினங்களில் பாபநாசம் அருகே பொதிகை மலை அடிவாரத்தில் நடைபெற்றது.
சென்னை, திருவண்ணாமலை, கோயம்புத்தூர், சேலம், சிவகங்கை, மதுரை, திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டங்களைச் சுமார் 70 பேர்
பட்டறையில் பங்கேற்றனர். இதில் மருத்துவர்கள், ஊடகவியலாளர்கள், ஆய்வாளர்கள், மாணவர்கள், திரையுலகினர், கவிஞர்கள், ஓவியர் உட்பட
பலர் அடங்குவர்.
இப்பயிற்சி பட்டறையில் பல வல்லுனர்களும், சமுக ஆர்வலர்களும் உரை நிகழ்த்தினர்.
முதல் நாள் உரைகளின் சாராம்சம் இதோ:
பேரா. தொ.பரமசிவம்--- தலைமையுரை
மாங்காய் , தேங்காய் , கத்தரிக்காய் துண்டுகள்
போட்டு விதம் விதமாக காய்ச்சப்பட்ட கூழ் பத நீர் ( பாகு ) , நெல்லின் மணம் போன்றவை இப்போதுள்ள தலைமுறைக்கு தெரியாது. நான் என்
சிறு பருவத்தில் தாராளமாக உண்டு களித்த நிறைய இயற்கை உணவு வகைகள் இப்போது காணாமல் போய் விட்டது.
ஒவ்வொரு வட்டாரத்திற்கும் இலக்கிய மரபு உண்டு. தமிழர்கள் இயற்கையை வைத்தே மனித பருவங்களை அழைத்திடுவர். { எ.கா } பழுத்த பழம்
= கிழவி , பச்சைப்பசலை = பச்சிளங்குழந்தை.
எழுத்து என்பது அதிகாரம். தமிழகத்தில் இயற்கை அறிவு தொகுக்கப்படவில்லை. வெள்ளைக்காரன் அவை அனைத்தையும் தொகுத்து ஆவணப்படுத்தி
சூத்திரமாக்கி விற்கின்றான். அதன் பின்னர் உலகையே அடிமைப்படுத்துகின்றான்.
வெள்ளைக்காரனின் இந்த உலகமயமாக்கமானது உற்பத்தியை மக்களிடமிருந்து பிரிக்கின்றது. இயற்கையிலிருந்து வருவது உற்பத்தி . பொருள்
உற்பத்தியிலிருந்துதான் பண்பாடு பிறக்கின்றது.
இன்று 60க்கும் மேற்பட்ட நெல் வகைகள் காணாமல் போய் விட்டது. நாம் அன்றாடம் உண்ணும் உணவில் உள்ள மீனை ஏரியிலும் , குளத்திலும் ,
கண்மாயிலும் , ஆற்றிலும் , கடலிலும் ,வயல் வரப்பிலும் பிடித்துக் கொண்டிருந்தோம்.
இன்று கடலைத்தவிர வேறு எங்கும் மீன் இல்லை. அவை திட்டமிட்டே ஒழித்துக் கட்டப்பட்டு விட்டன. கடலிலும் பன்னாட்டு வணிக நிறுவனங்கள்
பெருமளவில் மீன் பிடிக்கின்றன. இப்படியாக மீன் ,விவசாயம், கல்வி என அனைத்தும் உலக மயமாக்கத்தால் ஒற்றை மைய பண்பாட்டு
அம்சங்களாக திட்டமிட்டு மாற்றப்பட்டு விட்டன.
எனவே நாம் இழந்தவற்றை மீண்டும் தேடிப்போக வேண்டியிருக்கின்றது. நாமனைவரும் ஒன்றாக சேர்ந்து அவற்றை மீட்டெடுப்போம்.
களக்காடு முண்டந்துறை புலிகள் சரணாலயம் --- ஆல்பட் ராஜேந்திரன்
உலகிலுள்ள தூய்மையான நீர் ஆதாரங்களில் பத்தாவது இடம் தாமிரபரணி
ஆற்றுக்கு உண்டு.
களக்காடு முண்டந்துறை புலிகள் சரணாலய காட்டில் பெய்யும் மழை நீரானது நேராக மண்ணில் விழுவதில்லை. மாறாக அவை அடர்ந்த மரம் செடி
கொடிகளில் விழுந்து அதன் பின்னர் நிலத்தை நோக்கி சொட்டுவதால் மண் அரிப்பு ஏற்படுவதில்லை.
பொதிகை மலையில் வெப்ப மண்டல பசுமை மாறா ஈரக்காடு உள்ளதால் எப்பொழுதும் வெண் மேகம் மூடு பனியாய் போர்த்தியிருக்கும்.
சுற்றுச்சூழல் இதழியல் – ஆதி வள்ளியப்பன்
சுற்றுச்சூழல் இதழியல் என்பது தீவிர அறிவியல் மொழியில் இருந்தால், மக்கள் அதில் ஈடுபாடு காட்ட மாட்டார்கள். எனவே, விஷயத்தை மக்களுக்கு
விளங்கும் வகையில் வெளிப்படுத்த வேண்டும். மேலும் நமது பார்வையும் முழுமையானதாக அமைய வேண்டும்.
எடுத்துக்காட்டாக , புலியை பாதுகாக்க வேண்டும், சோலைமந்தியை பாதுகாக்க வேண்டும், இருவாச்சி பறவையை பாதுகாக்க வேண்டும் என்று
எழுதினால். ஓர் உயிரினத்தை பாதுகாப்பதால் என்ன பெரிய மாற்றம் விளைந்துவிடப் போகிறது என்று தோன்றும்.
ஆனால், மௌனப்பள்ளத்தாக்கு எனப்படும் சைலன்ட் வேலியின் பாதுகாப்பில் இந்த உயிரினங்கள் ஒட்டுமொத்த சூழலியலுக்கு ஆற்றும் பங்கு
விளக்கப்பட்டது. இதன் விளைவாக மௌனப் பள்ளத்தாக்கு பாதுகாக்கப்பட்டது)
• இயற்கை சார்ந்த எழுத்தில் அறிவியல் சார்ந்த இயற்கை வரலாற்றுத் தகவலை எழுதுவது ஒரு முறை,
• இயற்கை தனிநபருக்கு தந்த பட்டறிவை எழுதுவது மற்றொரு முறை.
இரண்டும் கலந்ததாகவே பெரும்பாலும் இருக்கும். அதுதான் வாசகர்களிடையே தாக்கத்தை ஏற்படுத்துகிறது.
காந்திய பொருளியல் அறிஞர் ஜே.சி.குமரப்பா, சமூகவியல் அறிஞர் ராதாகமல் முகர்ஜி போன்றோர் 1940களிலேயே மேற்குலகின் சமூகவியல்,
பொருளாதார கொள்கைகளுக்கு மாறாக, அவற்றுடன் கிழக்கு நாடுகளின் சிந்தனையான இயற்கை அறிவியல், சுற்றுச்சூழலை இணைத்தனர்..
ஆனால், இன்றைக்கு அவர்களும் அவர்களது கொள்கைகளும் முற்றிலும் மறக்கப்பட்டு விட்டன.
இந்தியாவின் புதிய ஆட்சி சூழலியல் பொறுப்புணர்வுடன் செயல்பட வேண்டும் என்று அவர்கள் வலியுறுத்தியபோது, நேரு தலைமையிலான அரசை
சேர்ந்தவர்கள் நவீனத்தை வலியுறுத்தினர்.
இயற்கையுடன் இயைந்து வாழ வேண்டும் என்று அறிஞர்கள் வலியுறுத்தியபோது, இந்தியாவின் பொருளாதாரத்தை வளர்க்கும் தொழில் முன்னேற்றம்
இதனால் பாதிக்கப்பட்டு விடும் என்று நேரு தலைமையிலானவர்கள் கூறி அவர்களது வாதத்தை புறந்தள்ளினர்.
அதுவே இன்று வரை தொடர்ந்து வந்திருக்கிறது. தொழில் முன்னேற்றத்துக்கு அளித்த முக்கியத்துவத்தின் காரணமாக கடந்த 65 ஆண்டுகளாக பல துர்
பலன்களை நாம் அடைந்து இருக்கிறோம். ( எ.கா. ) புற்றுநோய், நீரிழிவு, மாரடைப்பு
• காட்டுயிர் -மனித எதிர்கொள்ளலைப் (Man Animal Conflict) பற்றி செய்தி வெளியிடும் நாளிதழ்கள், பத்திரிகைகள் "யானைகளின்
அட்டகாசம்", "காட்டெருமைகளின் தாக்குதல்", "கொடூர சிறுத்தை" என்று உயிரினங்களுக்கு எதிரான தொனியிலேயே எழுதுகிறார்கள். இந்த
அணுகுமுறை பக்கச் சார்புடையது (Biased). மேலும் இதன் மூலம் அந்தப் பிரச்சினையையும் புரிந்துகொள்ள முடியாது. அது காடுகளுக்கோ,
உயிரினங்களுக்கோ நன்மையும் செய்வதில்லை.
• இதில் யானை, புலியை எல்லாம் காப்பாற்றுவதால் யாருக்கு என்ன லாபம் என்று கேட்கும் மனித அகங்காரப் போக்கே வெளிப்படுகிறது.
இந்த பூமி மனிதர்களுக்கு மட்டும் சொந்தமானது என்று நினைப்பதன் அடிப்படையில் உருவாகும் அகங்காரம் அது. இந்த பூமி எல்லா
உயிரினங்களுக்கும் சொந்தமானது. எனவே, பூமியின் மீது எல்லா உயிர்களுக்கும் உரிமை உண்டு.
பசுமைப் புரட்சியின் வன்முறை – இயற்கை வேளாண் விவசாயி வைகை குமாரசாமி
ஜே.சி.குமரப்பாவினால்தான் பசுமை புரட்சி இந்தியாவில் 10-15 நாட்கள் தாமதப்பட்டது. இந்தியாவில் பசுமைப்புரட்சி கண்ணுக்குத் தெரியாத
வன்முறை மூலம் நடைமுறைப்படுத்தப்பட்டது.
குடுவை ( பாட்டில் ) நீர் விற்பனைக்கு வருவதற்கு முன் உள் நாட்டு சோடா கண்ணாடி வெற்று குப்பிகள் அனைத்தையும் பன்னாட்டு வணிக நிறுவனம்
ஒன்று மொத்தமாக விலைக்கு வாங்கி காணாமலாக்கி விட்டது.
உள் நாட்டு சோடா உற்பத்தியாளர்கள் அடுத்த கட்டத்தை சிந்திப்பதற்குள் சந்தையில் மென்பானம் , குடுவை நீர் போன்றவை மிக வேகமாக
விற்பனைக்கு வந்து விட்டது.
முன்பெல்லாம் வயலுக்கு வேலைக்கு போய் விட்டு திரும்பும் பெண்கள் ஒரு கையில் பச்சைக் காய்கறிகளையும் மறு கையில் விதம் விதமான மீன்
வகைகளையும் பிடித்து வருவர்.
ஆனால் பூச்சிக்கொல்லி மருந்துகளின் விளைவாக வயலிலும் வாய்க்காலிலும் ஏராளமான மீன் இனம் முழுமையாக அழிந்து விட்டது.
நீர் நிலைகளின் அவசியம் – சாமுவேல் ஆசீர் ராஜ்
ஏரி இல்லாமல் தமிழ் பண்பாடு இல்லை. இந்தியாவில் உள்ள கோகோ கோலா ஆலைக்கு 100 லீட்டர் தண்ணீரை வெறும் 0.40 காசுகளுக்கு நமது
அரசு விற்கின்றது. ஆனால் நாமோ 20 லீட்டர் அளவுள்ள குடி நீர் கொள்கலனை 40 ரூபாய்கள் கொடுத்து வாங்க வேண்டியுள்ளது.
அய்ரோப்பிய நாடுகளில் ½ லீட்டர் நீரின் விலை 1 யூரோ. ஒரு யூரோ என்பது ஏறத்தாழ இந்திய மதிப்பில் 74 ரூபாய்கள். ஆனால் 600 மில்லி பீர்
மது பானத்தின் விலை 0.60 சென்ட்கள்தான். அதாவது இந்திய மதிப்பில் 44 ரூபாய்கள்.
தாமிரபரணி நதியில் ஆலை கழிவுகள் , விவசாய கழிவுகள் , மருத்துவ கழிவுகள் கொட்டப்படுகின்றன. இதனால் அந்த நதி தொடர்ந்து
மாசுபடுகின்றது. மணி முத்தாறு அணையின் நீர் மட்டம் 83 அடிகள் இருந்த போதிலும் விவசாயத்திற்கு நீரை திறந்து விட மறுக்கின்றனர். காரணம்
என்னவென்றால் கூடன் குளம் அணு உலையை குளிர்விக்க இந்த தண்ணீர் வேண்டுமாம்.
[தொடரும்]
[முதல் நாள் உரைகள் | இரண்டாம் நாள் உரைகள் | மூன்றாம் நாள் உரைகள்]
தகவல்:
எழுத்து மேடை மையம் |