ஷஃபான் மாதத்தின் 15ஆம் இரவு நிஸ்ஃபு ஷஃபான் (ஷஃபானில் பாதி) என்று அழைக்கப்படும். ‘ஷபே பராஅத்‘, ‘பராஅத் இரவு‘ என்ற பெயர்களிலும் அழைக்கப்படும் இந்நாள் இரவில், நீண்ட ஆயுளை வேண்டியும், தீவினைகளிலிருந்து பாதுகாப்பு வேண்டியும், படைத்தவனைத் தவிர்த்து படைப்பினங்களின் உதவிகளிலிருந்து தேவைற்றிருக்கச் செய்திடக் கோரியும் திருமறை குர்ஆனின் யாஸீன் அத்தியாயத்தை 3 முறை ஓதி, பிரார்த்திப்பது வழமையாக இருந்து வருகிறது.
காயல்பட்டினத்திலுள்ள புதுப்பள்ளி, காதிரிய்யா கொடிமர சிறுநெய்னார் பள்ளி, மஸ்ஜித் மீக்காஈல், குருவித்துறைப் பள்ளி, மஹ்ழரா, ஜாவியா உள்ளிட்ட பல இடங்களில் இந்நடைமுறை ஆண்டுதோறும் பின்பற்றப்பட்டு வருகிறது.
24.06.2013 அன்று இரவு 07.00 மணியளவில், காயல்பட்டினம் குருவித்துறைப் பள்ளியில், அதன் தலைவர் நஹ்வீ புகாரீ ஆலிம் தலைமையில் பராஅத் இரவு சிறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.
காயல்பட்டினம் ஜாவியாவில் நடைபெற்ற சிறப்பு நிகழ்ச்சிக்கு, கலீபத்துல் குலஃபா மவ்லவீ ஹாஃபிழ் முத்துவாப்பா ஃபாஸீ தலைமை தாங்கினார். பராஅத் இரவின் மகத்துவம் குறித்து, ஜாவியா அரபிக் கல்லூரியின் முதல்வர் மவ்லவீ எஸ்.எம்.முஹம்மத் ஃபாரூக் அல்ஃபாஸீ சிறப்புரையாற்றினார்.
துஆவுடன் நிகழ்ச்சிகள் நிறைவுற்றன. பின்னர், கலந்துகொண்ட அனைவருக்கும் நேர்ச்சை வினியோகிக்கப்பட்டது. |