அரசு உத்தரவிட்டுள்ள படி, குடியிருப்போர் அடையாள அட்டை (Resident Identity Card) வழங்குவதற்கான விபரங்கள் பதிவு செய்யும் முகாம், காயல்பட்டினம் நகராட்சியின் 18 வார்டுகளிலும் படிப்படியாக நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.
காயல்பட்டினம் முஹ்யித்தீன் மெட்ரிகுலேஷன் துவக்கப்பள்ளி வளாகத்தில், இம்மாதம் 14ஆம் தேதி வெள்ளிக்கிழமை முதல், 01ஆவது வார்டில் துவங்கி, 04ஆவது வார்டு வரை - குடியிருப்போர் அடையாள அட்டைக்காக பொதுமக்களின் விபரங்கள் பதிவு செய்யப்பட்டு, பதிவு செய்யப்பட்ட விபரங்களின் நகல் அவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.
தற்போது 05 மற்றும் 06ஆவது வார்டுகளுக்கான விபரங்கள் சேகரிக்கும் முகாம், முஹ்யித்தீன் மெட்ரிகுலேஷன் துவக்கப்பள்ளி வளாகத்தில் நடைபெற்று வருகிறது.
குடும்ப உறுப்பினரின் நிழற்படம், கருவிழிகளின் படங்கள், 10 விரல்களின் ரேகைப் பதிவுகள் ஆகியன கணனி துணையுடன் படம் பிடிக்கப்பட்டு, அவர்களின் விபரங்களுடன் பதிவு செய்யப்படுகிறது.
முகாம் பணிகளை, காயல்பட்டினம் நகர்மன்றத்தின் 05ஆவது வார்டு உறுப்பினர் எம்.ஜஹாங்கீர், 06ஆவது வார்டு உறுப்பினர் ஏ.கே.முஹம்மத் முகைதீன் ஆகியோர் மேற்பார்வையிட்டு, பொதுமக்களுக்குத் தேவையான வழிகாட்டுதல்களை வழங்கி வருகின்றனர்.
அல்அமீன் இளைஞர் நற்பணி மன்ற செயலாளர் கே.எம்.ஏ.முஹம்மத் முஹ்யித்தீன், ஏ.கே.மஹ்மூத் சுலைமான், வி.பி.புகாரீ உள்ளிட்டோரடங்கிய குழுவினர் துணைப்பணியாற்றி வருகின்றனர்.
06ஆவது வார்டு நகர்மன்ற உறுப்பினர் ஏ.கே.முஹம்மத் முகைதீன் ஏற்பாட்டில், காயல்பட்டினம் ஆஸாத் தெருவில் அலுவலகம் அமைக்கப்பட்டு, 2010ஆம் ஆண்டு கணக்கெடுப்பின்போது பொதுமக்களுக்கு வழங்கப்பட்ட ஒப்புகைச் சீட்டின் விபரப்படி, அவர்களது பெயர் விபரங்கள் சரிபார்க்கப்பட்டு டோக்கன் வழங்கப்படுகிறது.
அந்த டோக்கன் வரிசைப்படி, முஹ்யித்தீன் மெட்ரிக் பள்ளி வளாகத்தில் நடைபெறும் முகாமில் பொதுமக்கள் அனுமதிக்கப்பட்டு வருகின்றனர்.
05ஆவது வார்டுக்கான முன்பதிவுப் பணியை, அந்த வார்டுக்குட்பட்ட அனைத்து தெருக்களிலும் - வார்டு உறுப்பினர் எம்.ஜஹாங்கீர் நேரடியாக முகாமிட்டு, விபரங்களை சரிபார்த்து, டோக்கன்களை வழங்கி முடித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
இதர வார்டுகளுக்கான முகாம் நடைபெறும் நாட்கள் குறித்து அறிய, அந்தந்த வார்டு நகர்மன்ற உறுப்பினரைத் தொடர்புகொள்ள பொதுமக்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
படங்களில் உதவி:
A.K.இம்ரான் |