சுற்றுச்சூழல் பாதுகாப்பு இயக்கமான பூவுலகின் நண்பர்கள் - விதையிலிருந்தே மரம் ... என்ற
தலைப்பில் சுற்றுச்சூழல் இதழியல், எழுத்துக்கான பயிற்சிப் பட்டறை - மே 24, 25, 26 (வெள்ளி, சனி,
ஞாயிறு) ஆகிய மூன்று தினங்களில் பாபநாசம் அருகே பொதிகை மலை அடிவாரத்தில் நடைபெற்றது.
சென்னை, திருவண்ணாமலை, கோயம்புத்தூர், சேலம், சிவகங்கை, மதுரை, திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டங்களைச் சுமார் 70 பேர்
பட்டறையில் பங்கேற்றனர். இதில் மருத்துவர்கள், ஊடகவியலாளர்கள், ஆய்வாளர்கள், மாணவர்கள், திரையுலகினர், கவிஞர்கள், ஓவியர் உட்பட
பலர் அடங்குவர்.
இப்பயிற்சி பட்டறையில் பல வல்லுனர்களும், சமுக ஆர்வலர்களும் உரை நிகழ்த்தினர்.
இரண்டாம் நாள் உரைகளின் சாராம்சம் இதோ:
சுற்றுச் சூழல் எழுத்தும் இதழியலும் – முனைவர் எஸ். அருள் செல்வன்
செய்திகளின் எல்லா பக்கங்களையும் முன் வைத்து விட்டு முடிவை வாசகரிடம் விட்டு விட வேண்டும்.
செய்திகளை அளிப்பதில்
ACCURACY = துல்லியம்
FAIRNESS = நேர்மை
OBJECTIVITY = பாரபட்சமற்ற , உணர்ச்சிக்கு அப்பாற்பட்ட தன்மை
ATTRIBUTION = பொறுப்பேற்றல்
VERIFICATION = சரி பார்த்தல்
என்ற அம்சங்கள் இருக்க வேண்டும்.
பொதுவாகவே ஊடகங்கள் செய்திகளை வழங்கும் போது சூழலியல் அணுகுமுறையை கணக்கில் எடுக்காது குருட்டுத்தனமாக நடந்து கொள்கின்றன.
விவசாயிகளின் தற்கொலைகளை வெறும் கடன் சுமை என குறுக்கிப் பார்க்கின்றோம். நோயை விட்டு விட்டு அதன் அறிகுறிகளை பிடித்துக்
கொள்கின்றோம்.
செலவு மிக்க தாங்க இயலாத விவசாய முறைகள்தான் தற்கொலைகளுக்கு காரணம் என்பதை கவனப்படுத்த தவறுகின்றோம்.
பசுமை புரட்சியின் விளைவாக பூச்சிக்கொல்லி மருந்துகளை கட்டுங்கடங்காமல் பயன்படுத்தியதால் மண்ணானது தனது வளத்தை இழந்து விட்டது.
இதன் விளைவாக விவசாயம் கண் மூடித்தனமான செலவு மிக்கதாக ஆகி விட்டது.
ஆனாலும் இத்தனை உண்மைகளையும் புறந்தள்ளி விட்டு நாம் வழமைப் படியே விவசாயத்தை மேம்படுத்த இன்னும் கூடுதல் கடன் வழங்க வேண்டும்,
வலுவான வேதிப்பொருட்களும் மரபணு மாற்றம் செய்யப்பட்ட விதைகளும் வினியோகிக்கப்பட வேண்டும் என எழுதிக் கொண்டிருக்கின்றோம்.
சூழலியல் தொடர்பாக எழுதி வெற்றி பெற்ற பத்திரிகைகளும் இருக்கின்றன.
எடுத்துக்காட்டாக அடிகே பத்ரிகே என்ற கன்னட சஞ்சிகையானது மழை நீர் அறுவடையில் நடந்த சாதனைகளை 1996 – 2004 ஆண்டுகள் வரை
தொடர்ச்சியாக செய்தியாக வெளியிட்டுக் கொண்டே இருந்தது.
இந்த சாதனை செய்திகளை வெளியிடுவதற்கு அது இரண்டு நிபந்தனைகளை மட்டுமே முன் வைத்தது.
ஒன்று , அரசு உதவியோ மானியமோ பெறாமல் சாதித்த குடி மகனின் கதை.
அடுத்த்து அந்த குடிமகன் நடைமுறைப்படுத்திய தொழில் நுட்பங்கள் குறைந்த பட்சம் அவரது அண்டை வீட்டுக்காரராவது பின்பற்றத் தகுந்ததாக இருக்க
வேண்டும்.
இதன் விளைவாக ஆயிரக்கணக்கான விவசாயிகள் இந்த எளிமையான ஆலோசனைகளை பின்பற்றி வெற்றி பெற்றனர்.
மருத்துவர்கள் , ஆசிரியர்கள் , விவசாயிகள் என வாழ்வின் பல்வேறு துறைகளை சார்ந்த 30க்கும் மேற்பட்டவர்கள் மழை நீர் அறுவடை குறித்து
விழிப்புணர்வு பரப்புரை செய்யத் தொடங்கி விட்டனர்.
தேசிய நீர் வரைவு கொள்கை --- வெற்றிச்செல்வன்
நேரடியாக போர் புரியாமல் கொள்கைகளின் சட்டங்களின் வாயிலாக யுத்தம் செய்தல் என்பது நவீன வழிமுறையாக உள்ளது.
2002 ஆம் ஆண்டு நீரை தனியாருக்கு தாரை வார்க்க வேண்டும் என்ற கொள்கை இந்த நாட்டில் அரசினரால் வெளியிடப்பட்டது.
இந்த திசையில் தற்சமயம் 16 பக்க நீர் வரைவு அறிக்கையை நடுவணரசு வெளியிட்டுள்ளது. இதில் ஒரு அம்சம் நீரை இலவசமாக கொடுக்கக்கூடாது
என்பதாகும்.
POSCO எஃகு ஆலை எதிர்ப்பு போராட்டம் --- எழுத்தாளர் அ. முத்து கிருஷ்ணன்
POSCO எஃகு ஆலை என்பது ஒடிஷா மாநிலத்தில் உள்ள தென் கொரிய நாட்டு நிறுவனமாகும். தனது ஆலைக்காக இந்த நிறுவனம் பழங்குடியினருக்கு
சொந்தமான 4000 ஏக்கர் நிலத்தை கேட்டது. இதை எதிர்த்து 2006 ஆம் ஆண்டு போராட்டம் தொடங்கியது.
இங்குள்ள ஆதிவாசிகள் 8 கிராமங்களில் வசிக்கின்றனர். இவர்கள் மிகவும் மென்மையானவர்கள். வெற்றிலை கொடிக்கால் பயிர்தான் இவர்களின்
தலையாய வாழ்வாதாரம். இந்த பகுதியை பின் தங்கியது என அரசு சொல்கின்றது. ஆனால் பழங்குடியினரோ சிறிய வருமானத்தைக் கொண்டு நிறைந்த
வாழ்க்கை வாழ்கின்றனர்.
போஸ்கோ எஃகு ஆலைக்காக தாங்கள் இடப்பெயர்வு செய்யப்படுவதை எதிர்த்து போராடுகின்றனர். இதனால் இவர்கள் அனைவரின் மீதும் பொய்
வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது.
ஆலை மறு வாழ்வு கொடுத்ததாக சொல்லும் 10 பழங்குடி குடும்பங்களும் உண்மையில் மறு வாழ்வு பெறவில்லை.
இங்குள்ள எல்லா ஆலைகளும் தனியார் ஆயுத குழுக்களையும் , காடையர்களையும் வைத்திருக்கின்றனர்.
சத்தீஸ்கட் , ஜார்க்கண்ட் , பீஹார் உள்ளிட்ட மாநிலங்களில் வெட்டி எடுக்கப்படும் கனிம வளங்கள் வரைமுறையின்றி வெளி நாடுகளுக்கு
கடத்தப்படுகின்றன. இந்த கடத்தல்கள் எந்த சட்டங்களையும் நீதி முறைகளையும் கண்டு கொள்வதேயில்லை.
இத்தலியில் காலணி உற்பத்தி ஆலைகள் எதுவுமில்லை. காரணம் அந்த நாட்டு அரசு சூழலியல் சட்டங்களை மிக இறுக்கமாக கடைப் பிடிக்கின்றது.
இதன் விளைவாக அந்த ஆலைகள் அனைத்தும் தமிழகத்தின் ஆம்பூருக்கு வந்து விட்டன.
ஒடிஷாவும் , கூடன் குளமும் இந்திய சன நாயகத்தை குடும்பத்துடன் கேள்விக்கு உள்ளாக்குகின்றன. சூழலியல் போராட்டம் என்பது நம்மிலிருந்தும்
நம் வீட்டிலிருந்தும் முதலில் தொடங்கவேண்டும்.
[தொடரும்]
[முதல் நாள் உரைகள் | இரண்டாம் நாள் உரைகள் | மூன்றாம் நாள் உரைகள்]
தகவல்:
எழுத்து மேடை மையம் |