சுற்றுச்சூழல் பாதுகாப்பு இயக்கமான பூவுலகின் நண்பர்கள் - விதையிலிருந்தே மரம் ... என்ற தலைப்பில் சுற்றுச்சூழல் இதழியல், எழுத்துக்கான பயிற்சிப் பட்டறை - மே 24, 25, 26 (வெள்ளி, சனி, ஞாயிறு) ஆகிய மூன்று தினங்களில் பாபநாசம் அருகே பொதிகை மலை அடிவாரத்தில் நடைபெற்றது.
சென்னை, திருவண்ணாமலை, கோயம்புத்தூர், சேலம், சிவகங்கை, மதுரை, திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டங்களைச் சுமார் 70 பேர் பட்டறையில் பங்கேற்றனர். இதில் மருத்துவர்கள், ஊடகவியலாளர்கள், ஆய்வாளர்கள், மாணவர்கள், திரையுலகினர், கவிஞர்கள், ஓவியர் உட்பட பலர் அடங்குவர்.
இப்பயிற்சி பட்டறையில் பல வல்லுனர்களும், சமுக ஆர்வலர்களும் உரை நிகழ்த்தினர்.
மூன்றாம் நாள் உரைகளின் சாராம்சம் இதோ:
சேது சமுத்திர திட்டம் --- மருத்துவர் ரமேஷ்
அறிவியலும் அரசியலும் ஒன்றிணையும் இடம்தான் சேது சமுத்திர திட்டம்.
சேது என்றால் மேடு என்று பொருள்.
இத்திட்டத்திற்கு எதிராக நான்கு வகையான கதையாடல்கள் ( NARRATIVE ) இருக்கின்றன.
1. மீனவர்களின் வாழ்வாதார கதையாடல்
2. பசுமை கதையாடல்
3. சாத்தியப்பாடு பற்றிய கதையாடல்
4. ராமர் சேது கதையாடல்
அறிவியலாளர்கள் சேது சமுத்திர திட்ட எதிர்ப்பிற்காக திரட்டிய சான்றுகளையும் தரவுகளையும் ஹிந்துத்வம் தனக்கு ஆதரவாக பயன்படுத்திக்கொண்டது.
கடலானது வெறும் 5.20 மீட்டர் ஆழம் இருக்கும் பகுதியில் சேது சமுத்திரக் கால்வாய் தோண்டப்படும் எனக் கூறுகின்றார்கள். புயல் தாக்குதலுக்கு அடிக்கடி உள்ளாகும் நாகை, தஞ்சை கடல் பகுதிகளுக்குள் மண் அரிப்பு ஏற்படும். அந்த மணல் குவியலானது சேது சமுத்திர திட்டபகுதியில்தான் போய் குவியும்.
இந்தப் பிரச்சினையில் திட்டத்தின் சாத்தியப்பாடு பற்றிய கேள்விகளும் எழுப்பப்பட வேண்டும். திட்டம் வேண்டுமா ? வேண்டாமா ? என்பன பற்றிய விவாதங்களும் நடைபெற வேண்டும்.
சேது சமுத்திர திட்டத்திற்கு தொடர்பான ஆய்வுகள் எமக்கு ஒரு சிறந்த பிரச்சினை ஆய்வு ( CASE STUDY ) ஆக விளங்கியது. இதில் கிடைத்த பட்டறிவானது கூடன் குளம் பிரச்சினையில் எங்களுக்கு உதவிகரமாக உள்ளது.
என்னைபொறுத்த வரை சேது சமுத்திர திட்டம் செயல் வடிவம் பெறாது என்றே கூறுவேன். நாங்கள் இப்போது எங்கள் கவனத்தை கூடன் குளம் போராட்டத்தின் பக்கம் திருப்பி விட்டோம்.
கண்ணுக்குத்தெரியாத தண்ணீர் { VIRTUAL WATER } ---- எழுத்தாளர் நக்கீரன்
பெருமளவில் பாலை வன பரப்பை உடைய வளைகுடா நாடுகளில் தண்ணீருக்காக போராட்டம் நடந்ததில்லை.காரணம் அவர்கள் உணவுப்பொருட்களை உள் நாட்டில் விளைவிப்பதில்லை. அவற்றை இறக்குமதி செய்து விடுகின்றனர்.
ஒவ்வொரு விளை பொருட்களுக்குள்ளும் நீர் ஒளிந்திருக்கின்றது. அதாவது நிறைய நீரை பயன்படுத்திதான் நாம் விளை பொருட்களை உண்டு பண்ணுகின்றோம்.. இதற்கு பெயர்தான் புலனாகாத தண்ணீர் ( virtual water ).
56 லீட்டர் தண்ணீரை அழித்துதான் 1 லீட்டர் கோகோ கோலா மென் பானம் உருவாக்குகின்றனர். இந்த தொழில்கள் மூலம் நமது நீர் வளம் எவ்வளவு வெறுமையாகின்றது ? என்பதுதான் நம் முன் உள்ள கேள்வி.
நம் நாட்டிற்குள் நுழையும் அனைத்து தொழில்களையும் நாம் கேள்விக்கு உள்ளாக்க வேண்டிய தேவை இருக்கின்றது.
மாறி வரும் சுற்றுச் சூழல் சிந்தனைகள் --- நித்தியானந்த் ஜெயராமன்
ஒரு மரத்தை நடு , ஞெகிலி (பிளாஸ்டிக்) பைக்கு மாற்றாக துணிப்பை என்பன போன்ற கோரிக்கைகளால் மட்டும் சுற்றாடல் பாதுகாக்கப்படப் போவதில்லை. சுற்றுச் சூழல் தொடர்பான மாற்றம் முழுமை பெற வேண்டும் என்றால் அரசியல் மாற்றம் தேவை.
உலகின் சுற்றாடலை கெடுப்பது கார்ப்பரேட் என்கின்ற பெரு வணிக நிறுவனங்கள்தான். நாம் பொறியியல் , தகவல் தொழில் நுட்பத் துறைகளில் நமது பிள்ளைகளை படிக்க அனுப்பி பெரு வணிக நிறுவனங்களுக்கு அடிமையாக்கி வருகின்றோம். இந்த போக்கு மாற வேண்டும்.
மனித சட்டங்களை மீறினால் சில வேளை தண்டனைகளிலிருந்து தப்ப முடியும். ஆனால் இயற்கையின் சட்டங்களை உடைத்தால் எதிர்விளைவு / தண்டனை என்பது 100 % விழுக்காடு உறுதி.
ஞெகிலி குடுவைகளில் எவ்வித சலனமுமின்றி நீரருந்துகின்றோம். ஆனால் அது பேரழிவின் அடையாளங்களில் ஒன்றாகும். காசுள்ளவன் அதை வாங்கி அருந்தி விடுவான். காசில்லாதவனுக்கு பாதுகாக்கப்பட்ட குடி நீர் இல்லைதானே ?
இந்நாட்டின் கனிம வளங்கள் அகழ்ந்து எடுக்கப்படும்போது பல பிரச்சினைகள் உருவெடுக்கின்றன.
பாக்ஸைட் கனிமத்தை அகழ்ந்து எடுத்தால் தொழில் வளம் பெருகும் என்பது பெரு வணிக நிறுவனங்களின் வாதம்.
பாக்ஸைட் கனிமம் மண்ணுக்குள் இருந்தால் அருவிகள் , ஓடைகள் பெருகும் என்பது பழங்குடியினர் வாதம்.
ஒரு சன நாயக நாட்டில் எல்லா பிரிவினரின் கருத்துக்களையும் இணைத்துத் தான் ஒரு பொது முடிவிற்கு வர வேண்டும்.
உணவு அரசியல் --- மருத்துவர் சிவராம்
செயற்கை உணவுகளில் உள்ள கனிமங்கள் ,புரதங்கள் இயற்கை உணவைப்போல் உடலால் ஈர்க்கப்படுவதில்லை.. பி.காம்ப்ளக்ஸ் மருந்தே
தவறானது. புரத குளிகைகளும் ( மாத்திரை ) நல்லதில்லை. பச்சிளங்குழந்தைகளுக்கு செயற்கை உணவுகள் என்பது நஞ்சுதான். குழந்தைகளுக்கு அடிக்கடி சளி பிடிப்பதற்கு காரணம் செயற்கை உணவுகளே.
அதே போல் கூடுதலான வெப்பத்தில் உருவாகும் உணவுகளில் ஒரு புரதமும் இருக்காது. அது வெறும் சக்கைதான்.
இவற்றிற்கெல்லாம் ஒரே மாற்று சிறு தானிய உணவுகளே.
சிறு தானிய உணவுகள் உடலுக்கு வெகு விரைவில் புரத , ஊட்ட சத்துக்களை கொடுப்பதில்லை.அவை மெது மெதுவாகத்தான் கொடுக்கும். இதனால் உடலுக்கு சுமை ஏற்படுவதில்லை. அத்துடன் உடலுக்கும் தொடர்ச்சியான நீடித்த ஆற்றல் கிடைக்கும்.
எது வெள்ளையாக இல்லையோ அது உடலுக்கு நல்லது .[ எ.கா ] வெள்ளைச்சீனிக்கு மாற்றாக பழுப்பு நிறமுள்ள நாட்டுச் சர்க்கரை , வெல்லம். தீட்டிய வெண்மையான அரிசிக்கு மாற்றாக பழுப்பும் சிவப்பும் நிறமுள்ள கைக்குத்தல் அரிசி.
கோலா மென் பானங்கள் மறைமுகமாக பழக்கூழ் பானங்களாக ( FRUIT PULP DRINKS ) உரு மாறி வருகின்றது. இது மிக கேடானது. பழங்களை கூழாக்கி சாப்பிடுவதை விட அப்படியே சாப்பிடுவதுதான் நல்லது.
வடிமம் அல்லது பிரித்தெடுக்கப்பட்டது அல்லது தெளிந்த சமையல் எண்ணைகள் { EXTRACTED EDIBLE OILS } புற்று நோய்க்கு தலையாய காரணமாகும். { எ.கா } கசப்பு சுவை நீக்கப்பட்ட நல்லெண்ணை
தேங்காய் மிகச்சிறந்த உணவாகும். சூரிய காந்தி எண்ணையை {SUN FLOWER OIL } மிக வேகமாக பரவலாக்குவதற்காக தேங்காய் எண்ணையை ஒதுக்குகின்றனர். உடலுழைப்பு குறைவாக உள்ளவர்கள் மட்டுமே தேங்காயை குறைவாக பயன்படுத்த வேண்டும்..
சுவைக்காக பசிக்காக சாப்பிடுவது உணவல்ல : உணவே மருந்து மருந்தே உணவு என்ற FUNCTIONAL DIET தான் சிறந்தது.
[முற்றும்]
[முதல் நாள் உரைகள் | இரண்டாம் நாள் உரைகள் | மூன்றாம் நாள் உரைகள்]
தகவல்:
எழுத்து மேடை மையம் |