காயல்பட்டினம் ஈக்கியப்பா தைக்கா - கற்புடையார் பள்ளி வட்டம் இடையிலான தென்வடல் நடைபாதையில், வருவாய்த் துறையினர் நேற்று ஆய்வு மேற்கொண்டனர்.
காயல்பட்டினம் 07ஆவது வார்டுக்குட்பட்ட கற்புடையார் பள்ளி வட்டம் கீழ்ப்பகுதியிலிருந்து கீழ நெய்னா தெரு முனை வரை கிழமேலாகவும், அதுபோல ஈக்கியப்பா தைக்கா முனையிலிருந்து கற்புடையார் பள்ளி வட்டம் முனை வரை தென்வடலாகவும் என “ட” வடிவில் சாலை அமைக்க, காயல்பட்டினம் நகர்மன்றக் கூட்டமொன்றில் தீர்மானிக்கப்பட்டிருந்தது.
அதன்பிறகு நடைபெற்ற நகர்மன்றத்தின் மற்றொரு கூட்டத்தில், ஈக்கியப்பா தைக்கா முதல் கற்புடையார் பள்ளி வட்டம் வரையிலான பாதை தனியாருக்குச் சொந்தமானது என்பதால் அதில் நகராட்சியின் மூலம் சாலை போடக்கூடாது என பல நகர்மன்ற உறுப்பினர்கள் ஆட்சேபித்தனர்.
அந்த நடைபாதை பகுதியை நகராட்சிக்கு தனியார் எழுத்துப்பூர்வமாக அளித்துள்ளதாக 07ஆவது வார்டு உறுப்பினர் ஜெ.அந்தோணி அதே கூட்டத்தில் கூறினார். நடைபாதையின் ஒரு பகுதி மட்டுமே தனியாரால் நகராட்சிக்கு கொடுக்கப்பட்டுள்ளதாகவும், எஞ்சிய பகுதி கொடுக்கப்படவில்லை என்றும் சில உறுப்பினர்கள் கூறினர்.
இந்த விவாதங்களைத் தொடர்ந்து, வருவாய்த்துறை மூலம் ஆய்வு செய்து, அப்பாதையின் உண்மை நிலை குறித்த அறிக்கை பெறப்பட்ட பின், அங்கு புதிதாக சாலை அமைக்கலாம் என தீர்மானிக்கப்பட்டது.
அதனடிப்படையில், இம்மாதம் 24ஆம் தேதி திங்கட்கிழமை (நேற்று) மாலை 03.30 மணியளவில், வருவாய்த்துறை நில அளவீட்டு உதவி ஆய்வாளர் செல்வராஜ், கள அளவீட்டாளர் பேச்சி நாக சுதா ஆகியோர், காயல்பட்டினம் கிராம நிர்வாக அதிகாரி மைக்கேலுடன் வருகை தந்து, ஈக்கியப்பா தைக்கா - கற்புடையார் பள்ளி வட்டம் இடையிலான தென்வடல் பாதையை அளந்து, ஆய்வு மேற்கொண்டனர்.
அவர்களுடன், காயல்பட்டினம் கிராம நிர்வாக அலுவலக உதவியாளர்களான கந்தசாமி, முனுசாமி, 07ஆவது வார்டு நகர்மன்ற உறுப்பினர் ஜெ.அந்தோணி ஆகியோரும் உடனிருந்தனர். |