காயல்பட்டினம் அரசு மருத்துவமனையிலுள்ள குறைகள் 15 நாட்களுக்குள் சரிசெய்யப்படாவிடில், நகர்மன்ற அங்கத்தினர் மற்றும் நகர பொதுமக்களுடன் கலந்து பேசி, மாபெரும் உண்ணாவிரதப் போராட்டத்தை நடத்தப்போவதாக, திருச்செந்தூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன் அறிவித்துள்ளார். விபரம் வருமாறு:-
காயல்பட்டினம் அரசு மருத்துவமனையில் மருத்துவர்கள் நியமிக்கப்படாதது மற்றும் போதிய கருவிகள் இருந்தும் அவை இயக்கப்படாதது குறித்து, பொதுமக்கள் பலர் முறையிட்டதன் பேரில், இன்று காலை 09.30 மணியளவில், திடீரென மருத்துவமனை வளாகத்திற்கு வருகை தந்தார் திருச்செந்தூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன்.
மருத்துவமனையில், வெளி நோயாளிகள் பிரிவு, உள் நோயாளிகள் பிரிவு, ஆய்வகம் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளைப் பார்வையிட்டார்.
உள் நோயாளிகள் பிரிவில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்று வரும் நோயாளிகள் மற்றும் மகப்பேறு பிரிவில் குழந்தை பெற்றுள்ள மகளிர் ஆகியோரை சந்தித்து, சத்துணவுப் பொட்டலங்களை அவர் வழங்கினார்.
பின்னர், மருத்துவமனையின் நடப்பு நிலவரம் குறித்து, தற்காலிகமாக அங்கு மருத்துவராகப் பணியாற்றி வரும் டாக்டர் பாவநாச குமாரிடம் சட்டமன்ற உறுப்பினர் விபரங்களைக் கேட்டறிந்தார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசியபோது அவர் தெரிவித்ததாவது:-
காயல்பட்டினம் அரசு மருத்துவமனையில் 5 மருத்துவர்களுக்கான பணியிடங்கள் இருந்தும், ஒரு மருத்துவர் கூட பணியமர்த்தப்படாமலிருப்பதால், பொதுமக்கள் பெரிதும் அல்லலுற்று வருகின்றனர்...
இங்கு மின் தடையை சமாளிப்பதற்காக, சுமார் 7 மாதங்களுக்கு முன் ஜெனரேட்டர் கருவி வாங்கி வைக்கப்பட்டும், இன்றளவும் அது இயக்கப்படவில்லை...
இந்த மருத்துவமனைக்கென்று சொந்தமாக தரப்பட்டிருந்த ஆம்புலன்ஸ் வாகனம் தற்போது இல்லை. இதுகுறித்து விசாரித்தபோது, தேவைக்கு 108 ஆம்புலன்ஸை வரவழைத்துக்கொள்ளுமாறு அரசின் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாக அறிய முடிகிறது. 108 ஆம்புலன்ஸ் என்பது பொதுமக்களின் அவசர தேவைக்காக ஏற்படுத்தப்பட்டுள்ள ஒன்று. ஆனால் மருத்துவமனைகளைப் பொருத்த வரை நாள்தோறும் ஆம்புலன்ஸ் வாகனத்தின் தேவை உள்ளது.
இக்குறைகள் குறித்து, இப்பகுதி மக்கள் - அவர்களின் சட்டமன்ற உறுப்பினர் என்ற முறையில் என்னிடம் முறையிட்டுள்ளனர். இவற்றை சரிசெய்யக் கோரி, தூத்துக்குடி மாவட்ட ஆட்சியரிடம் முறையிடவுள்ளேன்... அடுத்த 15 நாட்களுக்குள் இக்குறைகள் சரிசெய்யப்படாவிடில், காயல்பட்டினம் நகர்மன்ற அங்கத்தினர் மற்றும் நகர பொதுமக்களைக் கலந்தாலோசித்து, மாபெரும் உண்ணாவிரதப் போராட்டம் அல்லது அவர்களின் ஆலோசனையின் அடிப்படையிலான போராட்டம் ஒன்றை அறிவித்து, சட்டமன்ற உறுப்பினர் என்ற முறையில் நானே முன்னின்று நடத்துவேன்...
இவ்வாறு, திருச்செந்தூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
இந்நிகழ்வின்போது, ரெங்கநாதன் என்ற சுகு, ஏ.ஏ.அபூபக்கர் அஜ்வாத் ஆகிய - காயல்பட்டினம் நகர்மன்ற உறுப்பினர்களும், நகர திமுக செயலாளர் மு.த.ஜெய்னுத்தீன் உள்ளிட்ட கட்சியினரும் உடனிருந்தனர்.
செய்தியாளர்களிடம் அவர் அளித்த பேட்டியின் அசைபடப் பதிவைக் காண இங்கே சொடுக்குக! |