லால்பேட்டை ஜாமிஆ மன்பஉல் அன்வார் அரபிக் கல்லூரியின் 150ஆவது ஆண்டு விழா மற்றும் கல்லூரியின் 69ஆவது பட்டமளிப்பு விழா, இம்மாதம் 22, 23 தேதிகளில், கல்லூரியையொட்டிய ஈத்கா மைதானத்தில் நடைபெற்றது.
‘சமுதாய ஒற்றுமை’ அரசியல் அரங்கம்:
முதல் நாளான ஜூன் 22ஆம் தேதி சனிக்கிழமையன்று, “சமுதாய ஒற்றுமை” என்ற தலைப்பின் கீழ், முஸ்லிம் சமுதாயத்தைச் சேர்ந்த அரசியல் பிரதிநிதிகளின் சிறப்புரைகள் இடம்பெற்றன.
இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தலைவர் பேராசிரியர் கே.எம்.காதர் மொகிதீன், அதன் பொதுச்செயலாளர் கே.ஏ.எம்.முஹம்மத் அபூபக்கர், காயிதே மில்லத் பேரவை சர்வதேச அமைப்பாளரும் - வேலூர் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.அப்துல் ரஹ்மான், மனித நேய மக்கள் கட்சி மூத்த தலைவர் பேராசிரியர் எம்.எச்.ஜவாஹிருல்லாஹ், த.மு.மு.க. தலைவர் மவ்லவீ ஜெ.எஸ்.ரிஃபாயீ ரஷாதீ, இந்திய தேசிய லீக் தலைவர் முஹம்மது சுலைமான், எஸ்.டி.பி.ஐ. தலைவர் மவ்லவீ எம்.தெஹ்லான் பாக்கவீ, பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா தலைவர் ஏ.எஸ்.இஸ்மாயில், சென்னை துறைமுகம் டிரஸ்டி ஜெ.எம். ஹாரூன் ஹஸன் மவ்லானா உள்ளிட்டோர் இந்நிகழ்வில் சிறப்புரையாற்றினர்.
மலர் வெளியீடு:
கல்லூரியின் தலைவர் முஹம்மத் ஆதம், முதல்வர் மவ்லவீ ஏ.நூருல் அமீன் ஆகியோர் கல்லூரியின் 150ஆம் ஆண்டு விழா சிறப்பு மலரை வெளியிட, இந்திய தேசிய லீக் கட்சியின் தலைவர் பஷீர் அஹ்மத் முதல் பிரதியைப் பெற்றுக்கொண்டார்.
பட்டமளிப்பு விழா:
மறுநாள் - ஜூன் 23ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமையன்று கல்லூரியின் 69ஆவது பட்டமளிப்பு விழா நடைபெற்றது.
பெங்களூர் ஸபீலுர் ரஷாத் அரபிக் கல்லூரியின் முதலவர் முஃப்தீ முஹம்மத் அஷ்ரஃப் அலீ தலைமை தாங்கினார். இக்கல்லூரியில் பட்டம் பெற்ற மூத்த மார்க்க அறிஞர்கள், கல்லூரியின் பேராசிரியர்கள், மூத்த அலுவலர்கள் முன்னிலை வகித்தனர்.
இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாநில துணைத் தலைவர் மவ்லவீ ஏ.ஷபீக்குர் ரஹ்மான் மன்பஈ அனைவரையும் வரவேற்றுப் பேசினார்.
கல்லூரி முதல்வர் மவ்லவீ ஏ.நூருல் அமீன், பட்டம் பெறும் மாணவர்களுக்கு ஸனது (பட்டச் சான்றிதழ்) வழங்கினார். மவ்லவீ ஏ.இ.எம்.அப்துர் ரஹ்மான், கல்லூரியின் மூத்த பேராசிரியர் மவ்லவீ அப்துர்ரப் பட்டமளிப்பு பேருரையாற்றினர்.
மவ்லவீ மஸ்ஊத் அஹ்மத் அஸ்னவீ மன்பஈ, மவ்லவீ அப்துஸ் ஷக்கூர் மன்பஈ, மவ்லவீ மஹ்மூதுல் ஹஷன் ரஷாதீ, ஸிராஜுத்தீன் அஹ்மத் ரஷாதீ, நெல்லை மாவட்ட ஜமாஅத்துல் உலமா தலைவர் மவ்லவீ டி.ஜெ.எம்.ஸலாஹுத்தீன் ரியாஜீ, மவ்லவீ எம்.ஸதீதுத்தீன் பாக்கவீ ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.
நிகழ்ச்சிகளை நெறிப்படுத்திய மவ்லவீ எம்.ஒய்.முஹம்மத் அன்ஸாரீ மன்பஈ நன்றி கூற, துஆவுடன் நிகழ்ச்சி நிறைவுற்றது.
இரண்டு நாட்களாக நடைபெற்ற நிகழ்ச்சிகள் அனைத்திலும், அக்கல்லூரியில் மவ்லவீ ஆலிம் மன்பஈ பட்டமும், ஹாஃபிழுல் குர்ஆன் பட்டமும் பெற்ற காயல்பட்டினத்தைச் சேர்ந்த முன்னாள் மாணவர்கள் உட்பட, தமிழகத்தின் பல பகுதிகளைச் சேர்ந்த கல்லூரியின் முன்னாள் மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் பொதுமக்கள் என ஆயிரக்கணக்கானோர் கலந்துகொண்டனர்.
காயல்பட்டினம் ஹாமிதிய்யா மாணவர்களின் நிகழ்ச்சிகள்:
விழாவின் இரண்டு நாட்களிலும், காயல்பட்டினம் ஹாமிதிய்யா மார்க்கக் கல்வி நிறுவனத்தைச் சேர்ந்த மாணவர்களின் பைத் (அரபி பாடல்) நிகழ்ச்சி இடையிடையே நடைபெற்றது
அதுபோல, ஹாமிதிய்யா மார்க்கக் கல்வி நிறுவனத்தின் கவுரவ பேராசிரியரும், இலங்கை - கொழும்பு சம்மாங்கோட் பள்ளியின் இமாமுமான மவ்லவீ நஹ்வீ ஐ.எல்.செய்யித் அஹ்மத் முத்துவாப்பா ஃபாஸீ இயற்றிய - கல்லூரியின் புகழ் கூறும் அரபி பாடலும், ஹாமிதிய்யா மாணவர்களால் பாடப்பட்டது. இந்நிகழ்வின் நிறைவில், பாடலை இயற்றியவருக்கு கல்லூரி நிர்வாகத்தின் சார்பிலும், விழாக்குழுவின் சார்பிலும் நன்றி தெரிவிக்கப்பட்டது.
மன்பஉல் அன்வார் அரபிக் கல்லூரியில் பட்டம் பெற்ற காயலர்களின் பட்டியல்:
இக்கல்லூரியில் பயின்று, இதுவரை ‘மவ்லவீ ஆலிம் மன்பஈ’ மற்றும் ‘ஹாஃபிழுல் குர்ஆன்’ பட்டம் பெற்ற - காயல்பட்டினத்தைச் சேர்ந்த மாணவர்களின் பெயர் பட்டியலும், அவர்கள் பட்டம் பெற்ற ஆண்டும் வருமாறு:-
(01) கே.எம்.எஸ்.ஸதக்கத்துல்லாஹ் (ஹாஃபிழ் பட்டம்) - 1973ஆம் ஆண்டு
(02) எஸ்.ஏ.முஹம்மத் இஸ்மாஈல் (எ) கார்ப்பரேஷன் இஸ்மாஈல் (ஹாஃபிழ் பட்டம்) - 1973ஆம் ஆண்டு
(03) கே.எஸ்.கிழுறு முஹம்மத் (ஹாஃபிழ் பட்டம்) - 1974ஆம் ஆண்டு
(04) எஸ்.முஹம்மத் இப்றாஹீம் (ஹாஃபிழ் பட்டம்) - 1974ஆம் ஆண்டு
(05) ஏ.அஹ்மத் அப்துல் காதிர் (எ) மவ்லவீ எச்.ஏ.அஹ்மத் அப்துல் காதிர் மன்பஈ (ஹாஃபிழ் பட்டம்) - 1977ஆம் ஆண்டு
(06) ஹாஜா முஹ்யித்தீன் (எ) மவ்லவீ எம்.எஸ்.காஜா முஹ்யித்தீன் மஹ்ழரீ (ஹாஃபிழ் பட்டம்) - 1978ஆம் ஆண்டு
(07) ஷேக் அப்துல் காதிர் (ஹாஃபிழ் பட்டம்) - 1978ஆம் ஆண்டு
(08) மவ்லவீ எம்.என்.ஹாமித் பக்ரீ (ஆலிம் மன்பஈ பட்டம்) - 1981ஆம் ஆண்டு
(09) ஏ.ஜாஃபர் ஸாதிக் (எ) மவ்லவீ ஹாஃபிழ் ஜாஃபர் ஸாதிக் மன்பஈ (ஹாஃபிழ் பட்டம்) - 1985ஆம் ஆண்டு
(10) தமீமுல் அன்ஸாரீ (ஹாஃபிழ் பட்டம்) - 1987ஆம் ஆண்டு
(11) ஏ.ஜாஃபர் ஸாதிக் (எ) மவ்லவீ ஹாஃபிழ் ஜாஃபர் ஸாதிக் மன்பஈ (ஆலிம் மன்பஈ பட்டம்) - 1993ஆம் ஆண்டு
(12) ஹலீலுர்ரஹ்மான் (ஹாஃபிழ் பட்டம்) - 1993ஆம் ஆண்டு
(13) ஷேக் ரிழ்வான் (ஹாஃபிழ் பட்டம்) - 1994ஆம் ஆண்டு
மேற்கண்ட காயல்பட்டினத்தைச் சேர்ந்த மாணவர்களுட்பட - இக்கல்லூரியில் இதுவரை பட்டம் பெற்ற 2134 மாணவர்களின் பெயர் பட்டியல், விழாவின்போது வெளியிடப்பட்ட கல்லூரியின் 150ஆம் ஆண்டு விழா சிறப்பு மலரில் இடம்பெற்றுள்ளது.
பொதுவாக, வெளியூர் மாணவர்களுக்கு விடுதி வசதியுடன் உணவு வசதியும் கல்லூரி நிர்வாகங்களின் மூலமே செய்துகொடுக்கப்பட்டிருக்கும். இந்நடைமுறைக்கு மாற்றமாக, லால்பேட்டை மன்பஉல் அன்வார் அரபிக் கல்லூரியில் மட்டும், அது துவங்கப்பட்ட காலம் முதல் இன்றளவும், அங்கு பயிலும் அனைத்து மாணவர்களுக்கும், ஆசிரியர்களுக்கும், உள்ளூர் குடும்பத்தினர் தத்தம் வீடுகளிலிருந்தே நாள்தோறும் பகல் - இரவு என இருவேளை உணவை வழங்கி வருவது சிறப்பம்சமாகும்.
காயல்பட்டினத்தைச் சேர்ந்த மாணவர்கள், வெளியூர் அரபிக் கல்லூரிகளில் மவ்லவீ பட்டமோ, ஹாஃபிழ் பட்டமோ பெற்றுவிட்டால், அவர்கள் ஊர் திரும்பும்போது, அவரவர் மஹல்லா ஜமாஅத் நிர்வாகத்தின் சார்பில் பைத் பாடி நகர்வலமாக அழைத்துச் செல்லப்பட்டு, அந்தந்த பள்ளிவாசல்களில் வரவேற்பு நிகழ்ச்சியும் நடத்தப்படும் வழமை காயல்பட்டினத்தில் இன்றளவும் உள்ளது குறிப்பிடத்தக்கது.
தகவல் & படங்கள் உதவி:
லால்பேட் எக்ஸ்ப்ரஸ்.காம்
மற்றும்
லால்பேட்.நெட்
[கூடுதல் படங்கள் இணைக்கப்பட்டன @ 19:28 / 25.06.2013] |