வரலாற்றுத் தலைவர்களின் அரிய புகைப்படங்கள் வரவேற்கப்படுவதாக, தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் ஆஷிஷ் குமார் தெரிவித்துள்ளார். இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பு:-
நமது நாட்டின் விடுதலைக்காக சொத்து சுகத்தையும், சொந்த பந்தங்களையும் இழந்து போராட்டக் களத்தில் இன்னுயிர் நீத்தவர்கள் ஏராளம். அப்படிப்பட்ட தியாகச் செம்மல்களின் வாழ்க்கை வரலாறுகளை நாம் மட்டுமல்ல; நம்முடைய வருங்கால சந்ததியினரும் அறிந்து கொள்ள வேண்டும் என்ற நோக்கத்துடன் அவர்களது அரிய புகைப்படங்கள் வரவேற்கப்படுகின்றன.
தூத்துக்குடி மாவட்டத்தில் வாழ்ந்த வரலாற்றுத் தலைவர்களான வ.உ.சிதம்பரனார், மகாகவி பாரதியார், அமுதகவி உமறுப்புலவர், வீரன் வெள்ளையத்தேவன், வீரன் சுந்தரலிங்கம், வீரன் அழகுமுத்துக்கோன் போன்ற தலைவர்களின் வாழ்க்கை வரலாற்றை விளக்கும் வகையில் அரிய புகைப்படங்கள், அவர்கள் எழுதிய நூற்கள், பயன்படுத்திய பொருட்கள், அவர்களைப் பற்றிய அரிய தகவல்கள் போன்றவை பொதுமக்கள் யாரிடமாவது இருந்தால் அந்த புகைப்படங்கள் மற்றும் ஆவணங்களை மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலக தரை தளத்தில் இருக்கும் செய்தி மக்கள் தொடர்பு அலுவலகத்தில் நேரடியாக ஒப்படைக்கவோ அல்லது
செய்தி மக்கள் தொடர்பு அலுவலர்,
மாவட்ட ஆட்சியர் அலுவலகம்,
கோரம்பள்ளம்,
தூத்துக்குடி - 628 101
என்ற முகவாpக்கு அனுப்பிவைத்திடவோ கேட்டுக்கொள்ளப்படுகிறது.
இவ்வாறு பெறப்படும் ஆவணங்கள் பெறப்பட்டவரின் முகவரியுடன் - ஓட்டப்பிடாரத்தில் உள்ள வ.உ.சிதம்பரனார் நினைவு இல்லம், எட்டையபுரத்திலுள்ள மகாகவி பாரதியார் நினைவு இல்லம் மற்றும் மணி மண்டபம், அமுதகவி உமறுப்புலவர் மணி மண்டபம், வல்லநாடு வீரன் வெள்ளையத்தேவன் மணி மண்டபம், கவர்ணகிரி வீரன் சுந்தரலிங்கம் மணி மண்டபம், கட்டாலங்குளம் வீரன் அழகுமுத்துக்கோன் மணி மண்டபம் போன்ற தலைவர்களின் நினைவு இல்லம், மணி மண்டபங்களில் பொதுமக்கள் பார்வைக்கு வைக்கப்படும் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்.
இவ்வாறு, அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. |