ஐக்கிய அரபு அமீரகம் - அபூதபீ காயல் நல மன்றம் நடத்திய பொதுக்குழுக் கூட்டம் மற்றும் இஃப்தார் - நோன்பு துறப்பு நிகழ்ச்சியில், காயலர்கள் திரளாகக் கலந்துகொண்டனர்.
இதுகுறித்து, அவ்வமைப்பின் சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கை வருமாறு:-
அன்புடையீர் அஸ்ஸலாமு அலைக்கும்.
அளவற்ற அருளாளன், நிகரற்ற அன்பாளன் அல்லாஹ்வின் திருநாமம் போற்றி...
எமது அபூதபீ காயல் நல மன்றத்தின் சார்பில், பொதுக்குழுக் கூட்டம் மற்றும் இஃப்தார் - நோன்பு துறப்பு நிகழ்ச்சி இம்மாதம் 18ஆம் தேதி - ரமழான் பிறை 09 வியாழக்கிழமையன்று மாலையில், அபூதபீ - அல்ஃபிர்தவ்ஸ் டவர் 3ஆவது மாடியில் அமைந்துள்ள "அரபு உடுப்பி" [ARAB UDUPI]யின் பேன்குவெட் ஹாலில் [Banquet Hall] வல்ல இறைவனின் அருளால் நனிசிறக்க நடைபெற்று முடிந்தது, அல்ஹம்துலில்லாஹ்.
இந்நிகழ்ச்சிக்கு மன்றத் தலைவர் மவ்லவீ ஹாபிஃழ் எம்.ஏ.ஹபீபுர் ரஹ்மான் மஹ்ழரீ தலைமை தாங்கினார். மன்றத்தின் செயற்குழு உறுப்பினர் ஹாஃபிழ் எஃப்.ஷாஹுல் ஹமீத் இறைமறை வசனங்களை ஓதி நிகழ்ச்சியைத் துவக்கி வைத்தார். வந்தோர்களை புனித ரமழான் வாழ்த்துகளுடன் வரவேற்று ரத்தின சுருக்கத்தில் வரவேற்புரையை முடித்தார் மன்றத்தின் செயற்குழு உறுப்பினர் எஸ்.ஏ.சி.ஷாஹுல் ஹமீத்.
அடுத்து, மன்றத்தால் செய்து முடிக்கப்பட்டுள்ள செயல்பாடுகளை கணக்கு மற்றும் புள்ளி விவரங்களுடன் மிக அழகாக பட்டியலிட்டார் மன்றத்தின் துணைச் செயலர் கே.ஹுபைப்.
மன்றத்தின் அதிகமான செயல்பாடுகள் மன்றத்தின் மத்திய நிதியில் இருந்து இல்லாமல் - தனிப்பட்ட முறையில் தனவந்தர்களால் - குறிப்பாக, மன்றத்தின் செயற்குழு உறுப்பினர்களால் முடிகப்பட்டுள்ளதாக தனதுரையில் அவர் தெரிவித்தார்.
தொடர்ந்து உரையாற்றிய மன்றப் பொருளாளர் மவ்லவீ ஹாபிஃழ் எஸ்.எம்.பி.ஹுஸைன் மக்கீ மஹ்ழரீ மற்றும் தலைவர்கள் உள்ளிட்ட நிர்வாகிகள், மன்றத்தின் சார்பில் நகர்நலப் பணிகள் தொய்வின்றி செய்யப்படுவதற்கு முதுகெலும்பாகத் திகழும் உறுப்பினர் சந்தா தொகையை நிலுவையின்றி - குறித்த காலத்தில் அனைத்துறுப்பினர்களும் வழங்கி ஒத்துழைக்குமாறு வலியுறுத்திக் கேட்டுக்கொண்டனர்.
அதனைத் தொடர்ந்து, இஃப்தார் - நோன்பு துறப்பு நிகழ்ச்சி துவங்கியது. அனைவருக்கும் பேரீத்தம்பழம், தண்ணீர், பழ வகைகள், குளிர்பான வகைகள், வடை வகைகள், கறிகஞ்சி உள்ளிட்ட உணவுப் பதார்த்தங்கள் நிறைவாகப் பரிமாறப்பட்டன.
இஃப்தார் நிகழ்ச்சி நிறைவுற்றதும், மஃரிப் தொழுகை ஜமாஅத்தாக (கூட்டாக) நிறைவேற்றப்பட்டது. மவ்லவீ ஹாஃபிழ் நஹ்வீ எஸ்.ஏ. இஸ்ஹாக் லெப்பை மஹ்ழரீ தொழுகையை வழிநடத்தினார்.
பின்னர், பொதுக்குழுக் கூட்டத்தின் இரண்டாம் அமர்வு துவங்கியது. மன்றத்தின் புதிய உறுப்பினர்கள் அனைவருக்கும் அறிமுகம் செய்து வைக்கப்பட்டனர். மன்றப் பணிகளை நிறைவாகச் செய்திடும் பொருட்டு, கூடுதலாக புதிய செயற்குழு உறுப்பினர்களும் இக்கூட்டத்தில் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
நிகழ்ச்சி தலைவர் நன்றி கூற, துஆவுடன் கூட்டம் இனிதே நிறைவுற்றது. எல்லாப்புகழும் அல்லாஹ்வுக்கே - அல்ஹம்துலில்லாஹ்!
நிகழ்வுகள் அனைத்திலும், மன்றத்தின் பொதுக்குழு உறுப்பினர்கள் தம் குடும்பத்தினருடன் திரளாகக் கலந்துகொண்டனர். அனைவருக்கும் பஃபே முறையில் இரவுணவு விருந்துபசரிப்பு செய்யப்பட்டது.
முன்னதாக, நிகழ்விட நுழைவாயிலில் உறுப்பினர் பெயர் பதிவு நடைபெற்றது.
அனைத்து நிகழ்ச்சிகளும் நிறைவுற்ற பின், கலந்துகொண்ட அனைவரும் குழுப்படம் எடுத்துக்கொண்டனர்.
மன்றத்தின் பொதுக்குழுக் கூட்டம் மற்றும் இஃப்தார் - நோன்பு துறப்பு நிகழ்ச்சிகளின் படப்பதிவுகளை https://picasaweb.google.com/101604901676245697608/KwaadIftharParty?authkey=Gv1sRgCIuZgeKsvqTJuQE&feat=email#slideshow/5902650991840003826 என்ற இணையதள பக்கத்தில் தொகுப்பாகக் காணலாம்.
இவ்வாறு, அபூதபீ காயல் நல மன்றத்தின் சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தகவல்:
செய்தித் துறை பொறுப்பாளர்
அபூதபீ காயல் நல மன்றம்.
படங்களில் உதவி:
சுப்ஹான் N.M.பீர் முஹம்மத்
[செய்தியில் சிறு திருத்தம் செய்யப்பட்டது @ 14:47 / 23.07.2013] |