காயல்பட்டினம் கோமான் மேலத் தெரு, நடுத்தெரு, கீழத் தெரு ஆகிய முத்தெருக்களையும் அணைத்தவாறு அமைந்துள்ளது மொட்டையார் பள்ளி.
நாள்தோறும் ஐவேளைத் தொழுகை தவிர, ரமழான் காலங்களில் நாள்தோறும் இஃப்தார் - நோன்பு துறப்பு, இரவு தராவீஹ் தொழுகை உள்ளிட்ட வணக்க வழிபாடுகள் வழமையாக நடத்தப்பட்டு வருகிறது.
இப்பள்ளியின் தலைவராக ஹாஜி எஸ்.எம்.கஸ்ஸாலி, செயலாளராக ஜெ.ஏ.செய்யித் முஹம்மத், பொருளாளராக எம்.ஒய்.காஜா முஹ்யித்தீன் ஆகியோர் சேவையாற்றி வருகின்றனர்.
பள்ளியின் இமாமாக - மேலப்பாளையத்தைச் சேர்ந்த ஹாஃபிழ் வி.எஸ்.எஸ்.முஹ்யித்தீன், பிலாலாக கனீ ஆகியோர் பணியாற்றி வருகின்றனர்.
வழமை போல இவ்வாண்டும், ரமழானை முன்னிட்டு நோன்புக் கஞ்சி ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. நடப்பாண்டில்
வெண்கஞ்சிக்கு ரூபாய் 4000 தொகையும்,
காய்கறி கஞ்சிக்கு ரூபாய் 5,000 தொகையும்,
கறி கஞ்சிக்கு ரூபாய் 6,000 தொகையும்,
பிரியாணி கஞ்சிக்கு ரூபாய் 8,000 தொகையும்
உத்தேசமாக செலவிடப்பட்டு வருகிறது. கஞ்சி ஏற்பாட்டுப் பணிகளையும் பள்ளியின் நிர்வாகக் குழுவினரே கவனித்துக்கொள்கின்றனர்.
நாள்தோறும் மாலையில், இப்பள்ளி ஜமாஅத்திற்குட்பட்ட குடும்பத்தினருக்கும், சுற்றுவட்டார புறநகர் பகுதி மக்களுக்கும் என சுமார் 250 குடும்பத்தினருக்கு நோன்புக் கஞ்சி வினியோகிக்கப்பட்டு வருகிறது.
ரமழான் 12, 27 ஆகிய தினங்களில் பள்ளி நிர்வாகத்தின் சார்பில் பிரியாணி கஞ்சி தயாரிக்கப்படுவதாகவும், இதர நாட்களில் அனுசரணையாளர்கள் விரும்பின் பிரியாணி கஞ்சி தயாரிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இஃப்தார் - நோன்பு துறப்பு நிகழ்ச்சியில் நாள்தோறும் 60 முதல் 100 பேர் வரை பங்கேற்கின்றனர். இப்பள்ளியையொட்டிய பெண்கள் தைக்காவில், பெண்களுக்கும் இஃப்தார் - நோன்பு துறப்பு நிகழ்ச்சி நடத்தப்படுகிறது. இதில் சுமார் 30 பெண்கள் கலந்துகொள்கின்றனர்.
காயல்பட்டினத்திலேயே - இப்பள்ளியிலும், மஸ்ஜிதுத் தவ்ஹீத் பள்ளியிலும் மட்டுமே பெண்களுக்கும் இஃப்தார் - நோன்பு துறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது.
இப்பள்ளியில், இம்மாதம் 18ஆம் தேதியன்று நடைபெற்ற இஃப்தார் - நோன்பு துறப்பு நிகழ்ச்சியின் படப்பதிவுகள் வருமாறு:-
இப்பள்ளியின் கடந்தாண்டு இஃப்தார் - நோன்பு துறப்பு நிகழ்ச்சி குறித்த செய்தியைக் காண இங்கே சொடுக்குக!
இப்பள்ளியின் வரலாறு உள்ளிட்ட முக்கிய தகவல்களை உள்ளடக்கிய செய்தியைக் காண இங்கே சொடுக்குக! |