வழமைபோல, நடப்பாண்டு ரமழான் மாதத்திலும் காயல்பட்டினத்திலுள்ள பள்ளிவாசல்களில் நோன்புக் கஞ்சி ஏற்பாடுகள் நடைபெற்று வருகிறது.
காயல்பட்டினம் கற்புடையார் பள்ளி வட்டத்தில் அமைந்துள்ள கடற்கரை முஹ்யித்தீன் பள்ளியில் ஏற்பாடு செய்யப்படும் நோன்புக் கஞ்சிக்கு அனுசரணையளித்தோருக்கு நன்றி தெரிவித்து, அப்பள்ளி தலைவர் ஜுவெல் ஜங்ஷன் கே.அப்துர்ரஹ்மான், செயலாளர் ‘முத்துச்சுடர்‘ ஹாஜி என்.டி.இஸ்ஹாக் லெப்பை, பொருளாளர் கோமான் மீரான் ஆகியோரிணைந்து வெளியிட்டுள்ள வேண்டுகோள் அறிக்கை பின்வருமாறு:-
அன்பின் அனைத்துலக காயலர்களுக்கு அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி வபரக்காதுஹ்...
இறையருளால், இவ்வாண்டும் புனிதமிக்க ரமழான் மாதத்தில் நமது கடற்கரை முஹ்யித்தீன் பள்ளி நிர்வாகத்தின் சார்பில் வழமை போன்று நோன்புக் கஞ்சி ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது.
நமது இப்பள்ளிவாசலைப் பொருத்த வரை, இதன் சுற்றுப்புறத்தில் வாழும் முஸ்லிம் மக்கள் அனைவரும் பொருளாதாரத்தில் நலிவுற்றுள்ள மீனவ குடும்பத்தினர். எனினும், அவரவர் சக்திக்குட்பட்டு நம் ஜமாஅத்தின் நலத்திட்டப் பணிகளுக்கு உதவி வருகின்றனர்.
நடப்பாண்டு நோன்புக் கஞ்சி ஏற்பாட்டிற்காக அண்மையில் நாங்கள் இணையதளத்தில் செய்தி மூலம் விடுத்த வேண்டுகோளை ஏற்று, பலர் தாமாக முன்வந்து தாராள மனதுடன் அனுசரணையளித்ததன் பலனாக, நடப்பாண்டின் நோன்புக் கஞ்சி ஏற்பாட்டிற்கான தேவை அல்லாஹ்வின் பேரருளால் தற்போது பூர்த்தியாகியுள்ளது.
இவ்வகைக்காக அனுசரணையளித்த அனைத்து சகோதர - சகோதரியருக்கும் எமது கடற்கரை முஹ்யித்தீன் பள்ளி நிர்வாகத்தின் சார்பில் மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம். ஜஸாக்குமுல்லாஹு கைரா...
இப்பள்ளியின் அனைத்துத் தேவைகளுக்கும் தங்களின் மேலான ஒத்துழைப்பை என்றும் போல் தொடர்ந்து வழங்கியுதவ உங்கள் யாவரையும் அன்புடன் வேண்டுகிறோம்.
கருணையுள்ள அல்லாஹ் நம் யாவரின் நற்கருமங்களையும் கபூல் செய்து, ஈருலக நற்பேறுகளை நமக்கு நிறைவாக வழங்கியருள்வானாக, ஆமீன்.
இவ்வாறு, கடற்கரை முஹ்யித்தின் பள்ளியின் தலைவர் ஜுவெல் ஜங்ஷன் கே.அப்துர்ரஹ்மான், செயலாளர் ‘முத்துச்சுடர்‘ ஹாஜி என்.டி.இஸ்ஹாக் லெப்பை, பொருளாளர் கோமான் மீரான் ஆகியோரிணைந்து வெளியிட்டுள்ள வேண்டுகோள் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. |