நகர்நலன் மற்றும் தஃவா சென்டர் வகைகளுக்காக காயல்பட்டினம் - சென்னை வழிகாட்டு மையம் (KCGC) சார்பில் நிதியளிப்பு செய்யப்பட்டுள்ளது.
இதுகுறித்து, அவ்வமைப்பின் செயலாளர் எஸ்.கே.ஷமீமுல் இஸ்லாம் இன்று வெளியிட்டுள்ள அறிக்கை:-
பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம்.
கடந்த ரமளான் மாதம் (21-07-2013) அன்று நடைபெற்ற செயற்குழுக் கூட்டத்தில் KCGCயின் சார்பில் கல்வி, மருத்துவம் உள்ளிட்ட தேவைகளுக்காக உள்ளூர்வாசிகளுக்கு நல உதவி செய்யும் வகையில் மன்ற உறுப்பினர்களிடம் ஜகாத், ஸதக்கா நிதி திரட்டுவது என தீர்மானிக்கப்பட்டிருந்தது. அதற்கான பொறுப்பு KCGCயின் பொருளாளரான சகோ. முஹம்மத் தம்பி (குளம்) அவர்களிடம் ஒப்படைக்கப்பட்டிருந்தது.
அந்த அடிப்படையில், மிகக் குறுகிய காலத்தில் வசூலிக்கப்பட்ட ரூபாய் 1,36,000/- ஜகாத் தொகையை, காயல்பட்டினத்தில் செயல்பட்டு வரும் நல மன்றங்களான இக்ராஃ கல்விச் சங்கம் மற்றும் மைக்ரோகாயல் ஆகியவற்றுக்கு தலா 43,000/- ரூபாயும், முஸ்லிமல்லாதவர்களிடம் இஸ்லாமை எடுத்தியம்புவதற்காக இயங்கி வரும் காயல்பட்டினம் தஃவா சென்டருக்கு 50,000/- ரூபாயும் வழங்கப்பட்டது. புகழ் அனைத்தும் அல்லாஹ்வுக்கே.
இந்நிதியை KCGCயின் செயற்குழு உறுப்பினர்களான சகோதரர்கள் எம்.எம்.இப்றாஹீம், சொளுக்கு முஹம்மத் நூஹ், ‘நெட்காம்’ புகாரீ, KCGCயின் உள்ளூர் பிரதிநிதியான ஹாஜி என்.எஸ்.இ.மஹ்மூது, ஆகியோர் சம்பத்தப்பட்ட அலுவலகங்களுக்குச் சென்று அதனதன் பொறுப்பாளர்களிடம் கையளித்தனர்.
ஷிஃபாவிற்கான தொகை, அதன் அலுவலக மேலாளர் ஹாஜி ஏ.தர்வேஷ் முஹம்மத் அவர்களிடம் கையளிக்கப்பட்டது.
மேலும் KCGCயின் ஷிஃபாவிற்கான ஆண்டுச் செலவு நிதியாகிய ரூ.15000/- தொகையை, அதன் அலுவலகப் பொறுப்பாளரான ஸிராஜ் அவர்களிடம் கையளிக்கப்பட்டது.
மைக்ரோகாயலுக்கான தொகை, அதன் ஒருங்கிணைப்பாளரான சாளை முஹ்யித்தீன் அவர்களிடம் கையளிக்கப்பட்டது.
தஃவா சென்டருக்கான தொகை, அதன் நிர்வாகிகளுள் ஒருவரான ஹாஃபிழ் எம்.ஏ.முஹம்மத் ஃபாயிஸ் அவர்களிடம் கையளிக்கப்பட்டது.
தாராள மனதுடன், நிதியை உடனுக்குடன் வழங்கி ஒத்துழைப்பு நல்கிய KCGC உறுப்பினர்களுக்கு இதன் மூலம் மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்வதோடு, இதேபோன்று KCGCயின் ஒவ்வொரு செயல்பாட்டிலும் முழு ஒத்துழைப்பு வழங்கிடுமாறு மிக்க அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
மேலும் ஈந்துவந்த நல்லுள்ளங்களுக்கு எல்லாம்வல்ல அல்லாஹ், அவர்களின் இச்செயலை ஏற்றுக்கொண்டு நல்லருள் புரிய அனைவரும் பிரார்த்திக்குமாறு இதன்மூலம் கேட்டுக்கொள்கிறோம்.
வல்ல ரஹ்மான் நம் எண்ணங்களைத் தூய்மையாக்கி, நம் செயல்களை வெற்றியாக்கி, ஈருலகிலும் நம் யாவரையும் மேன்மைப்படுத்துவானாக, ஆமீன். வஸ்ஸலாம்.
இவ்வாறு, KCGC செயலாளர் எஸ்.கே.ஷமீமுல் இஸ்லாம் தனதறிக்கையில் தெரிவித்துள்ளார். |