காயல்பட்டினம் கடற்கரையில், வாரந்தோறும் சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் மக்கள் கூட்டம் அதிகமாக இருப்பதால், அந்நாட்களில் கடற்கரையில் தேங்கும் குப்பைகளும் வழமைக்கு மாற்றமாக மிக அதிகளவில் இருக்கும்.
காயல்பட்டினம் நகராட்சியின் மூலம் கடற்கரையில் வாரம் இரு நாட்களோ அல்லது மூன்று நாட்களோ துப்புரவுப் பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. போதிய அளவில் துப்புரவுப் பணியாளர்கள் இல்லாதது இதற்குக் காரணமாகக் கூறப்படுகிறது. தற்காலத் தேவைக்கு இது போதுமானதாக இல்லை என்பதே கடற்கரையைப் பயன்படுத்துவோரின் கருத்தாக உள்ளது.
கடற்கரை நுழைவாயில் உட்பட - காயல்பட்டினம் நகராட்சிக்குட்பட்ட அனைத்துப் பகுதிகளிலும் சில மாதங்களுக்கு முன்பு நவீன குப்பைத் தொட்டி வைக்கப்பட்டுள்ளது. எனினும், கடற்கரைக்கு வந்து செல்வோர் அங்கு வாங்கும் பனிக்கூழ், தின்பண்டங்கள், தேனீர், வடை - பஜ்ஜி வகைகள், நிலக்கடலை உள்ளிட்டவற்றின் கோப்பைகள் மற்றும் காகிதங்களை, சிறிது நேரம் சேகரித்து வைத்து, குப்பைத் தொட்டியில் கொண்டு போட மாய்ச்சல் பட்டு, அவரவர் இருப்பிடங்களிலேயே குப்பைகளை விட்டுச் செல்கின்றனர்.
மறுநாள் கடற்கரைக்கு வரும் பொதுமக்கள், முந்தைய நாளின் குப்பைகளைக் கண்டு - நகராட்சி, பொதுமக்கள் என அனைவரையும் ஆசை தீர திட்டிச் செல்வதோடு, அடுத்த நாள் கடற்கரைக்கு வரும் மக்களின் வசவுகளுக்கு தம்மையும் ஆட்படுத்திச் செல்வது வாடிக்கை.
இம்மாதம் 09ஆம் தேதி வெள்ளிக்கிழமையன்று நோன்புப் பெருநாளை முன்னிட்டு, அன்று மாலையில் காயல்பட்டினம் கடற்கரையில் கடும் கூட்டம் காணப்பட்டது. மக்கள் கடற்கரையை விட்டும் விடைபெற்றுச் சென்றதும், அங்கு தேங்கிய குப்பைகள் கடல் மணலை மறைக்குமளவுக்குக் காட்சியளித்தது. அடுத்தடுத்த இரண்டு நாட்களும் சனி, ஞாயிறு என்பதாலும், பெருநாளுக்கு அடுத்த நாட்கள் என்பதாலும், அந்நாட்களிலும் கிட்டத்தட்ட அதே அளவில் மக்கள் கூட்டம் இருந்தது. இதனால், காயல்பட்டினம் கடற்கரை நேற்று (ஆகஸ்ட் 12ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை) குப்பைகள் நிறைந்து காணப்பட்டது.
தின்பண்டங்களின் இனிப்புச் சுவையுடன் கூடிய குப்பைகளால் கவரப்பட்ட கால்நடைகள், அருகில் மக்கள் இருப்பதை சிறிதும் கருத்திற்கொள்ளாமல் குப்பைகளை அசைபோட்டவண்ணம் இருந்தன.
படங்கள்:
ஹிஜாஸ் மைந்தன்
செய்தியாளர் - காயல்பட்டணம்.காம் |