தூத்துக்குடி மாவட்ட கடலோர பகுதியில் நடந்துள்ள தாது மணல் கொள்ளை தொடர்பாக, வருவாய் துறை செயலாளர் ககன்தீப்சிங் பேடி தலைமையிலான அரசு குழுவினர் இன்று 2வது நாளாக ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். ஆய்வு மேற்கொள்ள வந்த அதிகாரிகளை மீனவர்களை முற்றுகையிட்டு சரமாரியாக புகார் அளித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தூத்துக்குடி மாவட்டம் வேம்பார், வைப்பாறு, பெரியதாழை உள்ளிட்ட பல பகுதிகளில் சட்டவிரோதமாக தாது மணல் அள்ளப்பட்டு வருவதாக கடந்த மாதம் நடந்த மீனவர் குறைதீர்ப்பு நாள் கூட்டத்தின்போது அப்போதைய ஆட்சியர் ஆசிஷ்குமாரிடம் மீனவர்கள் புகார் தெரிவித்தனர். இது குறித்து, டிஆர்ஓ முத்து தலைமையில் ஒரு குழுவை அமைத்து ஆய்வு செய்ய ஆசிஷ்குமார் உத்தரவிட்டார்.
இந்த குழுவினர் வேம்பார் அருகே உள்ள பெரியசாமிபுரம், வைப்பாறு அருகே உள்ள கலைஞானபுரம் உள்ளிட்ட பகுதிகளில் ஆய்வு மேற்கொண்டனர். இதில் விவி மினரல்ஸ் நிறுவனம் சட்டவிரோதமாக அனுமதிக்கப்பட்ட அளவைவிட 2.39 லட்சம் மெட்ரிக் டன் அதிகமாக தாது மணல் அள்ளியிருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இந்த ஆய்வு நடந்த கடந்த 6 ஆம் தேதி நள்ளிரவு ஆட்சியர் ஆசிஷ்குமார் மாற்றப்பட்டார்.
இதற்கிடையே வேம்பார், வைப்பாறு பகுதியில் நடந்துள்ள தாது மணல் கொள்ளை குறித்து விசாரணை நடத்த அரசின் வருவாய் துறை செயலாளர் ககன்தீப்சிங் பேடி தலைமையில் ஒரு சிறப்புக் குழுவை அமைத்து தமிழக அரசு உத்தரவிட்டது. இந்நிலையில், ககன்தீப்சிங் பேடி தலைமையிலான 6 குழுவினர் ஒரே நாளில் 6 இடங்களில் நேற்று சோதனை நடத்தினர்.
இந்நிலையில், இன்று 2வது நாளாக ஆய்வுக்குழு தலைவர் சுகன்தீப்சிங்பேடி தலைமையில் அதிகாரிகள், பெரியதாழை பகுதியில் ஆய்வு மேற்கொண்டனர். மாவட்ட அவர்களுடன் மாவட்ட ஆட்சியர் ரவிகுமார், வருவாய் அலுவலர் முத்து, திருச்செந்தூர் கோட்டாட்சியர் கொங்கன், சாத்தான்குளம் தாசில்தார் மிகாவேல் ஞானதீபம் உட்பட 25 அதிகாரிகள் உடன் சென்றனர். அப்போது ஆய்விற்காக சென்ற அதிகாரிகளை மீனவர்கள் முற்றுகையிட்டு பல்வேறு புகார்களை தெரிவித்தனர்.
சடடவிரோதமாக மணல் அள்ளப்படுவதாகவும், எங்கள் கிராமங்கள் வழியாக அதிக பாரம் ஏற்றிச் செல்லும் மணல் லாரிகளால் அடிக்கடி விபத்துக்கள் ஏற்படுவதாகவும் குற்றம் சாட்டினர். இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதனையடுத்து மீனவர்கள் நாங்களும் ஆய்வு நடக்கும் இடத்திற்கு வர அனுமதிக்க வேண்டு என்று கோரிக்கை வைத்தனர். பெரியதாழை பஞ்சாயத்து தலைவர் மனோகர்வாயிஸ் தலைமையில் 10பேர் மட்டும் அனுமதிக்கப்பட்டனர்.
தகவல்:
www.tutyonline.com |