தாது மணல் முறைகேடு விவகாரம் தொடர்பாக பெரியதாழை கடல் பகுதியில் 3வது நாளாக இன்று சிறப்புக் குழுவினர் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது மீனவர்கள் கூட்டுறவு சங்க தலைவர் அமலன், வருவாய்த்துறை செயலாளர் ககன்தீப்சிங் பேடியிடம் புகார் அளித்தார். அவர் நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தார்.
தூத்துக்குடி மாவட்டத்தில் வைப்பார், வேம்பார், மணப்பாடு, பெரியதாழை பகுதியில் தாது மணல் முறைகேடாக எடுப்பதாக புகார் தெரிவிக்கப்பட்டது. இதனை ஆய்வு செய்ய தமிழக அரசு வருவாய்த்துறை செயலாளர் ககன்தீப்சிங் பேடி தலைமையில் சிறப்புக்குழு நியமித்தது. அதன் அந்த குழுவினர் தூத்துக்குடி மாவட்டத்தில் ஆய்வு பணிகளை மேற்கொண்டு பார்வையிட்டு வருகின்றனர். நேற்று 3வது நாளாக பெரியதாழையில் உள்ள பிஎம்சி மணல் குவாரியில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
இதுவரை வருவாய்த்துறையினரால் பெரியதாழை கடல் பகுதியில் 16 ஹெக்டேர் அளவு நிலங்கள் அளவீடு செய்யப்பட்டுள்ளது. மேலும் பெரியதாழையில் வரையறை எல்லை தெரியாததால் அளவீடை முறையாக செய்து முடிக்குமாறு வருவாய்த்துறையினருக்கு வருவாய்துறை செயலாளர் ககன்தீப்சிங் பேடி உத்தரவிட்டிருந்தார். அதன்பேரில் நில அளவையர் கொண்ட குழுவினர் காலையில் பெரியதாழையில் முகாமிட்டு கடற்கரையோரங்களில் பட்டா நிலம் மற்றும் கடல் பகுதி எது என பிரித்து அளந்து கொடி கட்டினர்.
இந்நிலையில் 11 மணி அளவில் வருவாய்த்துறை செயலாளர் ககன்தீப்சிங் பேடி பெரியதாழைக்கு வருகை தந்து பார்வையிட்டார். கிழக்கு பக்கம் சுமார் 3 கி .மீ தூரம் நடந்து சென்று எல்லை பகுதிகளை பார்வையிட்டார். அப்போது மீனவர்கள் கூட்டுறவு சங்கத் தலைவர் அமலன், எஸ். வி.எம் நற்பணி இயக்க செயலாளர் பிரான்சியூஸ் ஆகியோர் வருவாய்த்துறை செயலாளரை சந்தித்து மனு அளித்தனர்.
அப்போது, அவர்கள் கூறுகையில், இப்பகுதியில் பகல் நேரத்தில் யாரும் மணல் அள்ள வருவதில்லை. இரவு 10 மணி முதல் 4 மணி வரை ராட்சத இயந்திரங்கள் கொண்டு மணல் அள்ளுகின்றனர். இங்கிருந்து 25 மீட்டர் அளவிற்கு தண்ணீரை அவர்களது மணல் கம்பெனிக்கு கொண்டு சென்று தடை செய்யப்பட்ட மோட்டார் மூலம் 4 பிரிவாக பிரித்து கருப்பு நிறமுள்ள மணலை எடுத்து விட்டு மீதமுள்ள கழிவு மணலை கடலில் கொட்டுகின்றனர். இதனால் அப்பகுதியில் ஒரு ஆள் மூழ்கும் அளவிற்கு மணல் தேங்கியுள்ளது. கடற்கரை மேடாகி நாங்கள் அலை அடிக்கும் திசையை பார்த்துதான் கடலுக்குள் செல்ல வேண்டிய நிலை உள்ளது.
மேலும் பைபர் படகில் சென்றால் படகு விபத்தில் சிக்குகிறது. மாதத்திற்கு 15 பேராவது காயமடைவது சகஜமாகிவிட்டது. இதுகுறித்து அதிகாரிகளிடம் புகார் தெரிவித்தும் இதுவரை யாரும் பார்க்க கூட வரவில்லை. மேலும் அருகேயுள்ள புத்தன்தருவை பகுதியில் பல ஏக்கர் அளவில் செம்மணல் எடுக்கப்படுகிறது. அதிலுள்ள கருப்பு மணலை எடுத்து விட்டு கடலில் தான் கொட்டப்படுகிறது. இதனால் நாங்கள் அதிகளவு பாதிக்கப்பட்டு வருகிறோம் . ஆதலால் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.
அவர்களுக்கு பதிலளித்த ககன்தீப்சிங் பேடி, தற்போது இந்த குவாரியில் அனைத்து இடங்களையும் ஒரளவு பார்த்து விட்டேன். நீங்கள் கொடுத்து மனுவின் மீது நடவடிக்கை எடுக்க ஆவன செய்யப்படும். இன்னும் 3 நாள்கள் நான் இங்கேதான் இருப்பேன். எந்த நேரத்திலும் இந்த நிலம் விவகாரம் தொடர்பாக புகார் தெரிவிக்கலாம். இப்போது அதிகாரிகள் இங்கே இருக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இனி 19ஆம்தேதி இதே பகுதியில் ஆய்வு செய்ய உள்ளது என்றார்.
திருச்செந்தூர் ஆர்டிஒ கொங்கன், தாசில்தார் மிகாவேல் ஞானதீபம் உள்ளிட்ட சிறப்புக்குழு அதிகாரிகள் இருந்தனர்.
தகவல்:
www.tutyonline.com
|