தேசிய மக்கள் தொகை கணக்கெடுப்பு முகாம்:
அரசு உத்தரவிட்டுள்ள படி, குடியிருப்போர் அடையாள அட்டை (Resident Identity Card) வழங்குவதற்கான விபரங்கள் பதிவு செய்யும் - தேசிய மக்கள் தொகை கணக்கெடுப்பு முகாம், காயல்பட்டினம் நகராட்சியின் 18 வார்டுகளிலும் படிப்படியாக நடத்த திட்டமிடப்பட்டு, அனைத்து வார்டுகளிலும் விபரங்கள் சேகரிக்கும் பணி நிறைவு பெற்றுள்ளது.
விடுபட்டோருக்கு சிறப்பு முகாம்:
சென்ற நோன்புப் பெருநாளை முன்னிட்டு, வெளியூர் - வெளிநாடு வாழ் பொதுமக்கள் காயல்பட்டினம் வருவதைக் கருத்திற்கொண்டு, இம்மாதம் 08, 09, 10 தேதிகளில், விடுபட்ட பொதுமக்களின் விபரங்களை சேகரிப்பதற்காக சிறப்பு முகாம் நடத்தப்பட்டது. நிர்ணயிக்கப்பட்ட 3 நாட்களில், விடுபட்ட அனைவரின் விபரங்களும் சேகரிக்கப்பட்டு முடிக்கப்படாததால், கூடுதலாக ஒரு நாள் நீட்டிக்கப்பட்டு, இம்மாதம் 11ஆம் தேதியுடன் - காயல்பட்டினத்தில் முகாம் பணிகள் அனைத்தும் முழுமையாக நிறைவு செய்யப்பட்டது.
வழிகாட்டுப் பணிகள்:
18 வார்டுகளிலும் நடைபெற்ற முகாம்கள், விடுபட்டோருக்காக நடத்தப்பட்ட முகாம்கள் அனைத்திற்கான ஒருங்கிணைப்புப் பணிகளையும் நகர்மன்றத் தலைவர் ஐ.ஆபிதா ஷேக் நெறிப்படுத்தினார். அந்தந்த வார்டுகளைச் சேர்ந்த நகர்மன்ற உறுப்பினர்கள் தத்தம் வார்டுகளுக்காக நடைபெற்ற முகாம்களின்போது பொதுமக்களுக்கு வழிகாட்டுப் பணிகளைச் செய்தனர்.
அதுபோல, காயல்பட்டினம் அல்அமீன் இளைஞர் நற்பணி மன்றம், காக்கும் கரங்கள் நற்பணி மன்றம், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாணவரணியான முஸ்லிம் மாணவர் பேரவை, காயிதேமில்லத் இளைஞர் சமூக அமைப்பு, அருணாச்சலபுரம் வட்டார நலக்குழுவினர் ஆகிய அமைப்பினரும் முகாம் வழிகாட்டுப் பணிகளை தொடர்ச்சியாக செய்து முடித்திருந்தனர்.
வழியனுப்பு விழா:
முகாம்களின்போது, விபரங்கள் சேகரிக்கும் பணியைச் செய்து முடித்து, நகரை விட்டும் விடைபெற்றுச் செல்லும் ஊழியர்களை வழியனுப்பி வைப்பதற்காக, காயல்பட்டினம் நகர்மன்றத் தலைவர் ஐ.ஆபிதா ஷேக் ஏற்பாட்டில், இன்று (ஆகஸ்ட் 14) மாலை 05.00 மணியளவில், காயல்பட்டினம் மகுதூம் தெருவிலுள்ள ரஃப்யாஸ் ரோஸரி மழலையர் பள்ளி வளாகத்தில் சிறப்பு நிகழ்ச்சி நடத்தப்பட்டது.
காயல்பட்டினம் நகர்மன்றத் தலைவர் ஐ.ஆபிதா ஷேக் தலைமை தாங்கினார். நகர்மன்ற உறுப்பினர்களான எஸ்.எம்.பி.பத்ருல் ஹக், எம்.எஸ்.எம்.ஷம்சுத்தீன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். எஸ்.கே.ஸாலிஹ் இறைமறை வசனங்களையோதி நிகழ்ச்சிகளைத் துவக்கி வைத்தார்.
நகர்மன்றத் தலைவர் உரை:
வரவேற்புரையைத் தொடர்ந்து, நகர்மன்றத் தலைவர் ஐ.ஆபிதா ஷேக் தலைமையுரையாற்றினார்.
சுமார் 2 மாத காலம் நடைபெற்ற இந்த முகாம் பணிகளின்போது, பல்வேறு சிரமங்களுக்கிடையிலும் பொறுமை காத்து, நகர மக்களின் நடவடிக்கைகளுக்கேற்ப தங்களை மாற்றியமைத்துக்கொண்டு, முகம் சுளிக்காமல் விபரங்கள் பதிவு செய்யும் பணியைச் செய்து முடித்தமைக்காக, முகாம் ஒருங்கிணைப்பாளர்கள் மற்றும் ஊழியர்களுக்கு காயல்பட்டினம் நகராட்சியின் சார்பில் மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக்கொள்வதாகவும், இதர ஊர்களில் அவர்கள் மேற்கொள்ளவிருக்கும் விபரங்கள் சேகரிப்புப் பணிகள் சிறப்புற வாழ்த்துவதாகவும் கூறினார்.
அனைவரும் ஒரே குழுவினராக இணைந்து செயல்பட்டதாலேயே இதனை சாதிக்க முடிந்துள்ளதாகக் கூறிய அவர், நகர்நலனுக்கான அனைத்துப் பணிகளிலும், அனைவரும் இதுபோன்று ஒரே குழுவாக இணைந்து செயலாற்றினால், நகருக்கு அது பல நன்மைகளைப் பெற்றுத் தரும் என்று பேசினார்.
ஒருங்கிணைப்பாளர்கள் உரை:
அடுத்து, முகாம் ஒருங்கிணைப்பாளர்களான ராம்குமார், மணிகண்டன், பாலகிருஷ்ணன் ஆகியோர் உரையாற்றினர்.
இதுவரை தாங்கள் மேற்கொண்ட விபரங்கள் சேகரிப்புப் பணிகளின்போது, அனைத்து ஊர்களிலும் சுமார் 50 முதல் 55 சதவிகிதம் வரை மட்டுமே விபரங்கள் சேகரிக்கப்பட்டுள்ளதாகவும், ஆனால் காயல்பட்டினத்தில் இதுவரை சுமார் 70 சதவிகித பொதுமக்களிடமிருந்து விபரங்கள் சேகரிக்கப்பட்டு்ளளதாகவும், விரைவில் அரசின் சார்பில் - விடுபட்டோருக்காக நடத்தப்படவுள்ள முகாமின்போது இன்னும் 10 சதவிகித பொதுமக்களிடம் விபரங்கள் சேகரிக்க வாய்ப்புள்ளதாகவும் கூறிய அவர்கள், விடுபட்டோருக்காக நோன்புப் பெருநாளையொட்டி இம்மாதம் 08 முதல் 11ஆம் தேதி வரை 4 நாட்கள் நடைபெற்ற முகாமில் மட்டுமே சுமார் 2000 பேரிடம் விபரங்கள் சேகரிக்கப்பட்டுள்ளதாகவும், தற்போதைய நிலவரப்படி, தூத்துக்குடி மாவட்டத்திலேயே காயல்பட்டினம் பொதுமக்களிடம்தான் அதிகளவில் விபரங்கள் சேகரிக்கப்பட்டு - முன்னிலையிலிருப்பதாகவும் மகிழ்ச்சியுடன் தெரிவித்தனர்.
முகாம் நடைபெற்றபோது, சிற்சில தர்க்கங்கள், தவிர்க்கப்பட வேண்டிய சில நிகழ்வுகள் இருந்தாலும், அவையனைத்தையும் தாண்டி இந்த ஊர் பொதுமக்களின் ஒத்துழைப்பு, நகராட்சியின் சார்பில் நகர்மன்றத் தலைவர் - உறுப்பினர்கள் - அதிகாரிகள் - அலுவலர்கள் - ஊழியர்கள் மற்றும் நகர பொதுநல அமைப்பினர் அளித்த ஒத்துழைப்பும், விருந்தோம்பலும் மறக்க முடியாதவை என்று அவர்கள் புகழ்ந்துரைத்தனர்.
வாழ்த்துரை:
பின்னர், நகர்மன்ற உறுப்பினர்கள் எஸ்.எம்.பி.பத்ருல் ஹக், எம்.எஸ்.எம்.ஷம்சுத்தீன் ஆகியோர் முகாம் பணியாளர்களை வாழ்த்திப் பேசினர்.
அவர்களைத் தொடர்ந்து, முகாம்களின்போது வழிகாட்டுப் பணிகளைச் செய்த பொதுநல அமைப்புகளின் பிரதிநிதிகள் பேசினர். அல்அமீன் இளைஞர் நற்பணி மன்றத்தின் சார்பில் அதன் செயலர் கே.எம்.ஏ.முஹம்மத் முஹ்யித்தீன், காக்கும் கரங்கள் நற்பணி மன்றம் மற்றும் முஸ்லிம் மாணவர் பேரவை சார்பில் ஏ.ஆர்.ஷேக் முஹம்மத், ரெட் ஸ்டார் சங்கம் சார்பில் எம்.ஏ.நவ்ஃபல் ரிஸ்வீ ஆகியோர் பேசினர்.
விறுவிறுப்பான தேர்தல் நேரங்களில் கூட 50 முதல் 60 சதவிகிதம் வரைதான் வாக்குப்பதிவு இருக்கும் என்றிருக்கும் நிலையில், இந்த முகாமில் 70 சதவிகித பொதுமக்களிடம் விபரங்கள் சேகரித்து முடிக்கப்பட்டுள்ளதும், இன்னும் பத்து சதவிகித மக்களிடம் விபரங்கள் சேகரிக்கப்பட வாய்ப்புள்ளதாகவும் கூறுவது பாராட்டத்தக்கது என்று அவர்கள் புகழ்ந்து பேசினர்.
பரிசளிப்பு:
பின்னர், முகாம் ஒருங்கிணைப்பாளர்கள், அலுவலர்கள், துணைப்பணியாற்றிய நகராட்சி ஊழியர்களுக்கு சிறப்புப் பரிசு வழங்கப்பட்டது. நகர்மன்றத் தலைவர் மற்றும் பொதுநல அமைப்பினர் பரிசுகளை தம் கைகளால் வழங்கினர்.
பாராட்டுச் சான்றிதழ்:
அதனைத் தொடர்ந்து, முகாம் வழிகாட்டுப் பணிகளைச் செய்த பொதுநல அமைப்பினருக்கு நகர்மன்றத் தலைவர் சார்பில் பாராட்டுச் சான்றிதழ் வழங்கப்பட்டது. நகர்மன்றத் தலைவர் ஐ.ஆபிதா ஷேக் அவற்றை வழங்க, பொதுநல அமைப்பினர் பெற்றுக்கொண்டனர்.
காயல்பட்டினம் நகராட்சியின் சார்பில், அதன் சுகாதார ஆய்வாளர் எஸ்.பொன்வேல் ராஜ் அனைவருக்கும் நன்றி கூறினார்.
பங்கேற்றோர்:
இந்நிகழ்ச்சியில், முகாம் அலுவலர்கள், காயல்பட்டினம் நகராட்சி துப்புரவுப் பணி மேற்பார்வையாளர் லெக்ஷ்மி, காயல்பட்டினம் நகர பொதுநல அமைப்புகளான ரிஸ்வான் சங்கம், அல்அமீன் இளைஞர் நற்பணி மன்றம், காக்கும் கரங்கள் நற்பணி மன்றம், முஸ்லிம் மாணவர் பேரவை, அருணாச்சலபுரம் வட்டார நலக்குழு உள்ளிட்ட பொதுநல அமைப்புகளின் அங்கத்தினர்கள் கலந்துகொண்டனர். அனைவருக்கும் சிற்றுண்டியுபசரிப்பு செய்யப்பட்டது.
குழுப்படம்:
நிறைவில், அனைவரும் குழுப்படம் எடுத்துக்கொண்டனர். (குழுப்படத்தை பெரிதாகக் காண அதன் மீது சொடுக்குக!)
படங்களில் உதவி:
A.R.ஷேக் முஹம்மத் |