அல்ஜாமிஉல் அஸ்ஹர் ஜும்ஆ மஸ்ஜிதுக்கு, தலைவர் - செயலாளர் - பொருளாளர் உள்ளிட்ட புதிய நிர்வாகிகள் ஒருமனதாகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். விபரம் வருமாறு:-
காயல்பட்டினம் அல்ஜாமிஉல் அஸ்ஹர் ஜும்ஆ மஸ்ஜித் நிர்வாகத்திற்கு கடந்த 2009ஆம் ஆண்டு செப்டம்பர் 26ஆம் தேதியன்று, தமிழ்நாடு வக்ஃப் வாரியத்தின் மூலம் தேர்தல் நடத்தப்பட்டு, புதிய நிர்வாகிகள் உட்பட 55 நிர்வாகக் குழு உறுப்பினர்கள் தேர்வு செய்யப்பட்டனர்.
அவர்களின் பொறுப்புக்காலம் நிறைவடைந்துள்ளதையடுத்து, வக்ஃப் வாரியத்தின் சார்பில் புதிதாகத் தேர்தல் அறிவிக்கப்பட்டது.
அதனடிப்படையில், கடந்த செப்டம்பர் மாதம் 24ஆம் தேதியன்று வேட்பு மனு தாக்கல் நடைபெற்றது. 55 உறுப்பினர் பொறுப்பிடங்களுக்கு நடத்தப்பட்ட இத்தேர்தலில் முதலில் 68 பேர் போட்டியிட வேட்பு மனு தாக்கல் செய்திருந்தனர். பின்னர் ஒருவர் தன் மனுவைத் திரும்பப் பெற்றதையடுத்து, “ஒன்றுபட்ட வேட்பாளர்கள்” என்ற தலைப்பில் 55 பேரும், மறுபுறத்தில் 12 பேரும் என மொத்தம் 67 பேர் போட்டியிட்டனர். வேட்பாளர்கள் அனைவருக்கும் இம்மாதம் 01ஆம் தேதி எண் சின்னம் ஒதுக்கப்பட்டது.
இம்மாதம் 13ஆம் தேதி காலை 09.00 மணி முதல் மாலை 04.00 மணி வரை - பரபரப்பான சூழலில் தேர்தல் நடத்தப்பட்டு, அன்று மாலை 05.00 மணி முதல் இரவு 09.40 மணி வரை வாக்குகள் எண்ணப்பட்டு, பின்னர் முடிவுகள் அறிவிக்கப்பட்டது.
இம்முடிவுகளின் படி, பள்ளிக்கு புதிதாக 55 செயற்குழு உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர். அவர்களுக்கான அதிகாரப்பூர்வமற்ற கூட்டம், 14.10.2013 திங்கட்கிழமை (நேற்று) மதியம் 01.00 மணியளவில் நடைபெற்றது.
பள்ளி நிர்வாகத்திற்கு தலைவர், செயலர், பொருளாளர், உள்ளிட்ட நிர்வாகிகளை ஒருமனதாகத் தேர்ந்தெடுப்பது குறித்து இக்கூட்டத்தில் ஆலோசனை மேற்கொள்ளப்பட்டு, அதன் தொடர்ச்சியாக, அவரவர் விருப்பத்தைப் பதிவு செய்ய ரகசிய தாள் வழங்கப்பட்டது.
பின்னர், அன்றிரவு 08.00 மணிக்கு பள்ளியின் செயற்குழுக் கூட்டம் பள்ளியின் மேல்தளத்தில் நடைபெற்றது.
நடப்பு தலைவர் ஹாஜி எஸ்.ஐ.தஸ்தகீர் தலைமையிலும், தமிழ்நாடு வக்ஃப் வாரியத்தின் திருநெல்வேலி மண்டல கண்காணிப்பாளர் வஸீர் அஹ்மத், தூத்துக்குடி மண்டல ஆய்வாளர் செய்யித் வாஜித் ஆகியோர் முன்னிலையிலும் நடைபெற்ற இக்கூட்டத்தில், உறுப்பினர்களுக்கு ஏற்கனவே வழங்கப்பட்டிருந்த ரகசிய தாள்கள் சேகரிக்கப்பட்டு, செயற்குழு உறுப்பினரல்லாத 7 பேரைக் கொண்டு, அதிக உறுப்பினர்களின் விருப்பத்தைப் பெற்ற 9 பேர் நிர்வாகிகளாகத் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
தலைவர்:
துணைத்தலைவர்கள்:
செயலாளர்:
துணைச் செயலாளர்கள்:
பொருளாளர்:
துணைப் பொருளாளர்:
உறுப்பினர்கள் யாருக்கு விருப்பம் தெரிவித்துள்ளனர் என்பது குறித்த தகவல்கள் யாருக்கும் வெளியாகாதிருக்கும் பொருட்டு, பெறப்பட்ட ரகசிய தாள்கள் கூட்ட நிகழ்விடத்திலேயே அனைவர் முன்னிலையிலும் கிழித்தழிக்கப்பட்டது. புதிய நிர்வாகிகள் மற்றும் செயற்குழு உறுப்பினர்கள், பள்ளி மினிட் புத்தகத்தில் கைச்சான்றிட்டனர்.
புதிதாகப் பொறுப்பேற்றுள்ள நிர்வாகிகளுக்கு, விடைபெறும் தலைவர் ஹாஜி எஸ்.ஐ.தஸ்தகீர் வாழ்த்து தெரிவித்ததுடன், உளத்தூய்மையுடன் பள்ளி நிர்வாகத்தைக் கட்டிக்காக்குமாறு அவர்களிடம் கேட்டுக்கொண்டார்.
தன் பொறுப்புக் காலத்தில், அறிந்தோ - அறியாமலோ ஏதேனும் தவறிழைத்திருந்தாலோ, யார் மனதையும் புண்படுத்தியிருந்தாலோ தன்னை மனமுவந்து மன்னிக்குமாறு கண்ணீர் மல்க அவர் கேட்டுக்கொண்டார்.
பின்னர், புதிய நிர்வாகத்தின் முன்னுள்ள பொறுப்புகள் மற்றும் வருங்கால செயல்திட்டங்கள் குறித்து, பள்ளி செயலாளர் ஏ.ஏ.சி.நவாஸ் அஹ்மத், துணைச் செயலாளர் ஹாஜி எல்.கே.கே.லெப்பைத்தம்பி ஆகியோர் விளக்கிப் பேசினர்.
>> அலுவலகம் கணினிமயமாக்கம்
>> கூட்டங்களுக்கு கைபேசி குறுஞ்செய்தி, மின்னஞ்சல் உள்ளிட்ட தற்கால தகவல் தொடர்பு கருவிகள் மூலம் அழைப்பு
>> கூட்டத்தில் நேரில் கலந்துகொள்ளவியலாதோர் ஸ்கைப் போன்ற வீடியோ கான்ஃபரன்ஸிங் மூலம் பங்கேற்றல்
>> ஆண்களுக்கான இஸ்லாமிய கல்லூரி
>> பள்ளிக்கு கூடுதல் கத்தீப் நியமனம்
உள்ளிட்டவை அவர்கள் உரையின் குறிப்பிடத்தக்க அம்சங்கள்.
பின்னர், உறுப்பினர்களின் கருத்துக்கள் கேட்டறியப்பட்டது. நிறைவில், இத்தேர்தலை நன்முறையில் நடத்தித் தந்தமைக்காக வக்ஃப் வாரிய அதிகாரிகளுக்கும், ஒத்துழைத்த அனைவருக்கும் நிர்வாகத்தின் சார்பில் நன்றி தெரிவிக்கப்பட்டு, கஃப்பாரா துஆவுடன் கூட்டம் நிறைவுற்றது.
இக்கூட்டத்தில், அந்நேரம் ஊரிலிருந்த - பள்ளியின் செயற்குழு உறுப்பினர்கள் 45 பேர் கலந்துகொண்டனர்.
கள உதவி:
M.A.அப்துல் ஜப்பார்
படங்களில் உதவி:
ஹாஃபிழ் M.M.முஜாஹித் அலீ
|