சென்ட்ரல் மேனிலைப்பள்ளியின் சார்பில் 81ஆம் ஆண்டு விழா நடத்தப்பட்டு, கல்வி - விளையாட்டில் சாதனை செய்த மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டுள்ளன. இதுகுறித்து, அப்பள்ளியின் சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கை வருமாறு:-
காயல்பட்டினம் சென்ட்ரல் மேனிலைப்பள்ளியின் 81ஆம் ஆண்டு நிறைவு மற்றும் 82ஆம் ஆண்டு துவக்க விழா, இம்மாதம் 12ஆம் தேதி சனிக்கிழமை காலையில், ஜலாலிய்யா நிக்காஹ் மஜ்லிஸில் நடைபெற்றது.
காலை 09.55 மணிக்குத் துவங்கிய விழா நிகழ்ச்சிகளை, ஹாஃபிழ் எம்.ஐ.யூஸுஃப் ஸாஹிப் மற்றும் ஆசிரியர்கள் நெறிப்படுத்தினர். பள்ளி மாணவர் ஹாஃபிழ் வாவு எம்.மொகுதூம் ஃபுஆத் இறைமறை வசனங்களையோதி துவக்கி வைத்தார். தமிழ்த்தாய் வாழ்த்தைத் தொடர்ந்து, பள்ளியின் பொருளியல் ஆசிரியர் முஹம்மத் ஷரீஃப் வரவேற்புரையாற்றினார்.
பள்ளி தலைமையாசிரியர் ஷாஹுல் ஹமீத் - பள்ளியின் ஆண்டறிக்கையை வாசித்தார்.
திருச்செந்தூர் - டாக்டர் சிவந்தி ஆதித்தனார் நர்ஸிங் கல்லூரி செயலாளர் ஆர்.ஏ.சுதர்சன் ரோட்ரிகோ, அண்மையில், தமிழக அரசின் அண்ணா பதக்கம் பெற்ற ஆறுமுகநேரி காவல்துறை ஆய்வாளர் டி.பார்த்திபன் ஆகியோர் இவ்விழாவில் சிறப்பு விருந்தினர்களாகக் கலந்துகொண்டனர். அவர்களுக்கு பள்ளியின் சார்பில் சால்வை அணிவித்து சங்கை செய்யப்பட்டது. அதனைத் தொடர்ந்து, அவ்விருவரும் வாழ்த்துரை வழங்கினர்.
2012-2013 கல்வியாண்டில், பள்ளியின் அனைத்து வகுப்புகளிலிருந்தும் முதல் மூன்றிடங்களைப் பெற்ற மாணவர்களுக்கும், 10ஆம், 12ஆம் வகுப்புகளில் முதல் மூன்றிடங்களைப் பெற்ற மாணவர்களுக்கும் இவ்விழாவில் பரிசுகள் வழங்கப்பட்டன.
பரிசுகளை சிறப்பு விருந்தினர்களும், ஹாஜி எம்.ஏ.செய்யித் முஹம்மத் அலீ, ஹாஜி வாவு எஸ்.அப்துல் கஃப்பார், பள்ளி மேலாளர் ஹாஜி நெய்னா ஸாஹிப், தாளாளர் ஹாஜி வாவு மஸ்னவீ, ஹாஜி வாவு எஸ்.சித்தீக், ஹாஜி எஸ்.ஏ.எம்.முஹ்யித்தீன் தம்பி, ஹாஜி முஹ்யித்தீன் தம்பி துரை, பேராசிரியர் குளம் சதக்கு தம்பி, ஹாஜி ஆர்.எஸ்.அப்துல் கய்யூம் ஆகிய நகரப் பிரமுகர்களும் சாதனை மாணவர்களுக்கு வழங்கினர்.
மேடையில் முன்னிலை வகித்து, பரிசுகளை வழங்கிய நகரப் பிரமுகர்களுக்கும் விழாக்குழுவின் சார்பில் சால்வை அணிவித்து சங்கை செய்யப்பட்டது.
அழைப்பையேற்று, இவ்விழாவை சிறப்பிக்க வருகை தந்த - எல்.கே.மேனிலைப்பள்ளியின் தலைமையாசிரியர் எம்.ஏ.எஃப்.செய்யித் அஹ்மத், அதன் ஆட்சிக்குழு உறுப்பினர் எல்.கே.லெப்பைத்தம்பி ஆகியோருக்கு, பள்ளியின் விழாக்குழு சார்பில் சால்வை அணிவித்து வரவேற்பளிக்கப்பட்டது.
பணியிலிருந்து ஓய்வு பெற்ற பிறகும், தன்னார்வத்துடன் பள்ளியில் பணியாற்றிக்கொண்டிருக்கும் ஆசிரியர் ஷாஹுல் ஹமீத், விரைவில் பணி நிறைவு பெறவிருக்கும் க்ளெர்க் முருகேசன் ஆகியோருக்கு பள்ளி நிர்வாகத்தின் சார்பில் சால்வை அணிவித்து சங்கை செய்யப்பட்டது.
பள்ளி நிர்வாகத்தின் சார்பில், அனைத்து மாணவர்களுக்கிடையில் அண்மையில் நடத்தப்பட்ட விளையாட்டுப் போட்டிகளில் வெற்றிபெற்றோருக்கு இவ்விழாவில் பரிசுகள் வழங்கப்பட்டன.
கடந்த கல்வியாண்டில், பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில், மாணவர்கள் பலர் பாடங்களில் நூறு சதவிகித மதிப்பெண் பெற உறுதுணையாயிருந்த - அப்துல் காதர் கான், செய்யித் அய்யூப் அலீ, ஸலீம், பீர் முஹம்மத் ஹுஸைன், மீராஸாஹிப், நியாஸ் ஆகிய ஆசிரியர்களுக்கும், கடந்த கல்வியாண்டில் விடுமுறையே எடுக்காமல் பணியாற்றியமைக்காக ஆசிரியர் அஹ்மத் சுலைமானுக்கும் பள்ளி நிர்வாகத்தின் சார்பில் ஊக்கப்பரிசுகள் வழங்கப்பட்டன.
பள்ளி விளையாட்டுப் போட்டிகளின்போது நடத்தப்பட்ட - ஆசிரியர்களுக்கான க்ரிக்கெட் போட்டியில் வெற்றிபெற்ற மற்றும் வெற்றிக்கு முனைந்த அணிகளுக்கு கோப்பைகளும், பரிசுகளும் வழங்கப்பட்டன.
பின்னர், பள்ளி மாணவர்களின் கலை நிகழ்ச்சிகள் மேடையில் அரங்கேறின. ஊமை நாடகம், நாடகம், தஃப்ஸ், பாடல்கள் உள்ளிட்ட பல்சுவை நிகழ்ச்சிகள் அதில் இடம்பெற்றிருந்தன.
பள்ளியின் வேதியல் துறை ஆசிரியர் செய்யித் அப்துல் காதிர் நன்றி கூற, நாட்டுப்பண்ணுடன் விழா நிகழ்ச்சிகள் யாவும் இறையருளால் இனிதே நிறைவுற்றன.
இவ்விழாவில், பள்ளியின் நிர்வாகிகள், ஆசிரியர்கள், அலுவலர்கள், மாணவர்கள், பெற்றோர் மற்றும் பொதுமக்கள் திரளாகக் கலந்துகொண்டனர்.
விழா நிறைவில், பள்ளியின் ஆசிரியர்களுடன், முன்னாள் மாணவர்கள் குழுப்படம் எடுத்துக்கொண்டனர்.
[குழுப்படத்தைப் பெரிதாகக் காண அதன் மீது சொடுக்குக!]
இவ்வாறு, சென்ட்ரல் மேனிலைப்பள்ளியின் ஆண்டு விழா நிகழ்ச்சிகள் குறித்து வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தகவல்:
ஆசிரியர் S.M.அஹ்மத் ஸுலைமான்
படங்கள்:
வீனஸ் ஸ்டூடியோ |