மண்டல அளவிலான கால்பந்துப் போட்டியில் வென்றதன் மூலம், மாநில அளவிலான கால்பந்துப் போட்டியில் விளையாட எல்.கே.மேனிலைப்பள்ளியின் சீனியர் பிரிவு அணி மீண்டும் தகுதி பெற்றுள்ளது. விபரம் வருமாறு;-
பள்ளிகளுக்கிடையிலான - மண்டல அளவிலான கால்பந்து போட்டி இம்மாதம் 24ஆம் தேதி வியாழக்கிழமையன்று, பாளையங்கோட்டை அருகிலுள்ள மேலத்தடியூரில், பி.எஸ்.என் பொறியியல் கல்லூரி மைதானத்தில் நடைபெற்றது.
இப்போட்டியில், காயல்பட்டினம் எல்.கே.மேனிலைப்பள்ளியின் சீனியர் பிரிவு அணி, கோவில்பட்டி நாடார் மேனிலைப்பள்ளி அணியுடன் மோதியது. இப்போட்டியில், எல்.கே.மேனிலைப்பள்ளியின் ஃபர்ஹான் என்ற வீரர் ஒரு கோலும், மிஸ்ஹால் என்ற வீரர் இரண்டு கோல்களும் அடித்தனர். எதிரணியினர் 2 கோல்களை அடித்தனர். ஆட்டத்தின் நிறைவில், எல்.கே.மேனிலைப்பள்ளி அணி 3-2 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்று, இறுதிப் போட்டிக்குத் தகுதி பெற்றது.
அன்று மாலையில் நடைபெற்ற இறுதிப் போட்டியில், சேரன்மாதேவி மண்டலத்தில் இருந்து பங்கேற்ற டோனாவூர் சந்தோஷ் வித்யாலயா மேனிலைப்பள்ளி அணியுடன் எல்.கே.மேனிலைப்பள்ளி அணி களம் கண்டது.
முதல் பாதி ஆட்டத்திலேயே எல்.கே. பள்ளி அணியின் பி.ஏ.டி.ஹபீப் ஒரு கோலும், மிஸ்ஹால் இரண்டு கோல்களும் அடித்தனர். எதிரணி 1 கோல் அடித்திருந்தது. ஆட்டத்தின் நிறைவில், 3-1 என்ற கோல் கணக்கில் எல்.கே.மேனிலைப்பள்ளியின் சீனியர் பிரிவு அணி வெற்றி பெற்று, சில மாதங்களில் நடைபெறவுள்ள மாநில அளவிலான கால்பந்துப் போட்டியில் விளையாட தகுதி பெற்றுள்ளது.
மாநில அளவில் விளையாடத் தகுதி பெற்றதைப் பாராட்டி, இவ்வணியினரை, பள்ளியின் நிர்வாகிகள், தலைமையாசிரியர் எம்.ஏ.எஃப்.செய்யித் அஹ்மத் மற்றும் ஆசிரியர்கள் பாராட்டினர்.
தகவல் & படங்கள்:
ஆசிரியர் S.B.B.புகாரீ |