கத்தர் காயல் நல மன்றத்தின் சார்பில், நடப்பாண்டு ஈதுல் அழ்ஹா - ஹஜ் பெருநாளை முன்னிட்டு, பல்வேறு விளையாட்டுப் போட்டிகளுடன் நடத்தப்பட்ட பெருநாள் ஒன்றுகூடல் நிகழ்ச்சியில் உறுப்பினர்கள் ஆர்வத்துடன் பங்கேற்றுள்ளனர்.
இதுகுறித்து, அம்மன்றத்தின் செய்தி தொடர்பாளர் ‘கவிமகன்’ காதர் வெளியிட்டுள்ள அறிக்கை:-
பெருநாள் ஒன்றுகூடல்:
இம்மாதம் 15ஆம் தேதியன்று கத்தர் நாட்டில் ஈதுல் அழ்ஹா - ஹஜ் பெருநாள் கொண்டாடப்பட்டது. பெருநாளை முன்னிட்டு, எமது கத்தர் காயல் நல மன்றத்தின் சார்பில் - அன்று மாலையில் கத்தர் நாட்டின் வக்ரா பூங்காவில் பெருநாள் ஒன்றுகூடல் நிகழ்ச்சி இறையருளால் நடத்தி முடிக்கப்பட்டுள்ளது.
மன்ற செயற்குழு உறுப்பினர் மீரான் கிராஅத் ஓதி நிகழ்ச்சிகளைத் துவக்கி வைத்தார். துணைத் தலைவர் எம்.என்.முஹம்மத் யூனுஸ் அனைவரையும் வரவேற்றுப் பேசினார். பெருநாளை மகிழ்ச்சியுடன் கொண்டாடும் நோக்குடன், கூடுதலாக உரைகள் எதுவுமின்றி நேரடியாக போட்டிகள் துவங்கின.
கயிறிழுக்கும் போட்டி:
துவக்கமாக கயிறிழுக்கும் போட்டி நடைபெற்றது. செய்தி தொடர்பாளர் ‘கவிமகன்’ காதர் தலைமையில் ஓரணியும், துணைத்தலைவர் முஹம்மத் யூனுஸ் தலைமையில் மற்றோர் அணியும் என மன்ற உறுப்பினர்கள் ஈரணியாகப் பிரிந்து கயிறு வடத்தை முழு பலத்துடன் இழுத்தனர்.
ஈரணிகளிலும் உருளையர் அதிகமாக இருந்தமையால், ஓரணிக்கு வெற்றி என்ற நிலை கடைசி வரை எட்டப்படவில்லை. மாறாக கயிறு அறுந்து - கயிற்றுடன் சேர்ந்து ஈரணியினரும் எதிரெதிர் திசைகளில் மொத்தமாக விழுந்தனர்.
தெளிவான முடிவு கிடைக்கப்பெறாத நிலையில், போட்டி சமனில் முடிவுற்றதாகவும், சமனுடைப்பு (டை ப்ரேக்கர்) முறையைக் கையாள வேறு கயிறு இல்லாத காரணத்தால், ஈரணிக்கும் சமமான புள்ளிகளை வழங்கியும் நடுவர் அஸ்லம் போட்டியை நிறைவுபடுத்தினார்.
மஃரிப் தொழுகை:
மஃரிப் வேளையை அடைந்ததையடுத்து, அனைவரும் ஜமாஅத்தாக (கூட்டாக) மஃரிப் தொழுகையை நிறைவேற்றினர். தொழுகையைத் தொடர்ந்து, அனைவருக்கும் காயல்பட்டினம் முறைப்படி சூடான இஞ்சி தேனீர், கடுகு - மசாலாப் பொருட்களுடன் தாளிக்கப்பட்ட சுண்டல், பழரசம் என பலவகை உணவுப் பதார்த்தங்கள் அனைவருக்கும் பரிமாறப்பட்டது.
பொது அறிவு வினாடி-வினா போட்டி:
அடுத்த போட்டியாக வினாடி-வினா (குயிஸ்) போட்டி நடைபெற்றது. ‘கவிமகன்’ காதர் குயிஸ் மாஸ்டராகவும், முஹம்மத் யூனுஸ் உதவியாளராகவும் இருந்து, போட்டியை நடத்தினர்.
இப்போட்டியில் மன்ற உறுப்பினர்கள் 6 அணிகளாகப் பங்கேற்றனர். சரமாரியான கேள்விக் கணைகளுடன், மிகவும் ரசனையோடும், மகிழ்ச்சிப் பெருக்கோடும் இப்போட்டி நடத்தப்பட்டது.
இரண்டு மணி நேர அளவில் நடைபெற்ற இப்போட்டியின் நிறைவில், ஜனாப் ராஃபிக் தலைமையிலான அணி முதலிடத்தையும், சொளுக்கு செய்யித் முஹம்மத் ஸாஹிப் என்ற சேம்ஸா தலைமையிலான அணி இரண்டாமிடத்தையும் பெற்றது.
முதலிடம் பெற்ற அணியில் கத்தீப் மாமுனா லெப்பை, இரண்டாமிடம் பெற்ற அணியில் அஸ்லம் ஆகியோர் - அதிக கேள்விகளுக்கு விடையளித்து அசத்தினர்.
போட்டியின் நிறைவில், வெற்றிபெற்ற அணியினருக்கு டி.வி.டி. ப்ளேயர், எமர்ஜென்ஸி லைட் ஆகிய பரிசுகள் வழங்கப்பட்டன.
இஸ்லாமிய மார்க்க வினாடி-வினா போட்டி:
தொடர்ந்து, இஸ்லாமிய மார்க்கம் தொடர்பான கேள்விகளைக் கொண்ட வினாடி-வினா போட்டி நடைபெற்றது.
மவ்லவீ ஹாஃபிழ் ‘முத்துச்சுடர்’ எஸ்.எம்.எஸ்.முஹம்மத் லெப்பை பாக்கவீ போட்டியை நடத்தினார். கே.வி.எச்.அஹ்மத் தாஹிர் அவருக்கு உதவியாளராகக் கடமையாற்றினார்.
ஐந்து குடும்பத்தினர் பங்கேற்ற இப்போட்டியில், மன்ற செயலாளர் வி.எம்.டி.அப்துல்லாஹ் குடும்பம் முதலிடத்தையும், முன்னாள் பொருளாளர் எம்.ஆர்.ஷாஹுல் ஹமீத் குடும்பம் இரண்டாமிடத்தையும் பெற்றன.
வெற்றிபெற்ற அணியினருக்கு ரைஸ் குக்கர், வாட்டர் கெட்டில் ஆகியன பரிசாக வழங்கப்பட்டன.
பார்வையாளர் குலுக்கல்:
நிறைவில், இந்த ஒன்றுகூடல் நிகழ்ச்சியில் பங்கேற்ற 45 உறுப்பினர்களுள் 10 பேர் குலுக்கல் முறையில் தேர்வு செய்யப்பட்டு, சிறப்புப் பரிசுகள் வழங்கப்பட்டனர்.
‘கவிமகன்’ காதர் நன்றி கூற, துஆவுடன் நிகழ்ச்சி நிறைவுற்றது. நிகழ்ச்சி ஏற்பாடுகளை, ஜனாப் அஸ்லம் தலைமையில், ‘பொக்கு’ ஹுஸைன் ஹல்லாஜ், முஹம்மத் முஹ்யித்தீன் என்ற மம்மி, இசட்.எம்.டி. ஆகியோர் செய்திருந்தனர்.
புதிய உறுப்பினர்கள் அறிமுகம்:
கத்தர் நாட்டிற்கு புதிதாக வந்துள்ள 4 காயலர்கள் மன்றத்தின் புதிய உறுப்பினர்களாக தம்மை சுய அறிமுகம் செய்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.
தலைவர் வாழ்த்து:
ஒன்றுகூடல் நிகழ்ச்சியின்போது, மன்றத் தலைவர் எஸ்.ஏ.ஃபாஸுல் கரீம் துபையிலிருந்தமையால், அங்கிருந்து தொலைபேசி வழியே தனது வாழ்த்துக்களைத் தெரிவித்தார்.
இவ்வாறாக, பெருநாள் மாலைப்பொழுது அனைவர் மனதிலும் மறக்க முடியா நினைவுகளைப் பதித்த நிலையில் கலகலப்புடன் கழிந்தது.
இவ்வாறு, கத்தர் காயல் நல மன்ற செய்தி தொடர்பாளர் ‘கவிமகன்’ காதர் தனதறிக்கையில் தெரிவித்துள்ளார்.
தகவல்:
S.K.ஸாலிஹ்
உள்ளூர் பிரதிநிதி
கத்தர் காயல் நல மன்றம் |