தமிழ்நாடு மாநிலத்திற்கான கால்பந்து உத்தேச அணிக்கு, எல்.கே.பள்ளி மாணவரும் தேர்வு செய்யப்பட்டுள்ளார். விபரம் வருமாறு:-
காயல்பட்டினம் முஹ்யித்தீன் தெருவைச் சேர்ந்த எஸ்.ஐ.முஹம்மத் அலீ அக்பர் என்பவரின் மகன் எம்.ஏ.செய்யித் அப்பாஸ். இவர், காயல்பட்டினம் எல்.கே.மேனிலைப்பள்ளியில் 07ஆம் வகுப்பு பயின்று வருகிறார்.
இம்மாதம் 18ஆம் தேதியன்று, 14 வயதுக்குட்பட்ட பள்ளி மாணவர்களுக்கான – மாவட்டங்களுக்கிடையிலான கால்பந்து அரையிறுதிப் போட்டி நடைபெற்றது. இப்போட்டியில், தூத்துக்குடி மாவட்ட அணிக்காக விளையாடிய எல்.கே.மேனிலைப்பள்ளியின் 8 மாணவர்களுள் எம்.ஏ.செய்யித் அப்பாஸும் ஒருவர். திருச்சி மாவட்ட அணியுடன் தூத்துக்குடி மாவட்ட அணி மோதிய அப்போட்டி சமனில் முடிவுற்றதையடுத்து, சமனுடைப்பு முறை கையாளப்பட்டது. அதில் எல்.கே.மேனிலைப்பள்ளி அணி தோல்வியுற்றது.
மாவட்ட அணிகளுக்கிடையிலான இக்கால்பந்து சுற்றுப்போட்டியில் சிறந்த முறையில் தடுப்பாட்டத்தை வெளிப்படுத்தியதைக் கருத்திற்கொண்டு, மாணவர் எம்.ஏ.செய்யித் அப்பாஸ், தமிழ்நாடு மாநில அணிக்காக தேர்வு செய்யப்பட்ட உத்தேச அணியில், 20 வீரர்களுள் ஒருவராகத் தேர்வு செய்யப்பட்டுள்ளார். இம்மாணவரை, பள்ளி நிர்வாகிகள், தலைமையாசிரியர் மற்றும் ஆசிரியர்கள் பாராட்டினர்.
மாணவர் எம்.ஏ.செய்யித் அப்பாஸின் தந்தை எஸ்.ஐ.முஹம்மத் அலீ அக்பர் - காயல்பட்டினம் ஐக்கிய விளையாட்டு சங்க அணிக்காக பல்லாண்டு காலம் விளையாடிய முன்னாள் வீரர் என்பது குறிப்பிடத்தக்கது. |