காயல்பட்டினம் நகர்மன்றத்திற்கு, 2011ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலையொட்டி, பொதுமக்களுக்கு வழிகாட்டுவதற்காக துவக்கப்பட்டது, “நகர்மன்றத் தேர்தல் வழிகாட்டு அமைப்பு - Municipal Election Guidance Association (MEGA).
தேர்தல் நிறைவுற்ற பின்னரும் ‘மெகா’ அமைப்பு தொடர்ந்து நகரில் இயங்கி மக்கள் நலப்பணிகள் செய்ய வேண்டும் என பொதுநல ஆர்வலர்களிடமிருந்து பெறப்பட்ட ஆலோசனைகளின் அடிப்படையில் இவ்வமைப்பு, “மக்கள் உரிமை நிலைநாட்டல் & வழிகாட்டு அமைப்பு - Mass Empowerment and Guidance Association (MEGA)” என்ற பெயரில் புதிய பரிணாமம் பெற்றது.
இவ்வமைப்பிற்காக, காயல்பட்டினம் தைக்கா பஜாரில் - ஐ.சி.ஐ.சி.ஐ. வங்கியருகில் புதிதாக அலுவலகம் அமைக்கப்பட்டுள்ளது. அலுவலகத் துவக்க விழா, இன்று (அக்டோபர் 23 புதன்கிழமை) காலை 10.30 மணிக்கு நடைபெற்றது.
பொதுமக்கள் தக்பீர் முழங்க, ‘மெகா’ அமைப்பின் சர்வதேச ஒருங்கிணைப்பாளர் சாளை ஸலீம் அலுவலகத்தைத் திறந்து வைத்தார்.
அதனைத் தொடர்ந்து துவக்க விழா நிகழ்ச்சி இறைமறை வசனங்களுடன் துவங்கியது. ‘மெகா’ ஒருங்கிணைப்புக் குழு உறுப்பினர் எம்.டபிள்யு.ஹாமித் ரிஃபாய் நிகழ்ச்சிகளை நெறிப்படுத்தினார். சாளை ஸலீம் வரவேற்புரையாற்றினார்.
நிகழ்ச்சிக்குத் தலைமை தாங்கிய - பொதுநல ஆர்வலர் எஸ்.ஏ.முகைதீன் தலைமையுரையாற்றினார்.
அரசு தொடர்பான அனைத்து வகை தேவைகளுக்கும் ‘மெகா’ வழிகாட்டுப் பணிகளைச் செய்யும் என்றும். நல்ல பணிகளை முன்னின்று செய்வதோடு, தவறுகளைத் தட்டிக்கேட்டு, தவறு செய்வோரை மக்கள் மன்றத்தில் இனங்காட்டும் பணிகளையும் இவ்வமைப்பு செய்யும் என்று அவர் பேசினார்.
அடுத்து, அமைப்பின் உள்ளூர் ஒருங்கிணைப்புக் குழு உறுப்பினர் எஸ்.கே.ஸாலிஹ், ‘மெகா’ குறித்து அறிமுகவுரையாற்றினார்.
நகர்மன்றத் தேர்தலை முன்னிட்டு துவக்கப்பட்ட இவ்வமைப்பு, சென்ற நகர்மன்றத் தேர்தலின்போது, “நகர்மன்றத் தலைமைக்கான வேட்பாளர் அறிமுகக் கூட்டம்” என்ற தலைப்பில் ஒரு பொதுக்கூட்டத்தையும், தேர்தல் நிறைவுற்ற பின்னர், “காயல்பட்டினம் நகர்மன்றம் அடுத்த 5 ஆண்டுகளில்...” என்ற தலைப்பில் ஒரு பொதுக்கூட்டத்தையும் நடத்தியுள்ளதை நினைவுகூர்ந்து பேசினார்.
பொதுநல ஆர்வலர்களின் தொடர் வேண்டுகோளை ஏற்று, ‘மெகா’ என்ற பெயருக்கான விரிவாக்கத்தை மட்டும் மாற்றியமைக்க அதன் அப்போதைய செயற்குழுவில் தீர்மானிக்கப்பட்டு, அதன்படி பெயர் விரிவாக்கம் மாற்றியமைக்கப்பட்டு, தொடர்ந்து இயங்கி வருவதாகக் கூறினார்.
அரசு தொடர்பாக நகர மக்கள் நலன் கருதி, நல்ல தலைமையைத் தேர்ந்தெடுக்கும் விஷயத்தில் முனைப்புடன் செயல்பட்ட இவ்வமைப்பு, நகராட்சியின் மக்கள் நல செயல்பாடுகளுக்கு உறுதுணையாக இருக்க வேண்டியதும், அதற்கு ஏற்படும் இடையூறுகளைத் தகர்த்தெறிய வேண்டியதும் காலத்தின் கட்டாயம் என்று கூறினார்.
அரசுத்துறையினருக்கும், மக்களுக்கும் இடையில் நல்லவற்றுக்குப் பாலமாக இவ்வமைப்பு செயல்படும் அதே வேளையில், அரசுத்துறையினர் மற்றும் மக்கள் பிரதிநிதிகளின் அலட்சியப் போக்கு மற்றும் தவறான நடவடிக்கைகளுக்கு எதிராக களமிறங்கிப் போராடவும், அவ்வாறு செய்வோரை பொதுமக்களுக்கு இனங்காட்டவும் இவ்வமைப்பு தயங்காது என்றும் கூறினார்.
பொதுவாழ்வில் இருப்போர் ஒரு தவறு செய்தால், அவரது செயலை வெறுக்கலாமேயொழிய, செய்தவரையே வெறுப்பது அறிவுக்குப் பொருத்தமற்ற செயல் என்று கூறிய அவர், அனைத்து சமுதாய மக்களுக்கிடையிலும் நல்லிணக்கத்தையும், சகோதர வாஞ்சையையும் மேம்படுத்த எல்லா வகையிலும் பாடுபடும் என்றும், அடுத்த மூன்றாண்டுகளில் நடைபெறவுள்ள நகர்மன்றத் தேர்தலில் நல்ல தலைவரும், அனைத்து வார்டுகளிலும் நல்ல உறுப்பினர்களும் தேர்ந்தெடுக்கப்பட மக்களுக்குத் தேவையான விழிப்புணர்வுப் பரப்புரைகளை இப்போதிலிருந்தே செய்ய வேண்டுமென்றும் அவர் கூறினார்.
எழுத்தாளர்களான சாளை பஷீர், ஹிஜாஸ் மைந்தன் என்ற எம்.என்.எல்.முஹம்மத் ரஃபீக், காயல்பட்டினம் புறநகர் பொதுமக்கள் சார்பில் காளிமுத்து ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.
ஸதக்கத்துல்லாஹ் நன்றி கூற, ஹாஜி கே.ஏ.நூஹ் துஆவுக்குப் பின், ஸலவாத் - கஃப்பாராவுடன் துவக்கி விழா நிகழ்ச்சிகள் நிறைவுற்றன.
இவ்விழாவில், நகரின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த பொதுநல ஆர்வலர்கள் உள்ளிட்ட 50க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்துகொண்டனர்.
படங்களில் உதவி:
A.K.இம்ரான்
[செய்தியில் கூடுதல் தகவல்கள் இணைக்கப்பட்டன @ 21:20 / 23.10.2013] |