தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியத்தின் தூத்துக்குடி மாவட்ட சுற்றுச்சூழல்
பொறியாளர் (DISTRICT ENVIRONMENTAL ENGINEER) கோகுல்தாஸ் நேற்று (அக்டோபர் 22) - காயல்பட்டினம் தென் பாக கிராம எல்லையில் அமைந்துள்ள -
முன்னாள் நகர்மன்றத் தலைவர் ஹாஜி வாவு செய்யத் அப்துர்ரஹ்மானுக்கு சொந்தமான சர்வே எண் 278 இடத்தினை பார்வையிட்டார்.
2009 ஆம் ஆண்டு, இவ்விடத்தை 5 லட்ச ரூபாய் தொகைக்கு, காயல்பட்டினம் நகராட்சிக்கு - குப்பைகள்
கொட்டுவதற்காக தருவதாக முன்னாள் தலைவர் தெரிவித்திருந்தார். இது குறித்து தீர்மானமும் அப்போது நகர்மன்றத்தில் நிறைவேற்றப்பட்டது. CRZ
எல்லைக்குள் இந்த பகுதி அமைந்திருப்பதால், இது குறித்து மேலும் அதிக விபரங்கள் - தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியத்தால் கோரப்பட்டிருந்தது.
கோரப்பட்ட விபரங்கள் வழங்கப்படாத காரணத்தால், இது குறித்த கோப்புகளை, மாசு கட்டுப்பாட்டு வாரியம் - நகராட்சிக்கு திருப்பி
அனுப்பியிருந்தது.
தற்போது தமிழக அரசின் பயோ காஸ் திட்டத்திற்கு தேவையான 25 சென்ட் நிலம், நகராட்சியில் தேடப்பட்டு வருகிறது. இச்சூழலில் கடந்த டிசம்பர் மாதம், காயல்பட்டினம் முஸ்லிம் ஐக்கிய பேரவை மூலம், இதே இடம், முன்னாள் நகர்மன்றத்
தலைவரால் - முன் மொழியப்பட்டது.
சமீபத்தில் சர்வே எண்கள் 278, 334/1, 334/2, 334/12, 334/15 மற்றும் 392/5 ஆகிய இடங்களை ஆய்வு செய்து - மாவட்ட ஆட்சியர் எம்.ரவிகுமார் IAS தனது குறிப்புகளை நகர்மன்றத்திற்கு அனுப்பியிருந்தார். பெருவாரியான உறுப்பினர்கள், பயோ காஸ் திட்டத்திற்கும், நகரின்
குப்பைகளை கொட்டவும் - முன்னாள் நகர்மன்றத் தலைவரின், சர்வே எண் 278 இடத்தினை பயன்படுத்த ஆதரவு தெரிவிக்க, அவ்வாரே தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இக்கூட்டத்தில் சர்வே எண் 392/5 இடத்தில பயோ காஸ் திட்டம் அமைய
நகர்மன்றத்தலைவர் பரிந்துரைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
கடந்த சனிக்கிழமை (அக்டோபர் 19) அன்று நகரில் ஆய்வுகள் மேற்கொண்ட நகராட்சி நிர்வாகத்துறை,
சென்னை அலுவலகத்தின் SUPERINTENDING ENGINEER பூபதியும், சர்வே எண் 278 இல் இத்திட்டங்கள் அமைவதில் உள்ள சிக்கல்களை எடுத்து
கூறினார்.
நேற்று மாசு கட்டுப்பாட்டு வாரிய அலுவலர்கள் சர்வே எண் 278 ஐ ஆய்வு மேற்கொள்ளும்போது - நகர்மன்றத் தலைவர் ஐ. ஆபிதா சேக், ஆணையர் ஜி.அசோக் குமார், சுகாதார ஆய்வாளர் பொன்வேல் ராஜ், 5வது
வார்டு உறுப்பினர் எம். ஜஹாங்கிர், 18 வது வார்டு உறுப்பினர் ஈ.எம். சாமி ஆகியோர் உடனிருந்தனர்.
அப்போது பொறியாளர் கோகுல்தாஸ், பயோ காஸ் திட்டத்திற்கு இவ்விடம் பொருத்தமில்லை என கருத்து தெரிவித்தார். நகரில் இருந்து பல கிலோ
மீட்டர் தூரத்தில் உள்ள இவ்விடத்தில் உற்பத்தியாகும் மின்சாரத்தை, நீண்ட தூரத்திற்கு அனுப்பி வைத்தால், மின் இழப்பு (TRANSMISSION LOSS)
ஏற்படும் என்றும் தெரிவித்தார்.
குப்பைகளை கொட்டும் தேவைக்கு இவ்விடம் முன்னரே விண்ணப்பிக்கப்பட்டு திருப்பி அனுப்பப்பட்டதை நினைவு கூர்ந்த பொறியாளர் கோகுல்தாஸ்,
மீண்டும் இந்த இடத்தை அவ்வகைக்கு பரிந்துரை செய்ய - இப்பகுதி கடலின் உயர்நிலை அலை எல்லையில் (HIGH TIDE LINE - HTL) இருந்து
எவ்வளவு தூரம் உள்ளது என்று நிர்ணயம் செய்து, அதற்கு மேற்கான நிலங்களை - வருவாய் அதிகாரிகளின் துணைக்கொண்டு தனி உட்பிரிவு (SUB
DIVISION) ஏற்படுத்த வேண்டும் என தெரிவித்தார். அதன் பின்னரே - இவ்விடம் குறித்து முடிவுகளை கூற இயலும் எனவும் கூறினார்.
குப்பைகளை கொட்ட தேர்வு செய்யப்படும் இடத்தினை சுற்றி, எந்த வளர்ச்சிப் பணிகளுக்கும் அனுமதி இல்லை (NO DEVELOPMENT BUFFER ZONE)
என நகர்மன்றம் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என மேலும் கோகுல்தாஸ் தெரிவித்தார்.
இந்த விதிமுறையால், முன்னாள் நகர்மன்றத் தலைவர் தர முன்வந்துள்ள 5 ஏக்கர் நிலத்தினை தவிர்த்து - அவரின் இந்த சர்வே எண் (278)
நிலத்தில் உள்ள ஏனைய நிலப்பகுதியிலும், (குப்பைகள் கொட்ட வழங்கப்படும் நிலத்தின் எல்லைகள் எவ்வாறு அமையும் என்ற அடிப்படையில்)
இந்த சர்வே எண்ணை சுற்றியுள்ள பிற சர்வே எண் நிலங்களிலும், எந்த வளர்ச்சிப்பணிக்கும் அனுமதி வழங்கப்படாது என்பது குறிப்பிடத்தக்கது.
இதற்கு முன்னாள் நகர்மன்றத் தலைவரும், இதனால் பாதிக்கப்படும் இதர நில உரிமையாளர்களும் சம்மதம் தெரிவிப்பார்களா என்பதும்
தெளிவில்லை.
[Administrator: செய்தி திருத்தப்பட்டது @ 11:30 am / 23.10.2013] |