திருச்செந்தூர் அருகே, காயல்பட்டினத்தில் இயங்கி வரும் தனியார் ரசாயன ஆலையிலிருந்து வெளியேறும் கழிவுகளால் உப்பளங்கள் பாதிக்கப்பட்டிருப்பதாக அப்பகுதி மக்கள் குற்றம்சாட்டுகின்றனர். தங்களின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகி இருப்பதால் உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு அரசுக்கு அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
காயல்பட்டினம் உப்பளங்களில் இருந்து எடுக்கப்பட்ட நீர், உப்பின் வெண்மை நிறத்தையே மாற்றக்கூடிய அளவிற்கு நிறம் மாறியிருக்கிறது. இதற்கு காரணம் அப்பகுதியில் இயங்கி வரும் தனியார் ரசாயன ஆலையிலிருந்து வெளியேறும் கழிவுகள்தான் என்று அப்பகுதி மக்கள் புகார் தெரிவிக்கின்றனர். இதனால் 5 ஆயிரம் ஏக்கருக்கும் அதிகமான நிலங்கள் பாதிக்கப்பட்டுள்ளதுடன், கழிவுகள் கடலில் கலப்பதால் உப்பு தயாரிக்கும் தொழிலும் பாதிக்கப்படுவதாக கூறப்படுகிறது.
காஸ்டிக் சோடா, திரவ குளோரின், ஹைட்ரோ குளோரிக் அமிலம், வேதிப் பொருட்களைத் தயாரிக்கும் இந்த ஆலையிலிருந்து ஃபெர்ரஸ் ஆக்ஸைடு, துத்தநாகம், காட்மியம், குளோரின் போன்ற வேதிப் பொருட்கள், திரவ மற்றும் வாயுக்கழிவுகளாக வெளியேற்றப்படுகின்றன. குளோரின் வாயு பரவலால், ஆலையைச் சுற்றிலும் 18 கி.மீ சுற்றளவிற்கு பல்வேறு பாதிப்புகள் ஏற்படுவதாக சூற்று சூழுல் ஆர்வலர்கள் கூறுகின்றனர்.
ரசாயன கழிவுகளால் சரும நோய்கள் மட்டுமின்றி, புற்றுநோய் வரும் வாய்ப்பும் இருப்பதாகக் மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர். கடலில் கலக்கும் ரசாயன கழிவுகளால் மீன் வளம் குறைவதாகக் கூறும் மீனவர்கள், கடல்நீரில் இறங்கினால் கால்களில் அரிப்பு ஏற்படுவதாகவும் கூறுகின்றனர்.
கடந்த ஆண்டு ஜூலை மாதம் ஆலையை ஆய்வு செய்த அப்போதைய மாவட்ட ஆட்சியர், ஆலை இயங்க தடை விதிக்குமாறு தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியத்திற்கு பரித்துரை செய்ததாக கூறப்படுகிறது. கழிவுகளை மறுசுழற்சி செய்வதாக உறுதியளித்ததன் பேரில் தொடர்ந்து இயங்கிய ரசாயன ஆலை, அத்திட்டத்தை செயல்படுத்தவில்லை என்பது சமூக ஆர்வலர்களின் புகார். இதுதொடர்பாக சுதந்திரமான குழு அமைத்து விசாரிக்க வேண்டும் என்கிறார் காயல்பட்டினம் நகர்மன்றத் தலைவி ஆபிதா ஷேக்.
இந்த புகார் குறித்து ஆலை நிர்வாகத்திடம் கேட்டபோது, குறைந்த அளவிலானஅமிலத் தன்மை கொண்ட கழிவுகளே வெளியேற்றப்படுவதாகவும், ரசாயனக் கழிவுகளை மறுசுழற்சி செய்யும் திட்டம் விரைவில் தொடங்கப்பட இருப்பதாகவும் பதில் கிடைத்தது.
நன்றி:
புதிய தலைமுறை இணையதளம்
தகவல்:
‘தமிழன்’ முத்து இஸ்மாஈல்
|