அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் காயல்பட்டினம் நகர கிளை சார்பில், அக்கட்சியின் 42ஆம் ஆண்டு துவக்க விழா பொதுக்கூட்டம், இம்மாதம் 19ஆம் தேதி சனிக்கிழமை (நேற்று) மாலை 06.00 மணியளவில், காயல்பட்டினம் வள்ளல் சீதக்காதி திடலில் நடைபெற்றது.
கட்சியின் மாவட்ட சிறுபான்மை நலப்பிரிவு தலைவர் எம்.ஜெ.செய்யித் இப்றாஹீம் கூட்டத்திற்குத் தலைமை தாங்கி தலைமையுரையாற்றினார்.
கட்சியின் மாவட்ட - ஒன்றிய - நகர நிர்வாகிகள் மற்றும் காயல்பட்டினம் நகர்மன்ற உறுப்பினர்களான ஜெ.அந்தோணி, எஸ்.எம்.பி.பத்ருல் ஹக், ஏ.பாக்கியஷீலா, முகம்மது செய்யது பாத்திமா, தைக்கா சாமு சகாப்தீன், இ.எம்.சாமி, முன்னாள் உறுப்பினர்களான ஏ.லுக்மான், நோனா ஜாஃபர், ஏ.கண்ணன் உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர்.
இக்கூட்டத்தில், கட்சியின் மீனவரணி இணைச் செயலாளர் எஸ்.ஜெனிஃபர் சந்திரன், தலைமைக் கழக பேச்சாளர் ஆர்.சின்னையா ஆகியோர் சிறப்புரையாற்றினர்.
கடந்த திமுக ஆட்சியின்போது மக்கள் பணம் வீணடிக்கப்பட்டதாகவும், ஊழல் மலிந்திருந்ததாகவும் பேசிய அவர்கள், தற்போதைய அதிமுக ஆட்சி, மக்களின் எண்ணங்களையும், ஏக்கங்களையும் உணர்ந்து, அதற்கேற்ப திட்டங்களைத் தீட்டி செயல்படுத்தி வருவதாகவும் கூறினர்.
இக்கூட்டத்தில், டி.சி.டபிள்யு. அண்ணா தொழிற்சங்கம் சார்பில் அதன் செயலாளர் இ.கண்ணன், தலைவர் பி.செல்வன், பொருளாளர் பி.ரெங்கநாதன், துணைத்தலைவர் எஸ்.வெங்கடாச்சலம் ஆகியோரும் கலந்துகொண்டனர்.
காயல்பட்டினத்தில் பல இடங்களில் புதிதாக சாலைகள் அமைக்கப்பட்டு வரும் அதே நேரத்தில், தெருக்களில் தெருவிளக்குகள் இல்லாமல் இருண்டு காணப்படுவதாகவும், டி.சி.டபிள்யு. தொழிற்சாலை நிர்வாகத்திடம் கேட்டால் ஊர் முழுக்க விளக்குகளை நிறுவி, ஊரையே ஒளிமயமாக்குவர் என்றும், அதற்கு நகர்மன்றத் தலைவர் ஒத்துழைப்பதில்லை என்றும் கூட்டத்தில் பேசப்பட்டது குறிப்பிடத்தக்கது. |