தேனி நகரில், பள்ளிகளுக்கிடையிலான மாநில அளவிலான கிட்டு கோப்பை கால்பந்து போட்டிகள் இம்மாதம் 12 முதல் 14ஆம் தேதி வரை நடைபெற்றது.
இப்போட்டியில், காயல்பட்டினம் எல்.கே.மேனிலைப்பள்ளியும் கலந்துகொண்டு, இம்மாதம் 13ஆம் தேதி காலை 11.00 மணிக்கு நடைபெற்ற போட்டியில், திண்டுக்கல் செயிண்ட் மேரிஸ் மேனிலைப்பள்ளி அணியை 2-0 என்ற கோல் கணக்கில் வென்று, காலிறுதிக்குத் தகுதி பெற்றது. எல்.கே.பள்ளியின் அஃப்ரஸ், வாஸிஃப் ஆகிய வீரர்கள் தலா ஒரு கோல் அடித்தனர்.
அன்று மாலை 04.00 மணிக்கு நடைபெற்ற காலிறுதிப் போட்டியில் மதுரை அமெரிக்கன் கல்லூரி ஸ்போர்ட்ஸ் ஹாஸ்டல் பள்ளியுடன் எல்.கே.பள்ளி அணி மோதியது. இப்போட்டி சமனில் முடிவுற்றதால், சமனுடைப்பு முறை கையாளப்பட்டு, நிறைவில் 3-2 என்ற கோல் கணக்கில் எல்.கே. பள்ளி அணி வெற்றி பெற்று, அரையிறுதிக்குத் தகுதி பெற்றது.
இம்மாதம் 14ஆம் தேதி காலை 10.00 மணிக்கு நடைபெற்ற அரையிறுதிப் போட்டியில், கிருஷ்ணகிரி ஸ்போர்ட்ஸ் ஹாஸ்டல் அணியுடன் மோதியது எல்.கே.பள்ளி அணி. ஆட்டத்தின் துவக்கம் முதலே சிறப்பான விளையாட்டை வெளிப்படுத்திய அவ்வணி, முதல் பாதியில் தனக்குக் கிடைத்த அழகான இரண்டு கோல் வாய்ப்புகளை நழுவ விட்டது.
இரண்டாவது பாதி ஆட்டத்தில், தமக்குக் கிடைத்த வாய்ப்புகளை சரியாகப் பயன்படுத்திக்கொண்ட எல்.கே.பள்ளி அணியின் அஃப்ரஸ், வாஸிஃப் ஆகிய வீரர்கள் தலா ஒரு கோல் அடித்ததன் மூலம், அவ்வணி 2-0 என்ற கோல் கணக்கில் வெற்றிபெற்று, இறுதிப் போட்டிக்குத் தகுதி பெற்றது.
அன்று மாலையில் நடைபெற்ற இறுதிப் போட்டியில் சென்னை வெஸ்லி அணியுடன் மோதியது எல்.கே.பள்ளி அணி. இப்போ்டியில் 2-1 என்ற கோல் கணக்கில் சென்னை அணி வென்று கோப்பையைத் தட்டிச் சென்றது. எல்.கே.பள்ளி அணிக்கான ஒரு கோலை தாஹிர் என்ற வீரர் அடித்திருந்தார்.
இதன் மூலம், பள்ளி மாணர்களுக்கான கிட்டு கோப்பை மாநில அளவிலான கால்பந்துப் போட்டியில், எல்.கே.பள்ளி அணி இரண்டாமிடம் பெற்றது.
நன்றி:
www.lkschools.org |