ஈதுல் அழ்ஹா ஹஜ் பெருநாளை முன்னிட்டு, காயல்பட்டினம் கடற்கரையில் நேற்று மாலையில் மக்கள் திரள் அதிகளவில் காணப்பட்டது.
சூரியன் மறையத் துவங்கிய நேரத்தில் வானில் கருமேகங்கள் சூழ, அவ்வப்போது இடியொலியும், மின்னலொளியும் வானில் வித்தை காட்டியவண்ணம் இருந்தன. இரவு 07.30 மணியளவில் சிறு தூறலாகத் துவங்கி, 08.00 மணியளவில் சற்றே தீவிரமடைந்தது மழை.
மழையில் நனைந்துவிடுவோம் என அச்சப்பட்ட பொதுமக்கள் ஆங்காங்கே மறைவிடங்களைத் தேடியலைந்தனர். இதனால் கடற்கரையின் வடதென்பகுதிகளிலுள்ள மண்டபங்கள் நிறைந்து காணப்பட்டன.
இது தூறல் மழைதான்... சில நிமிடங்களில் நின்றுவிடும் என்று பொதுமக்கள் கருதிக்கொண்டிருந்த நேரத்தில், திடீரென மழையின் வேகம் அதிகரிக்கவே, பொதுமக்கள் சாரிசாரியாக கடற்கரையை விட்டும் திரும்பிச் செல்லத் துவங்கினர். (மழைக்கு அஞ்சி கடற்கரையை விட்டும் மக்கள் திரும்பிச் சென்ற அசைபடக் காட்சியைக் காண இங்கே சொடுக்குக!)
கடற்கரையிலிருந்தோரில், கிட்டத்தட்ட மூன்றில் இருபங்கு மக்கள் திரும்பிச் சென்றுவிட்ட நிலையில், மழையும் ஓய்ந்தது. வானத்தில் மின்னலின் ஒளிக்கீற்று மட்டும் மழைக்கான முன்னறிவிப்பைச் செய்துகொண்டேயிருந்தது.
இந்நிலையில், நேற்றிரவு 11.45 மணிக்குத் துவங்கி, 12.15 மணி வரை ஓரளவுக்கு நல்ல மழை பெய்தது. இதனால், வழமை போல நகரின் தாழ்வான பகுதிகளிலும், குண்டும் குழியுமான சாலைகளிலும் மழை நீர் தேங்கி காணப்பட்டது.
|