காயல்பட்டினத்தில், இம்மாதம் 16ஆம் தேதி புதன்கிழமையன்று ஈதுல் அழ்ஹா - ஹஜ் பெருநாள் கொண்டாடப்பட்டது.
அன்று காலையில் காயல்பட்டினத்தின் அனைத்து பள்ளிவாசல்கள் - பெண்கள் தைக்காக்களில் பெருநாள் தொழுகை மற்றும் குத்பா பேருரைகள் நடைபெற்றன. நிறைவில், அனைவரும் ஒருவரையொருவர் கட்டித் தழுவி, கைலாகு செய்து தமக்கிடையில் வாழ்த்துக்களைத் தெரிவித்தவர்களாக மகிழ்ச்சியைப் பரிமாறிக் கொண்டனர்.
அவர்கள் தம் நெருங்கிய - தூரத்து உறவினர்களின் இல்லங்களுக்குச் சென்று, அங்கிருந்தோருக்கு பெருநாள் வாழ்த்துக்களைத் தெரிவித்து, சிறுவர் - சிறுமியருக்கு அன்பளிப்புப் பொருட்களை வழங்கி மகிழ்வித்தனர்.
நேற்று மாலையில், தம் நண்பர்கள் புடைசூழ காயல்பட்டினம் கடற்கரைக்கு வந்த பொதுமக்கள், அங்குள்ள மணற்பரப்பில் அமர்ந்தவாறு, ஊர்க்கதைகள் பேசி, உணர்வுகளைப் பகிர்ந்துகொண்டு, கிடைக்கும் தின்பண்டங்களை வாங்கி, இணைந்தமர்ந்து கொறித்தனர்.
கூட்ட நெரிசலைக் கருத்திற்கொண்டு, கடற்கரைக்குச் செல்லும் பொதுமக்களுக்கு போக்குவரத்து இடையூறின்றி இருப்பதற்காக, ஆறுமுகநேரி காவல்துறையினர் ஸீ-கஸ்டம்ஸ் சாலை – சொளுக்கார் தெரு சந்திப்பு மற்றும் ஸீ-கஸ்டம்ஸ் சாலை – கொச்சியார் தெரு சந்திப்பில் வாகனங்களைத் தடுத்து நிறுத்தி, போக்குவரத்து நெரிசல் ஏற்படாதவாறு வாகனங்களை நிறுத்தச் செய்தனர்.
அக்டோபர் 16 - பெருநாளன்று மாலையில் கடற்கரையில் பதிவு செய்யப்பட்ட காட்சிகள் பின்வருமாறு:-
பெருநாள் மாலையில் கடற்கரையில், மட்டன் கபாப், பஞ்சு மிட்டாய், வடை - கறி கஞ்சி, மஞ்சள் மிட்டாய் (ஜாங்கிரி) உள்ளிட்ட கடைகளும், பெண்கள் அழகு பொருட்கள் விற்பனைக் கடைகளும் நிறைய அமைக்கப்பட்டிருந்தன.
கடற்கரையில் மக்கள் திரள் அதிகளவில் இருந்தமையால், அங்குள்ள - குருவித்துறைப் பள்ளிக்குச் சொந்தமான முஸல்லாவில் (தொழுமிடத்தில்) 8 முறை மஃரிப் தொழுகை ஜமாஅத்தாக (கூட்டாக) நடத்தப்பட்டது.
உத்தரப்பிரதேச மாநிலம் முஸஃப்பர் நகரில், அண்மையில் நடைபெற்ற கலவரத்தில் பாதிக்கப்பட்ட முஸ்லிம் மக்களுக்காக, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் காயல்பட்டினம் நகர கிளை சார்பில், கடற்கரை நுழைவாயிலில் நன்கொடை வசூலிக்கப்பட்டது.
களத்தொகுப்பு & படங்கள்:
ஹிஜாஸ் மைந்தன்
செய்தியாளர் - காயல்பட்டணம்.காம்
கடந்தாண்டு (ஹிஜ்ரீ 1433) ஹஜ்ஜுப் பெருநாளன்று மாலை கடற்கரை காட்சிகள் குறித்த தகவல்களடங்கிய செய்தியைக் காண இங்கே சொடுக்குக!
[Administrator: செய்தி திருத்தப்பட்டது @ 9:15 am/18.10.2013] |