சிங்கப்பூரில் நடைபெற்ற காயலர் பெருநாள் ஒன்றுகூடல் நிகழ்ச்சியில், நகர்நலனுக்காக ரூபாய் 1 லட்சத்து 10 ஆயிரம் நன்கொடையாக சேகரிக்கப்பட்டுள்ளது. நிகழ்ச்சி குறித்து, அம்மன்றத்தின் செயலாளர் எம்.எம்.மொகுதூம் முஹம்மத் வெளியிட்டுள்ள அறிக்கை:-
சிங்கப்பூர் நாட்டில், இம்மாதம் 15ஆம் தேதி செவ்வாய்க்கிழமையன்று ஈதுல் அழ்ஹா - ஹஜ் பெருநாள் கொண்டாடப்பட்டது.
பெருநாள் ஒன்றுகூடல்:
பெருநாளை முன்னிட்டு வழமை போல இவ்வாண்டும், சிங்கப்பூர் Bedok பகுதியிலுள்ள – மன்ற ஆலோசகர் ஹாஜி பாளையம் முஹம்மத் ஹஸன் இல்லத்தில், அவர் மற்றும் அவரது சகோதரர் ஹாஜி பாளையம் ஹபீப் முஹம்மத் ஆகியோரின் ஏற்பாட்டில், பெருநாள் ஒன்றுகூடல் நிகழ்ச்சி, அன்று மாலையில் நடத்தப்பட்டது.
மஃரிப் தொழுகை:
மாலை 18.30 மணியளவில், சிங்கப்பூர் வாழ் காயலர்கள் அனைவரும் தம் குடும்பத்தினருடன் நிகழ்விடம் வந்தடைந்தனர். துவக்கமாக, 17.05 மணிக்கு மஃரிப் தொழுகை - ஜமாஅத்தாக (கூட்டாக) நிறைவேற்றப்பட்டது.
மகிழ்ச்சிப் பரிமாற்றம்:
நீண்ட நாட்களுக்குப் பின் ஓரிடத்தில் ஒன்றுகூடியதால், காயலர்கள் அனைவரும் மிகுந்த மகிழ்ச்சியுடன் காணப்பட்டனர். அவர்கள் கட்டித்தழுவி, கைலாகு செய்து, தமக்கிடையில் வாழ்த்துக்களைக் கூறியவர்களாக மகிழ்ச்சியைப் பரிமாறிக்கொண்டனர்.
சிறப்பு விருந்தினர்கள்:
இந்த ஒன்றுகூடல் நிகழ்ச்சியில், இலங்கை காயல் நல மன்ற (காவாலங்கா) தலைவர் ஹாஜி எம்.எஸ்.ஷாஜஹான், இலங்கையிலிருந்து வந்திருந்த ஹாஜி இஸ்மத் ஷாஜஹான், ஹாங்காங்கிலிருந்து வந்திருந்த ஹாஜி அஹ்மத், சீனா - சென்ஜென் நகரிலிருந்து வந்திருந்த ஹாஜி எஸ்.ஏ.கே.காதர் சாமுனா மற்றும் ஹாஜி கே.வி.எஸ்.ஏ.ஹபீப் முஹம்மத் ஆகியோர் இந்நிகழ்வில் சிறப்பு விருந்தினர்களாகக் கலந்துகொண்டனர்.
வரவேற்புரை & திருமண அழைப்பு:
துவக்கமாக, ஹாஜி பாளையம் ஹபீப் முஹம்மத் அனைவரையும் வரவேற்றுப் பேசினார். தமது அழைப்பையேற்று, தங்களது பல்வேறு பணிகளுக்கிடையிலும் இந்த ஒன்றுகூடல் நிகழ்ச்சியில் குடும்ப சகிதமாக உற்சாகத்துடன் கலந்துகொண்டமைக்காக அனைவருக்கும் நன்றி கூறிய அவர், தனது மற்றும் தனது சகோதரர் ஹாஜி பாளையம் முஹம்மத் ஹஸன் ஆகியோரது மக்களுக்கு, வரும் டிசம்பர் மாதம் நடைபெறவுள்ள திருமண - நிகாஹ் நிகழ்ச்சியில் அனைவரும் கலந்துகொண்டு சிறப்பிக்குமாறு அழைப்பு விடுத்ததோடு, அழைப்பிதழ்களையும் அனைவருக்கும் வழங்கினார்.
காவாலங்கா தலைவர் வாழ்த்துரை:
அடுத்து, இலங்கை காயல் நல மன்ற (காவாலங்கா) தலைவர் ஹாஜி எம்.எஸ்.ஷாஜஹான் உரையாற்றினார்.
அனைவருக்கும் பெருநாள் வாழ்த்துக்களைக் கூறிய அவர், சிங்கப்பூர் காயல் நல மன்றத்தின் திட்டமிடப்பட்ட சிறப்பான செயல்பாடுகள் தன்னை பெரிதும் கவர்ந்துள்ளதாகக் கூறினார். சிங்கப்பூர் நாட்டு வாழ்க்கை முறை குறித்து பயனுள்ள பல தகவல்களையும், ஆலோசனைகளையும் உள்ளடக்கியதாக அவரது அழகிய உரை அமைந்திருந்தது.
நன்கொடை நிதி சேகரிப்பு:
இந்த ஈதுல் அழ்ஹா - ஹஜ் பெருநாள் ஒன்றுகூடல் நிகழ்ச்சியை முன்னிட்டு, அனைவருக்கும் வெற்று வெள்ளுறை (Blank white cover) வழங்கப்பட்டது. அதில், அனைத்து காயலர்களும் தமது பொருளாதார நன்கொடையை ஆர்வத்துடன் செலுத்தி, பொறுப்பாளர்களிடம் சமர்ப்பித்தனர். இதன்மூலம், சிங்கப்பூர் காயல் நல மன்றத்தின் நகர்நலப் பணிகளுக்காக ரூபாய் 1 லட்சத்து 10 ஆயிரம் தொகை நன்கொடையாக சேகரிக்கப்பட்டது.
பல்வேறு தேவைகளை முன்னிறுத்தி விண்ணப்பிக்கும் - தாயகம் காயல்பட்டினத்தின் ஏழை - எளியோர் நலனுக்காக இந்நிதி பயன்படுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டு, தாராள மனதுடன் இதற்காக நன்கொடை வழங்கிய அனைவருக்கும் நன்றி தெரிவிக்கப்பட்டது.
இஷா தொழுகை & இரவுணவு விருந்துபசரிப்பு:
இரவு 20.45 மணியளவில் இஷா தொழுகை ஜமாஅத்தாக (கூட்டாக) நிறைவேற்றப்பட்டது. பின்னர் பஃபே முறையில் அனைவருக்கும் இரவுணவு விருந்துபசரிப்பு செய்யப்பட்டது.
ஏற்பாட்டாளர்களுக்கு நன்றி:
அனைத்து நிகழ்வுகளிலும், சிங்கப்பூர் காயல் நல மன்ற உறுப்பினர்கள், அவர்கள்தம் குடும்பத்தினர், சிறப்பழைப்பாளர்கள் என சுமார் 100 பேர் பங்கேற்றனர். அவர்கள் நிகழ்விடத்திலிருந்து விடைபெறுகையில், பெருநாளன்று அனைவரையும் ஓரிடத்தில் ஒன்றுகூட்டி, மகிழ்ச்சிகளைப் பரிமாறிக்கொள்ள வாய்ப்பு ஏற்படுத்தித் தந்தமைக்காக, ஏற்பாட்டாளர்களான ஹாஜி பாளையம் ஹபீப் முஹம்மத், ஹாஜி பாளையம் முஹம்மத் ஹஸன் ஆகிய பாளையம் சகோதரர்களுக்கு மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக்கொள்வதாகக் கூறியவர்களாக வசிப்பிடம் திரும்பிச் சென்றனர்.
இவ்வாறு, சிங்கப்பூர் காயல் நல மன்ற செயலாளர் எம்.எம்.மொகுதூம் முஹம்மத் தனதறிக்கையில் தெரிவித்துள்ளார்.
சிங்கப்பூரில் கடந்தாண்டு (ஹிஜ்ரீ 1433) ஹஜ் பெருநாளை முன்னிட்டு நடைபெற்ற காயலர் ஒன்றுகூடல் நிகழ்ச்சி குறித்த தகவல்களடங்கிய செய்தியைக் காண இங்கே சொடுக்குக! |