காயல்பட்டினம் ஐக்கியப் பேரவை - ஹாங்காங் அமைப்பின் சார்பில் நடத்தப்பட்ட தியாகத் திருநாள் ஒன்றுகூடல் நிகழ்ச்சி மழலையரின் மனங்கவர் நிகழ்ச்சிகளுடன் நடைபெற்று முடிந்துள்ளது. இதுகுறித்து, அவ்வமைப்பின் சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கை:-
ஹாங்காங் நாட்டில், இம்மாதம் 16ஆம் தேதி (ஹிஜ்ரீ 1434 துல்ஹஜ் பிறை 10 அன்று) புதன்கிழமையன்று ஈதுல் அழ்ஹா - ஹஜ் பெருநாள் கொண்டாடப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்.
அதனை முன்னிட்டு, நமதூர் மக்கள் அனைவரையும் ஒன்றாகக் காணச் செய்து, மகிழ்ச்சியைப் பரிமாறிக் கொள்வதற்காக, கடந்தாண்டுகளைப் போல இவ்வாண்டும் நமது காயல்பட்டினம் ஐக்கியப் பேரவை - ஹாங்காங் அமைப்பின் சார்பில், பெருநாள் ஒன்றுகூடல் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
பெருநாள் கொண்டாடப்பட்ட 16.10.2013 புதன்கிழமையன்று இரவில், ஹாங்காங்கிலுள்ள East Tsim Sha Tsui பூங்காவில் ஒன்றுகூடல் நிகழ்ச்சி நடைபெற்றது.
இஷா ஜமாஅத்துடன் துவங்கிய இந்நிகழ்ச்சியை ஹாஃபிழ் ஏ.எச்.ஷாஹுல் ஹமீத் நுஅய்ம் கிராஅத் ஓதி துவக்கி வைத்தார். ஹாஃபிழ் வி.எம்.டி.முஹம்மத் ஹஸன் அனைவரையும் வரவேற்றுப் பேசியதோடு, நிகழ்ச்சிகளையும் நெறிப்படுத்தினார்.
ஜனாப் ஏ.எஸ்.ஜமால் என்ற ஜமால் மாமா, ஜனாப் ஹாஜா அரபி ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். இதுபோன்ற ஒன்றுகூடல் நிகழ்ச்சிகளின் அவசியம், அனைவருக்கிடையிலும் இருக்க வேண்டிய ஒற்றுமை, அமைப்பின் நோக்கம், கல்வியின் முக்கியத்துவம், பொதுச் சேவையில் ஈடுபட வேண்டியதன் அவசியம், பிறருக்கு உதவுவதன் நன்மைகள் போன்ற பல விஷயங்கள் குறித்து, நகைச்சுவையோடும், நல்லுபதேசமாகவும் பேசினர்.
தொடர்ந்து, அமைப்பின் செயற்குழு உறுப்பினர் - இறையில்லப் பொறியாளர் ஜனாப் செய்யித் அஹ்மத், “ஐக்கியப் பேரவையின் செயல்பாடுகளும், ஷிஃபா குறித்த அறிமுகமும்” எனும் தலைப்பில் பேசினார்.
தொடர்ந்து, மழலைச் செல்வங்களின் மனங்கவர் நிகழ்ச்சிகள் நடைபெற்றன. திருமறையோதல், இஸ்லாமிய இன்னிசை கீதங்கள் உள்ளிட்ட பல்சுவை நிகழ்ச்சிகளை - கொஞ்சும் மழலை மொழியில் தந்தது, கேட்போர் காதில் தேனாய்ப் பாய்ந்து, மகிழ்ச்சியில் ஆழ்த்தியது.
மேலும், இவ்வாண்டு குழந்தைகளுக்காக பல வண்ணங்களில், பல வகைகளில், பல வடிவங்களில் - அதற்கான சிறப்பு நிபுணரால் தயாரித்து வழங்கப்பட்டது.
குழந்தைகள் விரும்பிய வண்ணங்களிலும், வடிவங்களிலும் பலூன்களை உடனுக்குடன் செய்து கொடுத்தது, அவர்களை மகிழ்ச்சியின் உச்சத்திற்கே கொண்டு சென்றது. இந்த மகிழ்ச்சியை மழலையருக்கு அளிப்பதற்காகவென்றே இந்த ஏற்பாடு பேரவையின் சார்பில் கவனத்துடன் செய்யப்பட்டிருந்தது.
இந்நிகழ்ச்சியில், பொதுநல நிதி சேகரிக்கப்பட்டது. நிகழ்ச்சியில் பங்குபெற்ற அனைவரும் தாராளமாக நிதி வழங்கினர். நிறைவில், அமைப்பின் பொது நிதிக்காக ரூபாய் 22 ஆயிரம் தொகையும், ஷிஃபா மருத்துவ உதவி நிதிக்காக ரூபாய் 25 ஆயிரம் தொகையும் சேகரிக்கப்பட்டது.
இந்நிகழ்ச்சியில், ஹாங்காங் வாழ் காயலர்கள் சுமார் 250 பேர் ஆர்வத்துடன் திரளாகக் கலந்துகொண்டனர்.
காயல்பட்டினம் மற்றும் சிங்கப்பூரிலிருந்து பல காயலர்கள் சிறப்பழைப்பாளர்களாகவும் கலந்துகொண்டனர். அனைவருக்கும் சுவையான தேனீருடன், சிங்கப்பூரிலிருந்து வரவழைக்கப்பட்ட இனிப்பு மற்றும் கார தின்பண்டங்கள் பரிமாறப்பட்டன. மழலையருக்கு ஜூஸ் மற்றும் சாக்லேட் ஆகியன கூடுதலாக வழங்கப்பட்டது.
பேரவை தலைவர் தற்சமயம் காயல்பட்டினத்தில் இருப்பதால், அவர் அனுப்பி வாழ்த்துச் செய்தி கூட்டத்தில் அனைவருக்கும் அறிவிக்கப்பட்டது.
ஜனாப் எம்.ஒய்.முஹம்மத் அலீ இறை வேண்டலுடன் நிகழ்ச்சிகள் யாவும் இனிதே நிறைவுற்றன. மொத்தத்தில், பெருநாளையடுத்த இரவுப் பொழுது அனைவருக்கும் இன்பமாகக் கழிந்தது. எல்லாப்புகழும் அல்லாஹ்வுக்கே!
நிகழ்ச்சிகளின் நிறைவில் அனைவரும் குழுப்படம் எடுத்துக்கொண்டனர்.
[குழுப்படங்களைப் பெரிதாகக் காண அவற்றின் மீது சொடுக்குக!]
இவ்வாறு, காயல்பட்டினம் ஐக்கியப் பேரவை - ஹாங்காங் அமைப்பின் சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. |