“மைக்ரோ காயல் அறக்கட்டளை”யின் சார்பில் அக்யூபங்சர் மருத்துவ இலவச முகாம் தொடர்பான கலந்தாலோசனைக் கூட்டம் அக்டோபர் 18 ஆம் தேதி வெள்ளிக் கிழமையன்று நடைபெற்றது. இதுகுறித்த செய்திக்குறிப்பு வருமாறு:-
கடந்த ஒன்றரை வருடத்திற்கும் மேலாக, பொருளாதாரத்தில் நலிவுற்ற மக்களுக்கு இணையதளம் மூலம் மருத்துவ உதவிகளை சேகரித்து வழங்கி வரும் ‘மைக்ரோகாயல் அறக்கட்டளை'யின் சார்பில் ஷிஃபா ஹெல்த் அன்ட் வெல்ஃபர் அசோஸியேஷனுடன் இணைந்து, அக்டோபர் 20ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமையன்று நடைபெறும் அக்யூபங்சர் மருத்துவ இலவச முகாம் தொடர்பான கலந்தாலோசனைக் கூட்டம் கடைபள்ளி எதிரில் உள்ள அலுவலகத்தில், இரவு 08:30 மணியளவில் நடைபெற்றது.
அறக்கட்டளையின் வெளியூர் மற்றும் வெளிநாடு வாழ் அங்கத்தினர்கள் 'ஸ்கைப்' மூலம் இக்கூட்டத்தை கலந்து கருத்து பரிமாறவும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இக்கூட்டத்தில் ‘மைக்ரோகாயல் அறக்கட்டளை' மற்றும் ஷிஃபா ஹெல்த் அன்ட் வெல்ஃபர் அசோஸியேஷன் அங்கத்தினர்கள் கலந்து கொண்டனர்.
கூட்ட நிகழ்வுகள்:
ஆடிட்டர் ரிஃபாய் கூட்டத்திற்குத் தலைமை தாங்கினார். ஹாஃபிழ் எம்.எம்.முஜாஹித் அலீ இறைமறை வசனங்களையோதி கூட்ட நிகழ்வுகளைத் துவக்கி வைத்தார்.
செயலாளர் உரை:
மைக்ரோகாயல் அறக்கட்டளை’யின் அண்மைச் சேவைகள் மற்றும் செயல்பாடுகள் குறித்து, அதன் செயலாளரும், கூட்ட நெறியாளருமான சாளை முஹம்மத் முஹ்யித்தீன் விளக்கிப் பேசினார்.
கடந்த (ஆகஸ்ட் 11ஆம் தேதி) கூட்டத்தில் இயற்றபட்ட மூன்றாவது தீர்மானமாகிய, ஷிஃபா ஹெல்த் அன்ட் வெல்ஃபர் அசோஸியேஷன் மற்றும் கே.எம்.டி. மருத்துவமனையுடன் இணைந்து, முதற்கட்ட 50 பயனாளிகளுக்கு 'காயல் மெடிக்கல் கார்ட் (KMC)' மருத்துவ அட்டை வினியோகிக்கப்பட்டு, பயனாளிகள் அதனை முறையாக உபயோகித்து கொண்டிருப்பதாக அவர் தெரிவித்தார்.
'ஷிஃபா ஹெல்த் அன்ட் வெல்ஃபர் அசோஸியேஷன்' மூலம் கடந்த இரண்டு மாதத்தில் ஐந்து மருத்துவ விண்ணப்பங்கள் (ஹெர்னியா, கண் அறுவை சிகிச்சை மற்றும் கான்சர் நோய்களை உள்ளடக்கிய) பெறப்பட்டு, அறக்கட்டளையின் சார்பில் ஒரு லட்சத்து நாற்பதாயிரம் (1,40,000) இணைய தளம் மூலம் நிதி திரட்டப்பட்டு (Online Fund raising) அவ்வுதவிகள் 'ஷிஃபா ஹெல்த் அன்ட் வெல்ஃபர் அசோஸியேஷன்' மூலம் பயனாளிகளுக்கு உடனடியாக வழங்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.
அக்யூ பங்சர் இலவச மருத்துவ முகாமின் ஒருங்கிணைப்பாளர் உரை:
நாகர்கோவில் ATAMA மருத்துவக் குழுமத்துடன் இணைந்து ‘மைக்ரோகாயல் அறக்கட்டளை' மற்றும் 'ஷிஃபா ஹெல்த் அன்ட் வெல்ஃபர் அசோஸியேஷன்' அமைப்புகள் எல்.கே. மேனிலைப்பள்ளி வளாகத்தில் நடத்தும் அக்யூபங்சர் மருத்துவ இலவச முகாமுக்காண ஏற்பாடுகளை ஒருங்கிணைத்து வரும் அறக்கட்டளையின் டிரஸ்டி சாளை பஷீர், முகாம் ஏற்பாடுகளை குறித்து விளக்கிப் பேசினார்.
அக்யூ பங்சர் இலவச மருத்துவ முகாம் தொடர்பாக நாகர்கோவில் சென்று ATAMA மருத்துவக் குழுமத்தின் தலைவர் டாக்டர் சாதிக் மூலம் பெறப்பட்ட வீடியோ பேட்டி உள்ளூர் தொலைகாட்சிகளில் ஒலிபரப்பு செய்ய ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார். மேலும் முகாமுக்கான அனைத்து ஏற்பாடுகளும் திட்டமிட்டது போல மிகச் சிறப்பாக சென்று கொண்டிருப்பதாக அவர் கூறினார். கூட்டத்தில் கலந்துகொண்டோர் தங்களின் ஆலோசனைகளை பரிமாறிக் கொண்டனர்.
இறுதியாக ஹாஃபிழ் முஹம்மத் அலீ ஸாஹிப் கஃப்பாரா துஆ இறைஞ்ச அத்துடன் கூட்டம் இறையருளால் இனிதே நிறைவுற்றது.
அதனைத் தொடர்ந்து, இம்மாதம் 20ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமையன்று, காயல்பட்டினம் எல்.கே.மேனிலைப்பள்ளியில் அக்யூபக்ஞ்சர் மருத்துவ இலவச முகாம் நடைபெற்றது. அதில் ஏராளமானோர் பங்கேற்றுப் பயன்பெற்றனர்.
இவ்வாறு, அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
[செய்தி திருத்தப்பட்டது @ 15:25 / 22.10.2013] |