காயல்பட்டினம் பரிமார் தெருவிலுள்ள பெண்கள் தொழுவதற்காக, கடைப்பள்ளிக்கு அருகில் - மஹான் ஷெய்கு நூருத்தீன் வலிய்யுல்லாஹ் தர்ஹாவுக்கு மேற்புறத்தில், ஃபாத்திமா (ரழி) பெண்கள் தைக்கா என்ற பெயரில், பெண்கள் தைக்கா புதிதாகக் கட்டி முடிக்கப்பட்டு, இம்மாதம் 15ஆம் தேதி செவ்வாய்க்கிழமை மாலை 06.30 மணிக்கு திறப்பு விழா கண்டது.
தமிழ்நாடு மாநில ஜமாஅத்துல் உலமா சபையின் தூத்துக்குடி மாவட்ட தலைவரும், காயல்பட்டினம் அல்ஜாமிஉஸ் ஸகீர் - சிறிய குத்பா பள்ளியின் கத்தீபும், ஜாவியா அரபிக் கல்லூரியின் முதல்வருமான மவ்லவீ எஸ்.எம்.முஹம்மத் ஃபாரூக் ஃபாஸீ, விழாவிற்குத் தலைமை தாங்கி, தலைமையுரையாற்றினார்.
அல்ஜாமிஉல் கபீர் - பெரிய குத்பா பள்ளியின் கத்தீபும், முஅஸ்கர் மகளிர் அரபிக்கல்லூரிகளின் நிறுவனருமான மவ்லவீ ஹாஃபிழ் எச்.ஏ.அஹ்மத் அப்துல் காதிர் மஹ்ழரீ சிறப்புரையாற்றினார்.
வெறுமனே ரமழான் மாதத்தில் மட்டும் பெண்களுக்காக தொழுகை நடத்தப்படுவதோடு தைக்காவின் செயல்பாடுகளை நிறுத்திக்கொள்ளாமல், இப்பகுதி மக்களின் மார்க்க அறிவை வளர்ப்பதற்காக வாராந்திர மார்க்க வகுப்புகள், அன்றாட வகுப்புகள் நடத்தப்பட வேண்டியது மிகவும் அவசியம் என்றும், அவ்வாறு செய்வதானால், தமது முஅஸ்கர் மகளிர் அரபிக்கல்லூரியிலிருந்து ஆசிரியைகளைத் தர ஆயத்தமாக உள்ளதாகவும் அவர் கூறினார்.
மார்க்க அறிஞர்களின் உரைகளைத் தொடர்ந்து, இந்த தைக்கா கட்டுவதற்கு முழு முயற்சிகளை முன்னெடுத்துச் செய்த கே.எம்.காதர் என்பவரைப் பாராட்டி, அவருக்கு சால்வை அணிவித்து சங்கை செய்யப்பட்டது.
எஸ்.பீர் முஹம்மத், கே.எம்.இஸ்மாஈல், எஸ்.மீரான், எம்.எம்.அபூபக்கர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். எம்.டபிள்யு.முஹம்மத் ரஸூல் கிராஅத் ஓதினார். எம்.ஏ.கஸ்ஸாலி மரைக்கார் வரவேற்றுப் பேசியதோடு, நிகழ்ச்சிகளையும் நெறிப்படுத்தினார். கடைப்பள்ளி இமாம் தங்ஙள் செய்யித் முஹம்மத் புகாரீ துஆ ஓதி நிகழ்ச்சிகளை நிறைவு செய்தார்.
இவ்விழாவில், கடைப்பள்ளி ஜமாஅத்தைச் சேர்ந்த பொதுமக்கள் திரளாகக் கலந்துகொண்டனர். பெண்களுக்கு தனியிட வசதி செய்யப்பட்டிருந்தது. விழா ஏற்பாடுகளை, கடைப்பள்ளி ஜமாஅத்தார் செய்திருந்தனர். |