காயல்பட்டினம் சதுக்கைத் தெருவில் இயங்கி வரும் அல்மத்ரஸத்துன் நஸூஹிய்யா சார்பில், தமிழகம் தழுவிய அளவில், திருக்குர்ஆன் மனனப் (ஹிஃப்ழுப்) போட்டி, வரும் டிசம்பர் மாதம் 28, 29, 30 தேதிகளில் (சனி, ஞாயிறு, திங்கள்) நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.
இதற்கான ஏற்பாடுகள் குறித்து கலந்தாலோசிப்பதற்கான ஆலோசனைக் கூட்டம், காயல்பட்டினம் சிறிய குத்பா பள்ளி தோட்டத்தில், மவ்லவீ கத்தீப் அஹ்மத் அப்துல் காதிர் தலைமையில், இம்மாதம் 22ஆம் தேதி செவ்வாய்க்கிழமை (நேற்று) காலை 10.00 மணியளவில் நடைபெற்றது.
மத்ரஸத்துன் நஸூஹிய்யா ஆசிரியர் ஹாஃபிழ் சொளுக்கு முஹ்யித்தீன் அப்துல் காதிர் தவ்ஹீத் கிராஅத் ஓதி கூட்டத்தைத் துவக்கி வைத்தார். நஸூஹிய்யா மத்ரஸா நிறுவனர் ஹாஜி கிழுறு முஹம்மத் ஹல்லாஜ் அனைவரையும் வரவேற்றுப் பேசினார்.
தமிழ்நாடு மாநில ஜமாஅத்துல் உலமா சபையின் தூத்துக்குடி மாவட்ட தலைவரும், காயல்பட்டினம் ஜாவியா அரபிக்கல்லூரியின் முதல்வரும், அல்ஜாமிஉஸ் ஸகீர் - சிறிய குத்பா பள்ளியின் கத்தீபுமான மவ்லவீ எஸ்.எம்.முஹம்மத் ஃபாரூக் அல்ஃபாஸீ சிறப்புரையாற்றினார்.
தொடர்ந்து நடைபெற்ற கலந்தாலோசனையின் நிறைவில், ஏற்கனவே அறிவிக்கப்பட்ட தேதியில் தமிழகம் தழுவிய அளவில் திருக்குர்ஆன் மனனப் போட்டியை, சிறிய குத்பா பள்ளி வளாகத்தில் நடத்துவதென்று தீர்மானிக்கப்பட்டு, அதற்கான ஏற்பாடுகளைச் செய்வதற்காக, 15 பேர் கொண்ட குழு நியமனம் செய்யப்பட்டது.
துஆ - ஸலவாத்துடன் கூட்டம் நிறைவுற்றது. |