இந்திய யூனியன் முஸ்லிம் லீக் சார்பில், வரும் டிசம்பர் மாதம் 28ஆம் தேதியன்று, திருச்சியில் நடத்தப்படவுள்ள இளம்பிறை மாநில மாநாட்டிற்கு, தூத்துக்குடி மாவட்டத்திலிருந்து 25 பேருந்துகளில் 1000 சீருடை தொண்டர்களுடன் பங்கேற்க, அக்கட்சியின் மாவட்ட செயற்குழு தீர்மானித்துள்ளது.
இதுகுறித்து, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தூத்துக்குடி மாவட்ட செய்தி தொடர்பாளர் எஸ்.கே.ஸாலிஹ் வெளியிட்டுள்ள அறிக்கை:-
இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தூத்துக்குடி மாவட்ட செயற்குழுக் கூட்டம் 18.10.2013 மாலை 06.15 மணிக்கு, தூத்துக்குடி தெற்கு புதுத்தெரு சமுதாய நலக்கூடத்தில், மாவட்ட தலைவர் பி.மீராசா மரைக்காயர் தலைமையில், மாநில பொதுச் செயலாளர் கே.ஏ.எம்.முஹம்மத் அபூபக்கர் முன்னிலையில் நடைபெற்றது.
காயல்பட்டினம் நகர செயலாளர் ஏ.எல்.எஸ்.அபூஸாலிஹ் கிராஅத் ஓதினார். மாவட்ட செயலாளர் எஸ்.ஜெ.மஹ்மூதுல் ஹஸன் வரவேற்றுப் பேசினார்.
மாவட்ட துணைத்தலைவர் மன்னர் ஏ.ஆர்.பாதுல் அஸ்ஹப், துணைச் செயலாளர் கோவில்பட்டி திவான் பாட்சா, காயல்பட்டினம் நகர தலைவர் வாவு முஹம்மத் நாஸர், எட்டையபுரம் நகர தலைவர் சுபர்தீன் ஹஜ்ரத், பழையகாயல் நகர தலைவர் ரஃபீக், தூத்துக்குடி நகர தலைவர் நவ்ரங் சகாபுத்தீன், காயிதேமில்லத் பேரவை தலைவர் ஆசிரியர் அப்துல் ரசாக், மாணவர் பேரவை மாவட்ட அமைப்பாளர் சுஹைல் இப்றாஹீம், தூத்துக்குடி இளைஞர் லீக் தலைவர் முஹம்மத் இம்ரான், மாவட்ட துணைச் செயலாளர் உவைஸ் உள்ளிட்டோர் கருத்துரை வழங்கினர்.
மாநில துணைச் செயலாளர் எஸ்.ஏ.இப்றாஹீம் மக்கீ - மணிச்சுடர் நாளிதழ் செய்தி ஆசிரியர் காயல் மகபூப் எழுதிய இடஒதுக்கீடு நூல் அறிமுக உரையாற்றியதைத் தொடர்ந்து, மூத்த தலைவர் வாவு சித்தீக் அந்நூலை வெளியிட, முத்தையாபுரம் நகர தலைவர் முஸ்தஃபா மரைக்காயர் பெற்றுக்கொண்டார்.
மாநில பொதுச் செயலாளர் கே.ஏ.எம்.முஹம்மத் அபூபக்கர் சிறப்புரையாற்றுகையில், உலக அளவிலும், இந்தியாவிலும் இஸ்லாம் மார்க்கத்திற்கு அவப்பெயரை ஏற்படுத்தும் முயற்சியில் இன்று ஊடகங்கள் ஈடுபட்டு வருவதை விவரித்துப் பேசினார்.
எதிர்வரும் பாராளுமன்றத் தேர்தலில், சமூகங்களுக்கிடையில் குழப்பதை ஏற்படுது்தி, குறுக்கு வழியில் ஆட்சியைப் பிடிக்க முயற்சித்து வரும் பா.ஜ.க.வின் சூழ்ச்சிக்குப் பலியாகாமல், சமுதாயப் பேரியக்கம் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் வழியில் அரசியல் களம் காண வேண்டியதன் அவசியம் குறித்தும் விளக்கிப் பேசிய அவர், இதுகுறித்து தெளிவுபடுத்தவே எதிர்வரும் டிசம்பர் 28ஆம் தேதியன்று திருச்சியில் மாநாடு நடைபெறவுள்ளதாகவும், இம்மாநாடு தமிழக முஸ்லிம்களின் வரலாற்றில் திருப்புமுனையை ஏற்படுத்தி, குழப்பமற்ற அரசியல் தெளிவுக்கு வழிகாட்டும் எனவும் அவர் பேசினார்.
இக்கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:-
தீர்மானம் 1 - முஸஃப்பர் நகர் கலவத்தில் பாதிக்கப்பட்டோருக்கு நிதியுதவியளித்தோருக்கு நன்றி:
முஸஃப்பர் நகரில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தாய்ச்சபையின் வேண்டுகோளை ஏற்று தாராளமாக நிதி உதவி வழங்கிய அனைத்து மஹல்லா ஜமாஅத்தினருக்கும், பொதுநல அமைப்பினருக்கும் இக்கூட்டம் மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறது.
தீர்மானம் 2 - கிளைகள் சீரமைப்பு:
மாநில பொதுக்குழு தீர்மானத்தின் அடிப்படையில், நமது மாவட்டத்தில் உள்ள அனைத்து ப்ரைமரி அமைப்புகளையும் ஆய்வு செய்து, சீரமைப்பு செய்வதென முடிவு செய்யப்படுகிறது.
தூத்துக்குடி மாநகராட்சி, காயல்பட்டினம் நகராட்சி எல்லைக்குட்பட்ட அனைத்து வார்டுகளிலும் ஒரு தலைவர், செயலாளர், முஸ்லிம் யூத் லீக் மற்றும் முஸ்லிம் மாணவர் பேரவை அமைப்பாளர்கள் என நான்கு நபர்களைத் தேர்வு செய்து, வார்டு அமைப்புகளை ஏற்படுத்திட, காயல்பட்டினத்திற்கு எம்.கே.முஹம்மத் அலீ ஹாஜி காக்கா, துளிர் எம்.எல்.ஷேக்னா லெப்பை, அரபி ஷாஹுல் ஹமீத், ஏ.ஆர்.ஷேக் முஹம்மத் ஆகியோரைக் கொண்ட குழு தேர்வு செய்யப்பட்டது.
அதேபோன்று, தூத்துக்குடிக்கான அமைப்புக்குழு 20.10.2013 அன்று நடைபெறவிருக்கும் தூத்துக்குடி நகர நிர்வாகிகள் கூட்டத்தில் அறிவிக்கப்படும். இக்குழுவினர், 20.11.2013 தேதிக்குள் அனைத்து வார்டுகளிலும் பொறுப்பாளர்களை ஏற்படுத்தி, முழு முகவரியுடன் கூடிய விபரத்தை மாவட்டத் தலைவரிடம் அளிக்க வேண்டும் என இக்கூட்டம் கேட்டுக்கொள்கிறது.
தீர்மானம் 3 – புதிய கிளைகள்:
ப்ரைமரி இல்லாத ஊர்களில் கிளை அமைப்புகளை ஏற்படுத்திட, செயலாளர் எஸ்.ஜெ.மஹ்மூதுல் ஹஸன், மன்னர் ஏ.ஆர்.பாதுல் அஸ்ஹப், ஆசிரியர் அப்துல் ரசாக், எம்.ஏ.சி.சுஹைல் இப்றாஹீம் ஆகியோரைக் கொண்ட குழு நியமிக்கப்படுகிறது. தூத்துக்குடியைச் சுற்றியுள்ள பகுதிகளுக்கான பொறுப்பாளர்களாக - தூத்துக்குடி நகர கூட்டத்தில் தேர்வு செய்யப்படுவோரை நியமிக்கவும் இக்கூட்டம் தீர்மானிக்கிறது.
இக்குழுக்களும் 20.11.2013 தேதிக்குள் அமைப்புப் பணிகளை நிறைவுசெய்து, அதன் விபரத்தை மாவட்டத் தலைவரிடம் அளிக்க கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.
நவம்பர் மாத இறுதிக்குள் மாவட்ட பொதுக்குழுக் கூட்டத்தைக் கூட்டி, இயக்கப் பணிகளில் ஆர்வம் உள்ளவர்களையும் இணைத்து, மாவட்ட நிர்வாகத்தைச் சீரமைப்பதென இச்செயற்குழு தீர்மானிக்கிறது.
தீர்மானம் 4 - மாவட்ட தலைமை நிலைய செயலாளர் நியமனம்:
தூத்துக்குடி மாவட்ட தலைமை நிலையச் செயலாளராக பி.அப்துல் காலிக் இக்கூ்டத்தில் தேர்வு செய்யப்பட்டார். அவர், மாவட்ட - நகர நிர்வாகிகளின் செயல்பாடுகள் குறித்து தகவல் தெரிவித்தல், அரசுத் துறையுடன் நடவடிக்கை மேற்கொள்ளல், ஊரகத்துறையினருடன் தொடர்பு ஏற்படுத்தல், மினிட் புத்தகத்தைப் பராமரித்தல் போன்ற பணிகளைக் கவனித்துக்கொள்ள இக்கூட்டம் கேட்டுக்கொள்கிறது.
தீர்மானம் 5 - திருச்சி இளம்பிறை பேரணியில் பங்கேற்பு:
எதிர்வரும் 28.12.2013 சனிக்கிழமையன்று, திருச்சி - தென்னூர் உழவர் சந்தை மைதானத்தில் நடைபெறவிருக்கும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் - மஹல்லா ஜமாஅத் ஒருங்கிணைப்பு மாநில மாநாடு, சமூக நல்லிணக்கத்தை வலியுறுத்தும் இளம்பிறை எழுச்சிப் பேரணிக்கு, தூத்துக்குடி மாவட்டத்திலிருந்து 25 பேருந்துகளில் செல்வதென்றும், மாவட்ட யூத் லீக் செயலாளர் திரேஸ்புரம் மீராசா தலைமையில், 40 வயதுக்குட்பட்ட இளைஞர் லீக் - மாணவர் பேரவையினர் - சீருடை அணிந்த 1000 இளம்படை வீரர்களைப் பங்கேற்கச் செய்வதென்றும் இக்கூட்டம் முடிவு செய்கிறது.
இம்மாநாட்டில் பங்கேற்க, மாவட்டத்திலுள்ள அனைத்து மஹல்லா ஜமாஅத்தினரையும் அழைப்பதென்றும், திருச்சி சுற்றுவட்டாரத்தில் உள்ள நம் மாவட்டத்தைச் சேர்ந்தவர்களுக்குத் தகவல் தெரிவித்து, மாநில மாநாட்டில் அவர்களையும் பங்கேற்க ஏற்பாடு செய்வதென்றும், மாநாடு சுவர் விளம்பரங்களை மாவட்டத்தின் முக்கிய இடங்களில் உடனடியாக மேற்கொள்வதெனவும் முடிவு செய்யப்பட்டது.
தீர்மானம் 6 - வங்கிக் கணக்கு துவக்கம்:
தேசியமயமாக்கப்பட்ட வங்கியொன்றில், “இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தூத்துக்குடி மாவட்ட கிளை” என்ற பெயரில் - தூத்துக்குடி நகரில் வங்கிக்கணக்கு துவக்குவதென்றும், அக்கணக்கை மாவட்ட தலைவர், மாவட்ட செயலாளர், மாவட்டப் பொருளாளர் ஆகிய மூவரில் இருவர் கையொப்பமிட்டு பயன்படுத்திடவும் இக்கூட்டம் முடிவு செய்கிறது.
இவ்வாறு தீர்மானங்கள் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டன. கூட்டத்தில், மூத்த தலைவர்கள் தூத்துக்குடி எம்.அப்துல் கனீ, உஸ்மான், காயல்பட்டினம் நகர பொருளாளர் எம்.ஏ.முஹம்மத் ஹஸன், காயல்பட்டினம் நகர நிர்வாகிகளான ஏ.கே.மஹ்மூத் சுலைமான், பெத்தப்பா சுல்தான், எம்.இசட்.சித்தீக், என்.டி.அஹ்மத் ஸலாஹுத்தீன் மற்றும் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் மாவட்ட - நகர நிர்வாகிகள் பங்கேற்றனர்.
தூத்துக்குடி நகர தலைவர் நவ்ரங் சகாபுத்தீன் நன்றி கூற, அரபி ஷாஹுல் ஹமீத் துஆவுடன் கூட்டம் நிறைவுற்றது.
இவ்வாறு, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தூத்துக்குடி மாவட்ட செய்தி தொடர்பாளர் எஸ்.கே.ஸாலிஹ் தனதறிக்கையில் தெரிவித்துள்ளார்.
படங்கள்:
A.R.ஷேக் முஹம்மத் |