காயல்பட்டினம் நகராட்சிப் பகுதிகளில் சேரும் குப்பைகளைக் கொட்டுவதற்கும், மக்கும் குப்பையைப் பயன்படுத்தும் வகையில் உயிரி எரிவாயுக் கூடம் அமைத்து, அதன் மூலம் மின் உற்பத்தி செய்வதற்கும், தமிழக அரசின் சார்பில் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
இவ்விரு திட்டங்களுக்கும் இடங்கள் தேர்வு செய்வதற்காக, பல்வேறு சர்ச்சைகளுக்கிடையே ஆய்வுப் பணிகள் நடைபெற்று வருகிறது.
அதன் ஒரு பகுதியாக, இம்மாதம் 08ஆம் தேதியன்று காலையில், தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் எம்.ரவிக்குமார் காயல்பட்டினம் நகராட்சிக்கு வருகை தந்தார். அதனைத் தொடர்ந்து, மேற்படி திட்டங்களுக்குத் தேவைப்படும் இடங்கள் குறித்து, அது தொடர்பான அதிகாரிகளுடன் - நகர்மன்றத் தலைவர் மற்றும் உறுப்பினர்கள் முன்னிலையில் தல ஆய்வு மேற்கொண்டார்.
மேற்கொள்ளப்பட்ட ஆய்வு குறித்து, பின்னர் அவர் ஆய்வுக் குறிப்புகளை அனுப்பி வைத்துள்ளார். (மாவட்ட ஆட்சியரால் அனுப்பி வைக்கப்பட்ட ஆய்வுக் குறிப்புகளின் நகல், இம்மாதம் 11ஆம் தேதியன்று நடைபெற்ற காயல்பட்டினம் நகர்மன்ற அவசரக் கூட்டத்தின்போது, நகர்மன்றத் தலைவரால், அனைத்து உறுப்பினர்களுக்கும் வழங்கப்பட்டது.
மாவட்ட ஆட்சியர் அனுப்பி வைத்துள்ள தல ஆய்வு தொடர்பான ஆய்வுக் குறிப்பின் வாசகங்கள் வருமாறு:-
ஆய்வுக் குறிப்புகள்
பொருள்: தல ஆய்வுகள் - காயல்பட்டினம் நகராட்சி - மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்களால் 08.10.2013 அன்று தல ஆய்வு செய்யப்பட்டது. - ஆய்வின்போது கண்டறியப்பட்டவை - தொடர் நடவடிக்கை எடுத்து அறிக்கை அனுப்பத் தெரிவித்தல் - தொடர்பாக.
...........
தூத்துக்குடி மாவட்டம் காயல்பட்டினம் நகராட்சியில் வளர்ச்சித் திட்டப் பணிகளை செயல்படுத்துவதற்கான இடம் தெரிவு குறித்து மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்களால் 08.10.2013 அன்று தல ஆய்வுப் பணிகள் மேற்கொள்ளப்பட்டன. தல ஆய்வின்போது காயல்பட்டினம் நகராட்சி ஆணையாளர், நகராட்சி மன்றத் தலைவர், மன்ற உறுப்பினர்கள் மற்றும் சம்பந்தப்பட்ட கிராம நிர்வாக அலுவலர்கள் ஆகியோர் உடனிருந்தனர்.
மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்களின் தல ஆய்வு குறிப்புரைகள் பின்வருமாறு:-
காயல்பட்டினம் நகராட்சிக்கு திடக்கழிவு மேலாண்மைத் திட்டத்தினை செயல்படுத்துவதற்காக ரூ.5.00 இலட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மேலும், எரிவாயு உற்பத்தி செய்து, அதன்மூலம் மின்சாரம் தயாரிக்கும் திட்டத்திற்காக ரூ.90.00 இலட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
மேற்படி இரண்டு திட்டங்களையும் செயல்படுத்த தகுதியான இடம் தெரிவு செய்யப்படாததன் காரணமாக, பணிகள் துவக்கப்படாமல் நீண்டகாலமாக நிலுவையாக உள்ளன. எனவே, மேற்படி திட்டங்களின் செயல்பாட்டிற்கான இடம் தெரிவு குறித்து தல ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டன.
1. காயல்பட்டினம் தென்பாகம் கிராமம் - நில அளவை எண் 392/5 (மயானம்):
காயல்பட்டினம் தென்பாகம் வருவாய்க் கிராமத்தில் நில அளவை எண் 392/5இல் 3.05.9 ஹெக்டேர் பரப்பளவில் அமைந்துள்ள மயான நிலப்பரப்பு பார்வையிடப்பட்டது.
>> இந்நிலத்திற்கு முறையான அணுகுபாதை உள்ளது.
>> மயான நிலமாக இருந்தாலும், தற்போது அதன் ஒரு பகுதி மட்டுமே மயானமாகப் பயன்படுத்தப்பட்டு வருகிறது.
>> ஒவ்வொரு ஜாதிவாரியாக மயானம் அமைப்பதற்கு, இப்பகுதி முழுமையும் மயான பயன்பாட்டிற்காகவே பிற்காலத்திற்குத் தேவைப்படும் எனத் தெரிவிக்கப்படும் மன்ற உறுப்பினரின் ஆட்சேபனை நிராகரிக்கப்படலாம்.
>> எனவே, திட்ட செயலாக்கத்திற்குத் தேவையான 25.00 சென்ட் நிலப்பரப்பு இப்பகுதியிலிருந்து தெரிவு செய்யப்படலாம்.
(Action: நகராட்சி ஆணையாளர், காயல்பட்டினம்)
2. காயல்பட்டினம் தென்பாகம் கிராமம் - நில அளவை எண் 334/1, 334/2, 334/12 & 334/15 (நத்தம்):
காயல்பட்டினம் தென்பாகம் வருவாய்க் கிராமத்தில் நில அளவை எண் 334/1, 334/2, 334/12 & 334/15இல் உள்ள நத்தம் நிலங்கள் பார்வையிடப்பட்டன.
>> மேற்கண்ட நத்தம் நிலத்தில் பின்வரும் விவரப்படி காலிமனை விஸ்தீரணங்கள் உள்ளன.
>> வருவாய் ஆவணங்களின்படியும், தல ஆய்வின்படியும், மேற்படி நிலங்கள் நத்தம் காலிமனையாக உள்ளன.
>> இதனில் நிலஅளவை எண்கள் 334/1, 334/2இல் ஒரு பகுதிக்கான கிரைய ஆவணம் தனியார் ஒருவரிடம் உள்ளதாக கிராம நிர்வாக அலுவலரால் தெரிவிக்கப்பட்டது. ஆனால், 01.01.1987 முதல் 11.09.2013 வரையிலான காலங்களில் மேற்படி நிலங்களில் எவ்வித வில்லங்கமும் இல்லை என காயல்பட்டினம் சார்பதிவாளரிடமிருந்து 12.09.2013 அன்றைய தேதியில் வில்லங்கச் சான்று பெறப்பட்டு, ஆய்வின்போது காண்பிக்கப்பட்டது.
>> வருவாய்த்துறை ஆவணங்களின்படி, “நத்தம் - காலிமனை”யாக உள்ள பகுதிக்கு தனிநபர் கிரைய ஆவணம் வைத்துள்ளதாக கிராம நிர்வாக அலுவலர் தெரிவித்துள்ளதால், அரசு பட்டா வழங்காத நிலையில் எவ்வாறு மேற்படி நிலத்தை ஆவணம் மூலம் பரிவர்த்தனை செய்யப்பட்டது என்பதும், அப்பரிவர்த்தனை உண்மையானதா என்பதும் முழுமையாக விசாரித்து, அந்தப் பத்திரத்தை ரத்து செய்யவும், போலி பரிவர்த்தனை எனில் உடன் கிரிமினல் நடவடிக்கை தொடரவும் வட்டாட்சியர் கோரப்படுகிறார்.
>> அதே சர்வேயின் 334/12, 334/15ஐ வேலியிட்டு ஆக்கிரமிப்பைத் தடுக்க நடவடிக்கை எடுக்கவும்.
>> திட்ட செயலாக்கத்திற்குத் தேவையான 25.00 செண்ட் நிலப்பரப்பு இப்பகுதியிலிருந்தும் தெரிவு செய்யப்படலாம்.
(Action: வட்டாட்சியர், திருச்செந்தூர்,
வருவாய்க் கோட்டாட்சித் தலைவர், திருச்செந்தூர் &
நகராட்சி ஆணையாளர், காயல்பட்டினம்)
3. காயல்பட்டினம் தென்பாகம் கிராமம் - நில அளவை எண் 278 (பட்டா நிலம்)
காயல்பட்டினம் தென்பாகம் வருவாய்க் கிராமத்தில், நில அளவை எண் 278இல் உள்ள தனிநபர் பட்டா நிலம் திடக்கழிவு மேலாண்மைக்காக இனாமாகப் பெற வாய்ப்புள்ளதாக நகராட்சி தலைவியால் கூறப்பட்டதால் தலம் பார்வையிடப்பட்டது.
>> மேற்படி நிலமானது நகர்ப்புறத்திலிருந்து சுமார் 4.00 கி.மீ. தூரத்தில் அமைந்துள்ளது.
>> கடற்கரைப் பகுதியை ஒட்டி அமைந்துள்ளது.
>> மேற்படி நிலத்தின் கிழக்கு மற்றும் மேற்கு பகுதிகளில் நிலவியல் பாதை உள்ளது.
>> மேற்படி நிலத்தில் திட்ட செயல்பாட்டிற்காக 25.00 அளவுள்ள நிலப்பரப்பு குறைந்த அளவு விலை நிர்ணயத்தொகை அடிப்படையில் வழங்க சம்மதிப்பதாக சம்பந்தப்பட்ட நில உரிமையாளரால் தெரிவிக்கப்பட்டது.
>> மேற்படி 25.00 சென்ட் அளவுள்ள நிலத்தினை தானமாகப் பெறுவதற்கு நகராட்சி நிர்வாகத்தால் நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டும்.
>> மேற்படி நிலப்பரப்பு கடற்கரை பகுதியினை ஒட்டி அமைந்துள்ளதால் “கடற்கரை மேலாண்மைப் பகுதி” வரையறைக்குள் (CRZ) அமையப்பெறாவண்ணம் திட்ட செயல்பாட்டிற்கான நிலம் தெரிவு செய்யப்படலாம்.
(Action: நகராட்சி ஆணையாளர், காயல்பட்டினம்)
>> மேற்கண்ட மூன்று இடங்களிலிருந்து காயல்பட்டினம் நகராட்சியில் செயல்படுத்தப்பட உள்ள திடக்கழிவு மேலாண்மை, எரிவாயு உற்பத்தி செய்து அதன் மூலம் மின்சாரம் தயாரிக்கும் திட்டத்திற்காக சுமார் 25.00 சென்ட் அளவுள்ள நிலப்பகுதி தெரிவு செய்து நகர்மன்றத் தீர்மானம் நிறைவேற்ற நகராட்சி ஆணையரால் துரித நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டும்.
(Action: நகராட்சி ஆணையாளர், காயல்பட்டினம்)
4. ஏனையவை
1. புறம்போக்கு நிலங்கள்
காயல்பட்டினம் நகராட்சிக்குட்பட்ட, காயல்பட்டினம் வடபாகம் வருவாய்க் கிராமம் மற்றும் காயல்பட்டினம் தென்பாகம் வருவாய்க் கிராமம் ஆகியவற்றிலிருந்து காயல்பட்டினம் நகராட்சிக்கு ஒப்படைக்கப்பட்ட புறம்போக்கு நிலங்கள் பட்டியலைப் பெற்று, அந்நிலங்களை அடையாளங்கண்டு, அவற்றின் தற்போதைய நிலை குறித்து திருச்செந்தூர் வட்டாட்சியர் 10 தினங்களுக்குள் அறிக்கை செய்திட வேண்டும்.
(Action: வட்டாட்சியர், திருச்செந்தூர்)
2. அனுமதியற்ற மனைப்பிரிவுகள்
காயல்பட்டினம் நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் நகராட்சி அனுமதியின்றியும், நகர் மற்றும் ஊரமைப்புத் துறை அனுமதியின்றியும் பல்வேறு மனைப்பிரிவுகள் தற்போது அமைக்கப்பட்டு வருவதாகப் புகார்கள் வரப்பெற்றுள்ளன. தல ஆய்வின்போதும், ஆதிதிராவிடர் காலனி கடற்கரை சாலைப்பாதையினை ஆக்கிரமித்து மனைப்பிரிவு அமைக்கப்பட்டு வருவதாக பொதுமக்கள் புகார் தெரிவித்தனர்.
>> எனவே, காயல்பட்டினம் நகராட்சியில் முழுமையாக ஆய்வு மேற்கொண்டு, அனுமதியற்ற மனைப்பிரிவுகள் தொடர்பாக உரிய தொடர்நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும்.
>> அனுமதியற்ற மனைப்பிரிவுகளால் அரசுக்கும், நகராட்சிக்கும் ஏற்பட்டுள்ள இழப்புகள் குறித்து கணக்கீடுகள் செய்து, தொகையினை சம்பந்தப்பட்டவர்களிடமிருந்து வசூலிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டும்.
>> அனுமதியற்ற மனைப்பிரிவுகள் குறித்து பொதுமக்கள் அறிந்துகொள்ளும் வகையில் விளம்பரப் பலகைகள் நிறுவப்பட வேண்டும்.
(Action: துணை இயக்குநர் (பொ), ந(ம)ஊதுறை, திருநெல்வேலி)
>> மேற்படி ஆதிதிராவிடர் காலனி கடற்கரை சாலைப்பகுதிகளில் உள்ள ஆக்கிரமிப்புகள் உடன் அகற்றப்பட வேண்டும்.
(Action: வட்டாட்சியர், திருச்செந்தூர்)
மாவட்ட ஆட்சித் தலைவர்
தூத்துக்குடி மாவட்டம்
பெறுநர்
1. வருவாய்க் கோட்டாட்சித் தலைவர், திருச்செந்தூர்.
2. துணை இயக்குநர் (பொறுப்பு), நகர் மற்றும் ஊரமைப்புத் துறை, திருநெல்வேலி.
3. நகராட்சி ஆணையாளர், காயல்பட்டினம்.
4. வட்டாட்சியர், திருச்செந்தூர்.
நகல்
1. மண்டல துணை இயக்குநர், நகராட்சி நிர்வாகம், திருநெல்வேலி.
2. மாவட்ட ஆட்சியரின் கூடுதல் நேர்முக உதவியாளர் (நிலம்), தூத்துக்குடி (தொடர் நடவடிக்கைக்காக)
இவ்வாறு, மாவட்ட ஆட்சியர் அனுப்பியுள்ள தல ஆய்வுக் குறிப்புரையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. |