ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூர் நகரில் இம்மாதம் 16ஆம் தேதி புதன்கிழமையன்று ஈதுல் அழ்ஹா - ஹஜ் பெருநாள் கொண்டாடப்பட்டது. பெருநாளை முன்னிட்டு, ஜெய்ப்பூர் காயல் நல மன்றம் (ஜக்வா) சார்பில் நடத்தப்பட்ட பெருநாள் ஒன்றுகூடல் நிகழ்ச்சி குறித்து, அவ்வமைப்பின் சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கை:-
அஸ்ஸலாமுஅலைக்கும்.
பெருநாள் தொழுகை:
எமது ஜக்வா அமைப்பின் சார்பில் ஹஜ்ஜுப் பெருநாள் தொழுகை 16.10.2013 அன்று காலை 08.30 மணியளவில், ஜெய்ப்பூர் நகரிலுள்ள முஹல்லா பிஸாத்தியானில் அமைந்திருக்கும் தகாடியா மஸ்ஜிதில் நடைபெற்றது.
மவ்லவீ ஹாஃபிழ் எம்.ஏ.அப்துல் வதூத் ஃபாஸீ தொழுகையை வழிநடத்தி, குத்பா பேருரையாற்றினார்,
கே.எம்.டி.மருத்துவமனைக்கு நன்கொடை:
தொழுகை நிறைவுற்ற பின்னர் அனைவருக்கும் தேனீர் வழங்கப்பட்டது. அந்நேரத்தில் வசூலிக்கப்பட்ட நன்கொடைத் தொகையை, நமதூர் காயல்பட்டினம் கே.எம்.டி.மருத்துவமனைக்கு வழங்க தீர்மானிக்கப்பட்டது.
காயலர் சந்திப்பு:
பெருநாளன்று மாலையில், ஜெய்ப்பூரின் மத்தியிலுள்ள சென்ட்ரல் பூங்காவில் காயலர்கள் சந்தித்தனர். அங்குள்ள பள்ளியில் மஃரிப் ஜமாஅத்தாக (கூட்டாக) நிறைவேற்றப்பட்டது. தொழுகையைத் தொடர்ந்து, அனைவருக்கும் கொண்டை கடலை, தேனீர் வினியோகிக்கப்பட்டது. பின்னர் பூங்காவில் பேசிக்கொண்டிருந்தபோது, சிற்றுலா செல்ல முடிவு செய்யப்பட்டது.
தொழுகை மற்றும் மாலை நிகழ்ச்சியில், ஆக்ராவில் மருத்துவ உயர்கல்வி பயிலும் நமதூர் மருத்துவர் ஹாஃபிழ் ஃபாஸீ, டில்லியிலிருந்து ஏ.கே.ஷேக் ஆலம், கே.எம்.எஸ்.மொகுதூம் முஹம்மது (KASZ) ஆகியோரும் கலந்து கொண்டனர்.
பெருநாள் ஒன்றுகூடல் நிகழ்ச்சி:
அல்லாஹ்வின் அருளால், 20.10.2013 அன்று ஜெய்ப்பூரிலிருந்து 15 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ள பாதுஷா மதராஸி அவர்களது பண்ணை வீட்டிற்கு, மன்றத்தின் சுமார் 40 உறுப்பினர்கள் சிற்றுலா சென்றனர்.
காலையில் புறப்பட்டுச் சென்று தோட்டத்தை அடைந்ததும், அனைவருக்கும் தேனிர் மற்றும் நாஷ்டா வழங்கப்பட்டது. பின்னர் அனைவரும் குளியலை முடித்துக்கொண்டு, சிறிது நேரம் இளைப்பாறினர். மதியம் 01.00 மணியளவில் லுஹர் தொழுகை ஜமாஅத்தாக (கூட்டாக) நிறைவேற்றப்பட்டது.
பொதுக்குழுக் கூட்டம்:
தொழுகையைத் தொடர்ந்து, அமைப்பின் பொதுக்குழுக் கூட்டம் மன்றத் தலைவர் எம்.ஏ.எஸ்.செய்யித் அபூதாஹிர் தலைமையில் நடைபெற்றது. ஜனாப் உஸ்மான், டில்லியிலிருந்து வந்திருந்த - காயல்பட்டினத்தைச் சேர்ந்த அல்ஹாஜ் அல்ஹாஃபிழ் முஹம்மது தெஹ்லானி, மவ்லவீ ஹாஃபிழ் எம்.ஏ.அப்துல் வதூத் ஃபாஸீ ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
ஹாஃபிழ் எம்.கே.அப்துர்ரஹ்மான் கிராஅத் ஓதி கூட்டத்தைத் துவக்கி வைத்தார். தலைமையுரையைத் தொடர்ந்து, மன்றப் பொருளாளர் அனுமதியுடன் - மன்றத்தின் வரவு-செலவு கணக்கறிக்கை தாக்கல் செய்யப்பட்டது.
பின்னர் உறுப்பினர்களின் கருத்துப் பரிமாற்றம் நடைபெற்றது. உலகளாவிய காயல் நல மன்றங்களின் கூட்டு அமைப்பான ஷிஃபாவின் தோற்றம், அதன் செயல்பாடுகள் பற்றி அமைப்பின் செயலாளர் ஹாஃபிழ் எம்.ஏ.செய்யித் முஹம்மத் விளக்கிப் பேசினார்.
தீர்மானங்கள்:
பின்னர், பின்வருமாறு தீர்மானங்கள் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டன:-
தீர்மானம் 1 - அமைப்பை அரசுப் பதிவு செய்தல்:
நமது ஜெய்ப்பூர் காயல் நல மன்றம் - ஜக்வா அமைப்பை Society Act முறைப்படி அரசுப்பதிவு செய்திட இக்கூட்டம் தீர்மானிக்கிறது.
தீர்மானம் 2 - ஷிஃபா மூலம் மருத்துவ உதவி:
கடந்த ரமழான் மாதத்தில் மன்றத்தின் சார்பில் வசூலிக்கப்பட்ட ஜகாத் நிதியிலிருந்து 3 ஆயிரம் ரூபாயை, ஷிஃபா மூலம் மருத்துவ உதவித்தொகையாக வழங்கிட இக்கூட்டம் தீர்மானிக்கிறது.
இவ்வாறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. எம்.ஐ.கலீலுர்ரஹ்மான் நன்றி கூற, ஹாஜி எம்.டி.அபுல்காஸிம் ஆலிம் துஆவுடன் நிகழ்ச்சிகள் நிறைவுற்றன.
களறிக்கறி விருந்து:
பின்னர், நமதூர் காயல்பட்டினம் பாரம்பரிய முறைப்படி களறிக்கறி, சோறு ஸஹன் தட்டில் வைத்து பரிமாறப்பட்டது.
உணவுக்குப் பின், சிறிது நேரம் ஓய்வைத் தொடர்ந்து, மாலையில் அனைவருக்கும் தேனீர் வினியோகிக்கப்பட்டது. அஸ்ர் தொழுகையை ஜமாஅத்தாக நிறைவேற்றிய பின்னர். அங்கிருந்து புறப்பட்ட காயலர் சிற்றுலாக் குழு, மஃரிப் வேளைக்கு முன்பாக ஜெய்ப்பூர் நகரை வந்தடைந்தது.
எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே - அல்ஹம்து லில்லாஹ்!
இவ்வாறு, ஜெய்ப்பூர் காயல் நல மன்றத்தின் சார்பில், அதன் செயலாளர் ஹாஃபிழ் எம்.ஏ.செய்யித் முஹம்மத் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தகவல்:
P.M.K.ரிஃபாய் |