காயல்பட்டினம் கல்லூரி மாணவியின் கைத்திறனில், ஆறுமுகநேரியில் ஓவியக் கண்காட்சி நடைபெற்றுள்ளது. இதுகுறித்த செய்திக்குறிப்பு:-
வாவு வஜீஹா வனிதையர் கல்லூரியில் வணிக நிர்வாகவியல் மூன்றாமாண்டு பயின்று வருகிறார் கணேஷ்வரி. உடன்குடி கணேஷ் மருந்தக உரிமையாளர் கிருஷ்ணமூர்த்தி - பத்மாவதி தம்பதியின் மகளான இவர், தன் கைத்திறனில் உருவாக்கிய அரிய ஓவியங்களைக் கொண்டு, பள்ளி - கல்லூரி மாணவ-மாணவியர் மற்றும் பொதுமக்களுக்கான ஓவியக் கண்காட்சியை, இம்மாதம் 26ஆம் தேதி சனிக்கிழமையன்று, ஆறுமுகநேரி காமராஜ் சோமசுந்தரி மழலையர் பள்ளியில் நடத்தினார்.
அப்பள்ளியின் தாளாளர் பி.எஸ்.ஆர்.ஜெயானந்தன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில், வாவு வஜீஹா வனிதையர் கல்லூரியின் வணிக நிர்வாகவியல் துணைத்தலைவர் எஸ்.ஏ.ரஹ்மத் ஆமினா பேகம் முன்னிலை வகிக்க, அக்கல்லூரியின் முதல்வர் வெ.சசிகலா ஓவியக் கண்காட்சியைத் துவக்கி வைத்தார்.
தமிழகம், கர்நாடகம், ராஜஸ்தான், ஆப்பிரிக்கா, சீனா ஆகிய பகுதிகளுக்குரிய தொன்மையை உணர்த்தும் வகையில், 101 ஓவியங்கள் இக்கண்காட்சியில் இடம்பெற்றிருந்தன.
தனது படிப்பிற்கிடையே சுமார் ஒன்றரை வருடங்கள் செலவழித்து, இப்படங்கள் அனைத்தையும் வரைந்துள்ளதாகவும், படிப்படியாக தனது ஓவியத் திறனை இன்னும் வளர்த்து, தேசிய அளவில் சாதனைகள் புரிய நாட்டம் கொண்டுள்ளதாகவும் மாணவி கணேஷ்வரி செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
இக்கண்காட்சியை, காயல்பட்டினம் - ஆறுமுகநேரி பகுதிகளைச் சேர்ந்த ஏராளமான பெண்கள் உட்பட திரளானோர் கண்டு ரசித்தனர்.
கண்காட்சி ஏற்பாடுகளை, ஓவியம் - தமிழாய்வு - தொல்லியல் ஆய்வு உள்ளிட்ட பன்முகத் திறமைகளைக் கொண்ட தமிழாசிரியர் - ஆறுமுகநேரியைச் சேர்ந்த த.த.தவசிமுத்து செய்திருந்தார்.
தகவல்:
ச.பார்த்திபன் |