சஊதி அரபிய்யா - அப்ஹா நகரில், ஜித்தா காயல் நற்பணி மன்றத்தின் சார்பில் நடத்தப்பட்ட கலந்தாலோசனைக் கூட்டத்தில், நகர்நலன் குறித்து உறுப்பினர்கள் கருத்துப் பரிமாறினர். இதுகுறித்து, அவ்வமைப்பின் சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கை:-
சஊதி அரபிய்யாவின் தென்பகுதியில் அமைந்துள்ள - சுமார் 2800 மீட்டர் உயரமுள்ள உயர்ந்த மலைகளைக் கொண்ட குளிர்பிரதேச சுற்றுலாத்தலமாகத் திகழும் அழகிய அப்ஹா-கமீஸ் நகர்களுக்கு அருகில், அஹது ரபிதா எனும் நகரிலுள்ள காயல் இல்லத்தில் இம்மாதம் 15ஆம் தேதி செவ்வாய்க்கிழமை - ஈதுல் அழ்ஹா ஹஜ் பெருநாளன்று காலை 07.30 மணியளவில், ஜித்தா காயல் நற்பணி மன்றத்தின் மண்டல உறுப்பினர் சந்திப்பு மற்றும் கலந்தாலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
எம்.ஒய்.ஹைதர் அலீ, எம்.பி.ஏ.முஹ்யித்தீன் தம்பி ஆகியோர் முன்னிலை வகிக்க, மன்றத்தின் மூத்த உறுப்பினர் கண்டி எம்.ஏ.ரஹ்மத்துல்லாஹ் தலைமை தாங்கினார்.
துவக்கமாக, மன்றத்தின் நோக்கம் மற்றும் செயல்பாடுகள் குறித்தும், உறுப்பினர்களால் வழங்கப்படும் சிறிய சந்தா தொகைகளைக் கொண்டு நகரில் மேற்கொள்ளப்படும் பெரும் உதவிப் பணிகள் - அவற்றால் பயன்பெறும் மக்கள் செய்யும் பிரார்த்தனைகள் குறித்தும், மன்றத்தின் மூத்த செயற்குழு உறுப்பினர் எஸ்.எஸ்.ஜாஃபர் ஸாதிக் விளக்கிப் பேசினார்.
அடுத்து, மன்றச் செயலாளர் சட்னி எஸ்.ஏ.கே.செய்யித் மீரான் உரையாற்றினார்.
ஜித்தா காயல் நற்பணி மன்றம் இதுவரை தாயக மக்களுக்கும், தாயகத்திற்கும் செய்துள்ள சேவைகள், நலத்திட்டங்கள் உள்ளிட்ட பல்வேறு நகர்நலப் பணிகள் குறித்தும், அவற்றுக்காக செலவிடப்பட்ட நிதி பற்றியும் விளக்கிப் பேசினார்.
உலக காயல் நல மன்றங்களின் நன்முயற்சியால், உயர்கல்விக்கான கூட்டமைப்பாக இக்ராஃ கல்விச் சங்கம் துவக்கப்பட்டு - இறையருளால் நன்முறையில் கல்விச்சேவைகள் செய்து வருவது போல், அனைத்து மன்றங்களின் ஒன்றுபட்ட கருத்துடன் ஷிஃபா ஹெல்த் அன்ட் வெல்ஃபர் அசோஸியேஷன் துவக்கப்பட்டுள்ளதையும், அதன் திட்டங்கள் மற்றும் செயல்பாடுகள் குறித்தும் அவர் விவரித்துப் பேசினார்.
நெடுந்தொலைவில் இருந்தபோதிலும், நகர்நலன் கருதி ஜித்தா காயல் நற்பணி மன்றத்தின் உறுப்பினர்களாக தம்மை ஆக்கிக்கொண்டு, முறையாக சந்தா தொகைகளையும் நிலுவையின்றி செலுத்தி வரும் அனைத்து மண்டலங்களின் உறுப்பினர்களுக்கும் அவர் மன்றத்தின் சார்பில் நன்றி கூறினார்.
பின்னர், அண்மையில் நடைபெற்ற - மன்றத்தின் 30ஆவது பொதுக்குழுக் கூட்டத்தின்போது சமர்ப்பிக்கப்பட்ட மன்ற நிதிநிலையறிக்கையின் ஒளிநகல் அனைவருக்கும் வழங்கப்பட்டது. அதனடிப்படையில், அப்ஹா பகுதியிலிருக்கும் மன்ற உறுப்பினர்களான உமர் அப்துல் காதிர், கே.எம்.செய்யித் அஹ்மத் கபீர், மஹ்மூத் ஸாலிஹ், ஜாஃபர் ஸாதிக், முஹ்யித்தீன் அப்துல் காதிர், ஃபைஸல் ஆகியோரும், ஜித்தாவிலிருந்து வந்திருந்த - மன்றத்தின் செயற்குழு உறுப்பினர் சொளுக்கு எஸ்.எம்.ஐ.செய்யித் முஹம்மத் ஸாஹிப், பொதுக்குழு உறுப்பினர்குளான எம்.என்.மஹ்மூத் ழஹ்ஹாக், சட்னி எஸ்.ஏ.கே.முஹம்மத் உமர் ஒலி, பொறியாளர் எல்.கே.ஜி.எம்.முஹம்மத் ஸுலைமான் ஆகியோரும் கருத்துரை வழங்கினர்.
இக்கூட்டத்தில், மன்றத்தின் புதிய உறுப்பினர்களாக சில காயலர்கள் - முறையாக சந்தா செலுத்தி தம்மை இணைத்துக்கொண்டனர். கூட்ட ஏற்பாடுகளை, காயல் இல்ல நண்பர்கள் நல்ல முறையில் செய்திருந்தனர்.
இவ்வாறு, ஜித்தா காயல் நற்பணி மன்றத்தின் சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தகவல் & படங்கள்:-
சட்னி எஸ்.ஏ.கே.செய்யது மீரான்
செயலாளர்
காயல் நற்பணி மன்றம்.
ஜித்தா - சஊதி அரபிய்யா |