நகராட்சிப் பணிகள் குறித்து - பொதுமக்களுக்கு எழும் பல்வேறு கேள்விகளை தகவலறியும் உரிமை சட்டத்தின் கீழ், பொதுமக்கள் திரளாகச் சென்று கேட்பதென, தகவலறியும் உரிமை நாளன்று நடைபெற்ற ‘மெகா’ அமைப்பின் கலந்தாலோசனைக் கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டுள்ளது.
கூட்ட நிகழ்வுகள் குறித்து, ‘மெகா’ செய்தி தொடர்பாளர் எஸ்.கே.ஸாலிஹ் வெளியிட்டுள்ள அறிக்கை:-
தகவலறியும் உரிமை நாளான இம்மாதம் 25ஆம் தேதியன்று, மக்கள் உரிமை நிலைநாட்டல் & வழிகாட்டு அமைப்பு - MEGA சார்பில், காயல்பட்டினம் தைக்கா பஜாரிலுள்ள அதன் அலுவலகத்தில் கலந்தாலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
இறைமறை வசனங்களுடன் துவங்கிய இக்கூட்டத்திற்கு, ‘மெகா’ சர்வதேச தலைமை ஒருங்கிணைப்பாளர் சாளை ஸலீம் தலைமை தாங்கி, தலைமையுரையாற்றினார்.
தமிழக அரசு காயல்பட்டினத்திற்கு அளித்துள்ள உயிரி எரிவாயு மைய திட்டத்திற்கான இடந்தேடல் தொடர்பாக, அமைப்பின் சார்பில் கடந்த வெள்ளிக்கிழமை (கூட்ட நாளன்று) ஜும்ஆ தொழுகைக்குப் பின் வெளியிடப்பட்ட 1/2013 என்ற வெளியீட்டு எண்ணைக் கொண்ட பிரசுரம் குறித்தும், அதுகுறித்த பொதுமக்களின் கருத்துக்கள் குறித்தும் அவர் பேசினார்.
துவங்கிய வேகத்தில் தூங்கி விடாமல், பொதுமக்கள் நலன் கருதி - ‘மெகா’ அமைப்பை உயிரோட்டத்துடன் தொய்வின்றி வழிநடத்திச் செல்ல வேண்டியது ஊரிலிருக்கும் நகர்நல ஆர்வலர்களின் கடமை என்று கூறிய அவர், நகர்நலனில் தன்னலமற்ற அக்கறை கொண்ட அனைவரையும் இனங்கண்டு களப்பணியில் இணைத்துக்கொள்ள வேண்டியது ‘மெகா’ அங்கத்தினரின் கடமை என்றும் கூறினார்.
அடுத்து பேசிய எஸ்.கே.ஸாலிஹ், ‘மெகா’வின் அன்றாட அலுவலக நடவடிக்கைகள், அலுவலகத்திற்கு வந்து செல்வோரிடம் இருக்க வேண்டிய பண்புகள், பொதுமக்களிடம் நடந்துகொள்ள வேண்டிய முறைகள், பொதுவாழ்வில் கருத்தால் மாறுபட்டிருந்தாலும் - மாற்றுக் கருத்துடையோரின் தனிமனித வாழ்வைக் களங்கப்படுத்தும் பேச்சுக்களோ, நடவடிக்கைகளோ ‘மெகா’ அங்கத்தினரிடம் ஒருபோதும் இருக்கக் கூடாது என்றும், குறிப்பாக - ‘மெகா’ அலுவலகத்தில் அதுபோன்ற நடவடிக்கைகள் சிறிதளவும் நிகழாமல் பார்த்துக்கொள்ள வேண்டியது அனைவரின் கடமை என்றும் கூறினார்.
பின்னர், கூட்டத்தில் கலந்துகொண்டோர் சிறிது நேரம் கருத்துப் பரிமாற்றம் செய்தனர். அதனைத் தொடர்ந்து, பின்வரும் தீர்மானங்கள் உட்பட முக்கிய தீர்மானங்கள் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது:-
தீர்மானம் 1 - அலுவலக நடவடிக்கைகள்:
‘மெகா’ அலுவலகத்தில், அமைப்பின் நோக்கமல்லாத அல்லது அமைப்பின் நோக்கத்துடன் பொருந்தாத எந்தச் செயலுக்கும் இடமளிக்கக் கூடாது என இக்கூட்டம் தீர்மானிக்கிறது.
தீர்மானம் 2 - தற்காலிக நிர்வாகிகள்:
‘மெகா’விற்கு விரைவில் பொதுக்குழுவைக் கூட்டி, நிர்வாகிகளையும், செயற்குழுவினரையும் முறைப்படி தேர்ந்தெடுப்பதெனவும், அதுவரை ஹாஜி எஸ்.ஏ.முஹ்யித்தீன் அவர்களும், அவர் இல்லாத நேரங்களில் ஜனாப் பி.எம்.ஏ.ஸதக்கத்துல்லாஹ் அவர்களும் அமைப்பின் கடிதப் போக்குவரத்துகளில் கைச்சான்றிடுவதற்கு இக்கூட்டம் அனுமதியளிக்கிறது.
தீர்மானம் 3 - இலச்சினை & முழக்கம்:
‘மெகா’ அமைப்பிற்கு இலச்சினை மற்றும் முழக்கத்தை விரைவாக வடிவமைத்து இறுதி செய்ய இக்கூட்டம் தீர்மானிக்கிறது.
தீர்மானம் 4 - அரசுப்பதிவு:
‘மெகா’ அமைப்புக்கு சட்ட ஆலோசகர், கணக்குத் தணிக்கையாளர் ஆகியோரை நியமித்து, அமைப்பை முறைப்படி அரசுப்பதிவு செய்வதென்றும், அதன் தொடர்ச்சியாக அமைப்பிற்கு நிரந்தரமாக லெட்டர் பேட், நன்கொடை ரசீது உள்ளிட்டவற்றை அச்சிட்டு ஆயத்தப்படுத்திக் கொள்வதென்றும் இக்கூட்டம் தீர்மானிக்கிறது.
தீர்மானம் 5 - செய்தி தொடர்பாளர்கள் நியமனம்:
‘மெகா’ அமைப்பின் சர்வதேச செய்தி தொடர்பாளராக உள்ள ‘கவிமகன்’ காதர் அவர்கள் அதே பொறுப்பில் தொடர அனுமதியளிப்பதோடு, அமைப்பின் உள்ளூர் செய்தி தொடர்பாளராக எஸ்.கே.ஸாலிஹ் அவர்களை நியமித்து இக்கூட்டம் தீர்மானிக்கிறது.
தீர்மானம் 6 - தகவலறியும் உரிமை நாள்:
இக்கூட்டம் நடைபெறும் நாளான அக்டோபர் 25ஆம் தேதி “தகவலறியும் உரிமை நாள்” என்பதைக் கருத்திற்கொண்டு, நகராட்சிப் பணிகளில் பொதுமக்களுக்குள்ள சந்தேகங்களைக் கேள்விகளாக வடிவமைத்து, அமைப்பின் சார்பில் காயல்பட்டினம் நகராட்சிக்குத் திரளாகச் சென்று, தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் அக்கேள்விகளை நகராட்சி தகவல் அலுவலரிடம் அளிப்பதென இக்கூட்டம் தீர்மானிக்கிறது.
மேற்கண்ட தீர்மானங்கள் உட்பட பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. நன்றியுரையைத் தொடர்ந்து, துஆ - ஸலவாத் - கஃப்பாராவுடன் கூட்டம் இறையருளால் இனிதே நிறைவுற்றது.
இக்கூட்டத்தில் ‘மெகா’ அமைப்பினர் திரளாகக் கலந்துகொண்டனர்.
இவ்வாறு, ‘மெகா’ செய்தி தொடர்பாளர் எஸ்.கே.ஸாலிஹ் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
படங்கள்:
ஹிஜாஸ் மைந்தன்
செய்தியாளர் - காயல்பட்டணம்.காம் |