மைக்ரோ காயல் அறக்கட்டளை மற்றும் ஷிஃபா ஹெல்த் அன்ட் வெல்ஃபர் அசோஸியேஷன் அமைப்புகள் இணைந்து நடத்திய அக்யூபங்சர் மருத்துவ இலவச முகாமில், 110 பேர் மருத்துவ ஆலோசனை பெற்றுள்ளனர். இதுகுறித்த செய்திக்குறிப்பு வருமாறு:-
மைக்ரோகாயல் அறக்கட்டளை மற்றும் ஷிஃபா ஹெல்த் அன்ட் வெல்ஃபர் அசோஸியேஷன் அமைப்புகள் - நாகர்கோவில் அட்டாமா மருத்துவக் குழுவினருடன் இணைந்து, இம்மாதம் 20ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமையன்று, அக்யூபங்சர் இலவச மருத்துவ முகாமை, காயல்பட்டினம் எல்.கே.மேனிலைப்பள்ளி வளாகத்தில், காலை 09.30 மணி முதல் மாலை 05.00 மணி வரை நடத்தின.
மைக்ரோகாயல் அறக்கட்டளை செயலாளரும், ஷிஃபா ஹெல்த் அன்ட் வெல்ஃபர் அசோஸியேஷன் செயற்குழு உறுப்பினருமான சாளை முஹம்மத் முஹ்யித்தீன் - முகாம் துவக்க நிகழ்ச்சிகளை நெறிப்படுத்தினார். மைக்ரோகாயல் அறங்காவலர் குழு உறுப்பினர் ஹாஃபிழ் எம்.எம்.முஜாஹித் அலீ இறைமறை வசனங்களையோதி நிகழ்ச்சிகளைத் துவக்கி வைத்தார். மைக்ரோகாயல் அறங்காவலர் குழு உறுப்பினரும், ஷிஃபா துணைத்தலைவருமான ஜெ.செய்யித் ஹஸன் அனைவரையும் வரவேற்றுப் பேசினார். மைக்ரோகாயல் அறக்கட்டளை தலைவர் டி.ஏ.எஸ்.முஹம்மத் அபூபக்கர் தலைமையுரையாற்றினார்.
தற்காலத்தில் மாற்றுமுறை மருத்துவத்தின் தேவை, அதை முறையாகப் பயன்படுத்த வேண்டியதன் அவசியம் குறித்து அவர் பல அறிவுரைகளை வழங்கினார்.
அடுத்து, இம்முகாமை இணைந்து நடத்தும் மூன்று அமைப்புக்களைப் பற்றியும் சாளை முஹம்மத் முஹ்யித்தீன் அறிமுகவுரையாற்றினார்.
கடந்த ஒன்றரை வருடத்திற்கும் மேலாக, பொருளாதாரத்தில் நலிவுற்ற 40க்கும் மேற்பட்ட மக்களுக்கு மைக்ரோகாயல் அறக்கட்டளை மூலம் ரூபாய் 14 லட்சம் வரை மருத்துவ உதவி வழங்கப்பட்டுள்ளதாகவும், காயல்பட்டினம் நகரின் ஏழை-எளிய நோயாளிகளுள் முதற்கட்டமாக 50 பேருககு ‘காயல் மெடிக்கல் கார்ட் - KMC’ வழங்கப்பட்டு, அதனடிப்படையில் அவர்கள் மருத்துவ உதவிகளைப் பெற்று வருவதாகவும் அவர் கூறினார்.
கல்விக்கென்று இக்ராஃ கல்விச் சங்கம் துவக்கப்பட்டு செயலாற்றி வருவதைப் போல், மருத்துவத்திற்கு ஷிஃபா ஹெல்த் அன்ட் வெல்ஃபர் அசோஸியேஷன் அனைத்து மருத்துவ உதவிகளையும் - உலக காயல் நல மன்றங்களை ஒருங்கிணைத்து, மிகச் சிறப்பாக செயலாற்றி வருவதாகக் கூறிய அவர், ATAMA அக்யூபங்சர் மருத்துவக் குழுவையும் அறிமுகப்படுத்தி பேசினார்.
அடுத்து, மாற்றுமுறை மருத்துவம் குறித்து நாகர்கோவில் ஸஃபா அக்யூபங்சர் மருத்துவமனையைச் சார்ந்த மருத்துவர் மு.சாதிக் மாற்று சிறப்புரையாற்றினார்.
இஸ்லாம் விதித்துள்ள வணக்க முறைகளிலும், வாழ்க்கை முறைகளிலும் பொதிந்துள்ள மருத்துவ அம்சங்களைக் குறிப்பிட்டுப் பேசிய அவர், மனிதனின் அன்றாட உணவுப் பழக்கவழக்கங்கள், உறங்கும் நேரம் ஆகியவற்றில் பொதுவாக மேற்கொள்ளப்படும் தவறுகளையும், அவற்றின் பக்கவிளைவுகளையும் விளக்கிப் பேசிய அவர், சரியான முறையில் அவற்றைச் செய்தால் கிட்டும் நற்பலன்கள் குறித்தும் விளக்கினார்.
உரைகளையடுத்து, மருத்துவ முகாம் முறைப்படி துவங்கியது. முகாம் ஏற்பாட்டுக் குழுவின் அறிவிப்பைக் கருத்திற்கொண்டு முன்பதிவு செய்தவர்களுக்கு மட்டும் அனுமதி வில்லைகள் வழங்கப்பட்டது. அட்டாமா மருத்துவக் குழுவின் 07 அக்யூபங்சர் மருத்துவர்கள் அவர்களுக்கு மருத்துவ ஆலோசனை மற்றும் அக்யூபங்சர் மருத்துவ சிகிச்சையளித்தனர். பெண்களுக்கு பெண் மருத்துவர்களைக் கொண்டு திரை மறைவில் சிகிச்சையளிக்கப்பட்டது.
முகாம் நடைபெற்ற பள்ளி வளாகத்தில் அக்யூபங்சர் சிகிச்சை முறைகள் மற்றும் மாற்றுமுறை மருத்துவம் தொடர்பான - பல தலைப்புகளிலான நூற்களும், மாற்றுமுறை மருந்து வகைகளும் விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்தது. விரும்பியோர் வாங்கிச் சென்றனர்.
முன்பதிவு செய்தும் தாமதமாக முகாமுக்கு வந்தோர் மற்றும் முன்பதிவு செய்யாமல் வந்தோர் சிகிச்சை பெற இயலாமல் திரும்பிச் சென்றனர். மாலை 05.00 மணி வரை நடைபெற்ற இம்முகாமில், காயல்பட்டினம் நகரின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த 110 பேர் கலந்துகொண்டனர்.
முகாமின் இறுதியில் மருத்துவர்கள் மற்றும் தன்னார்வச் சேவைக்குழுவினருக்கு அன்பளிப்புப் பொருட்கள் வழங்கப்பட்டன.
ஷிஃபா ஹெல்த் அன்ட் வெல்ஃபர் அசோஸியேஷன் செயற்குழு உறுப்பினர் சாளை ஷேக் ஸலீம் நன்றி கூற, கஃப்பாரா துஆவுடன் முகாம் நிகழ்வுகள் யாவும் இறையருளால் இனிதே நிறைவுற்றன. எல்லாப்புகழும் அல்லாஹ்வுக்கே - அல்ஹம்துலில்லாஹ்!
முகாம் ஏற்பாடுகளை ஹாஃபிழ் என்.எஸ்.மொகுதூம் அலீ ஸாஹிப், எஸ்.அப்துல் வாஹித், சாளை பஷீர், ‘ஸ்டார் ரெடிமேட்ஸ்’ தமிழன் முத்து இஸ்மாஈல், சாளை முஹம்மத் முஹ்யித்தீன், ஹாஃபிழ். எம்.எம்.முஜாஹித் அலீ, எம்.ஏ.முஹம்மத் இப்றாஹீம் (48), ஹாஃபிழ் எச்.ஏ.செய்யித் இஸ்மாஈல் உள்ளிட்டோர் செய்திருந்தனர்.
இவ்வாறு, அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
படங்கள்:-
ஹிஜாஸ் மைந்தன்
செய்தியாளர் - காயல்பட்டணம்.காம்
மற்றும்
A.K.இம்ரான் |