காயல்பட்டினம் - சென்னை வழிகாட்டு மையம் (KCGC) அமைப்பின் சார்பில், ‘தி மெஸேஜ்’ ஆங்கிலப் படக்காட்சியுடன் ஈத்மிலன் - பெருநாள் ஒன்றுகூடல் நிகழ்ச்சி விமரிசையாக நடத்தப்பட்டுள்ளது. சென்வை வாழ் காயலர்கள் திரளாகக் கலந்துகொண்டுள்ளனர்.
இதுகுறித்து, அவ்வமைப்பின் செயலாளர் எஸ்.கே.ஷமீமுல் இஸ்லாம் வெளியிட்டுள்ள அறிக்கை:-
ஈத்மிலன் - பெருநாள் ஒன்றுகூடல்:
எல்லாம்வல்ல அல்லாஹ்வின் அளவிலாக் கருணையும், இணையிலாக் கிருபையும் அவன் திருப்பொருத்தம் நாடி வாழ்ந்திடும் அனைவர் மீதும் என்றென்றும் நிலவட்டுமாக, ஆமீன்.
புனித ஈதுல் அழ்ஹா - ஹஜ்ஜுப் பெருநாளை முன்னிட்டு, ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்த படி, காயல்பட்டினம் - சென்னை வழிகாட்டு மையத்தின் (KCGC) ஈத்மிலன் நிகழ்ச்சியான ‘தி மெசேஜ்’ திரைப்படத்துடன் கூடிய மார்க்க சொற்பொழிவு கூட்டம், அல்லாஹ்வின் மாபெருங்கிருபையால், சென்னை வடபழனியில் உள்ள ஆர்.கே.வி.ஸ்டூடியோவில் 27.10.2013 ஞாயிற்றுக்கிழமை மாலை 07.00 மணிக்குத் துவங்கி நடைபெற்றது. அல்ஹம்துலில்லாஹ்.
காயலர்கள் வருகை:
மக்ரிப் தொழுகைக்கு முன்பாகவே காயலர்கள் திரையரங்கு நோக்கி குடும்பத்துடன் சாரி சாரியாக சங்கமிக்கத் துவங்கினர்.
தொழுகை நிறைவேற்றம்:
ஆண்கள் அருகிலுள்ள ராஹத் பிளாஸாவின் 4ஆவது தளத்தில் உள்ள தொழுமிடத்திலும், பெண்கள் திரையரங்கின் வளாகத்தில் சிறப்பு ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பகுதியிலும் மக்ரிப் தொழுகையை ஜமாஅத்தாக (கூட்டாகத்) தொழுதனர்.
அரங்க இருக்கையமைப்புகள்:
தொடர்ந்து, திரையரங்கின் நுழைவாயிலில் நின்று கொண்டிருந்த KCGCயின் தன்னார்வத் தொண்டர்களிடம் நுழைவுச்சீட்டைக் காண்பித்து ஒவ்வொருவராக அரங்கினுள் சென்றனர். அரங்கில் போடப்பட்டிருந்த இருக்கைகளில் A முதல் H வரிசை வரை ஆண்களுக்கென்றும், J முதல் கடைசி வரை பெண்களுக்கென்றும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இருக்கை அமைப்புப்படி, முறையே ஆண்களும் பெண்களும் அமரத் தொடங்கினர். அரங்கிற்குள் நுழைந்தவர்களுக்கு தண்ணீர் புட்டிகள் வழங்கப்பட்டன. சரியாக 7 மணிக்கு நிகழ்ச்சிகள் துவங்கின.
மேடை நிகழ்ச்சிகள் துவக்கம்:
தி மெசேஜ் படம் திரையிடுவதற்கு முன்பாக, ஈத்மிலன் நிகழ்ச்சி துவங்கியது. மிகச் சுருக்கமாக நடத்தப்பட்ட இந்நிகழ்வில் KCGCயின் செயலாளர் எஸ்.கே.ஷமீமுல் இஸ்லாம் இறைமறை ஓதி துவக்கியதோடு, நிகழ்ச்சிகளையும் நெறிப்படுத்தினார்.
அடுத்து, இந்நிகழ்ச்சியில் சிறப்புச் சொற்பொழிவாற்ற வந்திருந்த மவ்லவீ யூஸுஃப் ஸித்தீக் மிஸ்பாஹீ, KCGCயின் தலைவர் ஆடிட்டர் ரிஃபாய், துணைத்தலைவர் ஸ்மார்ட் அப்துல் காதிர், செயற்குழு உறுப்பினர் எஸ்.இப்னு சுவூத் ஆகியோரை மேடையில் வந்தமருமாறு கேட்டுக் கொள்ளப்பட்டதை ஏற்று மேடையில் அமர்ந்தனர்.
செயலர் உரை:
பின்னர் ஈத்மிலனில் கலந்துகொள்ள வந்தவர்கள் வரவேற்கப்பட்ட பின், KCGCயின் கடந்தகால நிகழ்வுகள் மற்றும் சேவைகள் குறித்து சிறிய விளக்கத்தை அதன் செயலாளர் வழங்கினார்.
சென்னை வாழ் காயலர்களுக்கு, KCGCயில் இணைந்து உடல் உழைப்பு, அறிவாற்றல் மற்றும் தேவைப்படும் பொருளாதார உதவிகளில் பணியாற்ற முன்வருமாறு அப்போது அவர் அழைப்பு விடுத்தார்.
நிகழ்ச்சிக்கு வருகை தந்த காயலர்களுல் உறுப்பினராக இணைய விரும்பும் ஆண்கள் KCGCயின் செயற்குழு உறுப்பினரான நெட்காம் புஹாரியிடம் பெயர், தொலைபேசி எண் மற்றும் ஆண்டுச் சந்தா ரூ.500ஐ வழங்கி இணைந்து கொள்ளலாம் என அறிவிப்பு செய்யப்பட்டது.
தலைவர் உரை:
அதனைத் தொடர்ந்து KCGCயின் தலைவர் ஆடிட்டர் ரிஃபாய், அதே போன்ற கருத்துக்களை வலியுறுத்தி சில நிமிடங்கள் உரையாற்றினார்.
சிறப்பழைப்பாளர் உரை:
அடுத்து, சிறப்பழைப்பாளர் மவ்லவீ யூஸுஃப் ஸித்தீக் மிஸ்பாஹீ, “குடும்ப உறவுகளும், அதற்குத் தேவையான செயல்களும்” என்ற தலைப்பில் தகுந்த ஆதாரங்கள், புள்ளிவிவரங்களுடன் கருத்துச் செறிவுள்ள - தற்காலத்திற்கு மிகவும் பயனுள்ள சொற்பொழிவை நிகழ்த்தினார்.
‘தி மெஸேஜ்’ படம் குறித்து அறிமுகவுரை:
பின்னர் அனைவராலும் ஆவலுடன் எதிர்பார்க்கப்பட்ட ‘தி மெசேஜ்’ திரைப்படம் குறித்த சுருக்கமான தகவல்களை எஸ்.கே.ஷமீமுல் இஸ்லாம் வழங்கியதோடு படத்தில் வரும் நடிகர்களை நடிகர்களாகவே காணவேண்டும் என்றும், உண்மையான நபித்தோழர்களாக அவர்களைப் புரிந்து கொள்ளாமல் - அதில் இடம்பெறும் நிகழ்வுகளை மட்டுமே வரலாற்றை ஒட்டியதாக எடுத்துக்கொள்ள வேண்டுமெனவும், அந்த நபித்தோழர்கள் அல்லாஹ்வால் பொருந்திக் கொள்ளப்பட்ட நல்லோர்களாவர் என்றும் கூறினார்.
அத்துடன் இப்படத்தின் தமிழ் ஒலிசேர்க்கையை (Dubbing) தயாரித்து வழங்கிய - மாஸ் கம்யூனிகேஷன் உரிமையாளரும் KCGCயின் உறுப்பினருமாகிய முஹம்மத் தம்பி அரங்கில் அனைவருக்கும் அறிமுகம் செய்து வைக்கப்பட்டார்.
‘தி மெஸேஜ்’ படம் திரையிடல்:
தொடர்ந்து, 3 மணி நேரம் ஓடும் அளவுள்ள தி மெசேஜ் திரைப்படத்தின் சுருக்கப்பட்ட (Abridged) 1.30 மணி நேர தமிழ் ஒலிசேர்க்கை காட்சிகள் அரங்கில் திரையிடப்பட்டன.
மொத்தம் 250 இருக்கைகள் கொண்ட அரங்கில் ஆண்கள், பெண்கள், குழந்தைகள் என 230க்கும் அதிகமானோர் அமர்ந்து, இப்படத்தை மன மகிழ்வுடனும், உணர்ச்சிப் பெருக்குடனும் கண்டு களித்தனர். இந்நிகழ்ச்சிக்கான நுழைவு கட்டணமாக தனி நபர் ஒருவருக்கு ரூ.100 என வசூலிக்கப்பட்டது. முஸ்லிமல்லாத சில நண்பர்கள் தாம் இப்படத்தைக் காண்பதற்காக விருப்பத்துடன் வந்துள்ளதாக கூறியதையடுத்து நுழைவுக் கட்டணம் ஏதுமின்றி அவர்கள் அனுமதிக்கப்பட்டனர்.
சிற்றுண்டி:
படத்தின் நடுவே இடைவேளையிடப்பட்டு, அந்நேரத்தில் தேனீர், சமோசா மற்றும் சிறியோருக்கான குளிர்பானங்கள் வழங்கப்பட்டன.
காயலர்கள் சந்திப்பு:
காட்சிகள் முடிந்ததும், வெளியில் வந்த காயலர்கள் தமது உறவினர்களைக் கண்ட மகிழ்ச்சியில் சிறிது நேரம் அளவளாவிய பின் அவரவர் இல்லம் நோக்கித் திரும்பினர்.
இந்நிகழ்ச்சிகளுக்கான ஏற்பாடுகளை, KCGCயின் செயற்குழு உறுப்பினர்களான ஆடிட்டர் ரிஃபாய் (தலைவர்), எஸ்.இப்னு சுவூத், குளம் முஹம்மத் தம்பி (பொருளாளர்), ஸ்மார்ட் அப்துல் காதிர், பல்லாக் சுலைமான் (துணைச் செயலாளர்), சொளுக்கு முஹம்மத் நூஹ், நெட்காம் புகாரீ, எஸ்.கே.ஷமீமுல் இஸ்லாம் (செயலாளர்) மற்றும் அதன் உறுப்பினர்களான மாஸ் கம்யூனிகேஷன் முஹம்மத் தம்பி, கிதுரு முஹ்யித்தீன் ஆகியோர் செய்திருந்தனர்.
இவ்வாறு, KCGC செயலாளர் எஸ்.கே.ஷமீமுல் இஸ்லாம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
படங்கள்:
குளம் முஹம்மத் தம்பி |