தாய்லாந்து காயல் நல மன்றம் - தக்வா அமைப்பின் சார்பில், இன்பச் சுற்றுலாவுடன் ஹஜ் பெருநாள் ஒன்றுகூடல் நிகழ்ச்சி நடத்தி முடிக்கப்பட்டுள்ளது. உறுப்பினர்கள் திரளாகப் பங்கேற்றுள்ளனர்.
இதுகுறித்து, அவ்வமைப்பின் செயலாளர் ஹாஜி எம்.எஸ்.செய்யித் முஹம்மத் வெளியிட்டுள்ள அறிக்கை:-
பெருநாள் இன்பச் சுற்றுலா:
நடப்பாண்டு ஹஜ் பெருநாளை முன்னிட்டு, தாய்லாந்து காயல் நல மன்றத்தின் இன்பச் சுற்றுலா பாங்காக்கிற்கு வட கிழக்கே 120 கி.மி. தொலைவில் காவ் யாய் மலையடிவாரத்தில் அமைந்துள்ள நகோன் நயோக் நீர் வீழ்ச்சி விடுமுறை நகரில் இம்மாதம் 18, 19, 20 தேதிகளில் (வெள்ளி, சனி, ஞாயிறு) நடைபெற்றது. தம் குடும்பத்தினருடன் பங்கேற்ற - 5 உறுப்பினர்கள் உட்பட மன்றத்தின் 37 உறுப்பினர்கள் இந்த ஒன்றுகூடல் சுற்றுலாவில் கலந்துகொண்டனர்.
கொட்டும் மழைக்கிடையே புறப்பாடு:
முன்னதாக, வெள்ளி மாலை 05.00 மணியளவில் SUN MOON STAR இல்லத்தில் அனைவரும் கூடினர். அங்கிருந்து 3 வேன்கள் மற்றும் 2 கார்களில் ஏற்கனவே வாங்கப் பட்டிருந்த 3 நாட்களுக்கான உணவுப் பொருட்கள் மற்றும் 3 சமையல் கலை வல்லுநர்களுடன் மிரட்டும் புயல் மற்றும் மழையைக் கொண்ட வானிலைச் சூழலில் புறப்பட்டனர். வெள்ளிக்கிழமைக்கே உரித்தான மாலை நேர போக்குவரத்து நெரிசலினால் சேருமிடம் அடைய இரவு 08.30 மணியாகிவிட்டது.
தனித்தனி அறைகளில் தஞ்சம்...
12 தனி அறைகள் கொண்ட தங்கும் சொகுசு குடிலில் குடும்பத்தினர் தனித்தனியாகவும், இளைஞர்கள், மூத்தோர் 4- 5 பேர் கொண்ட குழுவாகவும் அறைகளில் தங்க வைக்கப்பட்டனர்.
தேனீர் வினியோகம்...
குளிர்ந்த வானிலையைக் கருத்திற்கொண்டு, துவக்கமாக அனைவருக்கும் சூடான தேநீர் வினியோகிக்கப்பட்டது.
வினாடி-வினா போட்டி:
அதனைத் தொடர்ந்து, பொது அறிவுப் போட்டியில் ஆர்வமுள்ள 20 நபர்கள் 4 அணிகளாக தெரிவுசெய்யப்பட்டு, வினாடி வினா போட்டி நடத்தப்பட்டது.
பாரம்பரிய நசுவல்:
சிலரது சுவையான பதில்கள், வேறு சிலரின் யூகத்திலான பதில்கள், இன்னும் சிலரின் தப்புத் தப்பான பதில்கள், மேலும் வெற்றியை நெருங்கி விட்டிருந்த அணி திடீரென தோற்றதால் நடுவரில் ஒருவரின் துணை கொண்டு கள்ளத்தனம் நடந்ததாக காயல்பட்டினம் பாரம்பரிய முறைப்படி நசுவி - தாங்கள்தான் வென்றோம் என ஆர்ப்பாட்டம் செய்து அமர்களப் படுத்தியது எல்லாம் சின்னப் பிள்ளைகளாக இருந்தபோது ஊரில் பட்டாளம் போட்டு விளையாடிய நினைவுகளை மலரச் செய்தது. (நல்ல வேளை... நடுவர் தாக்கப்படவில்லை!)
இரவுணவு:
இவ்வாறாக மாலை மற்றும் இரவுப் பொழுது வந்த வேகத்தில் கழிந்து கொண்டிருந்த நிலையில், அனைவருக்கும் சப்பாத்தி, கண்களில் நீர் முட்டும் காரத்துடன் சுவையான சுக்கா வறுவல் என இரவுணவு அமர்க்களமாகப் பரிமாறப்பட்டது. அனைத்தையும் முடித்துவிட்டு, உறங்கப் போக நள்ளிரவு 01.00 மணியாகிவிட்டது.
அச்சமூட்டிய இடி - மழை...
நடு இரவில் கடும் இடியுடன் மழை கொட்டோ கொட்டென கொட்டத் துவங்கிவிட்டது. காலையில் அனைவருக்கும் வீட்டுக் காவல்தான் என அஞ்சிய வண்ணம் பயணக் களைப்பில் அனைவரும் உறங்கி விட்டனர்.
அருவியில் ஆனந்தக் குளியல்...
காலைத் தொழுகைக்கு எழும் போது தூறல் போட்டுக் கொண்டிருந்தாலும் வெளியில் போக இயலும் என்ற நம்பிக்கை துளிர்விட்டது. தேநீர் அருந்திய பின் இங்குள்ள அருவிகளில் பெரியதான சரிகா அருவிக்கு அனைவரும் சென்றனர்.
குற்றாலம் தண்ணி வாங்கனும்!
எங்கும் தூய்மை, நேர்த்தியான பராமரிப்பு, மனத்தைக் கொள்ளை கொள்ளும் எழில்வடிவப் பூங்கா, தூய்மையான கழிவறைகள், சீரான நடைபாதைகள், அருவி வரை மலை மீது ஏற பாதுகாப்பான படிக்கட்டுகள், தெளிவான நீர் வீழ்ச்சி என, அப்பப்பா! அருமையிலும் அருமை.
அருவி சுற்றுவட்டாரம் முழுக்க எங்குமே நாற்ற நெடிகளை உணர இயலவில்லை. அவ்வளவு சுத்தம். ஏன் நம் குற்றாலத்தில் இப்படியெல்லாம் செய்ய முடியவில்லை என நம்மவர்கள் பலரும் முணுமுணுத்ததை உணர முடிந்தது.
அவரவர் தகுதிக்கேற்ப பொழுதுபோக்கு:
பெண்கள், குழந்தைகள் கீழ்ப் பகுதியில் அமைந்துள்ள ஒதுக்கமான பகுதியில் இருந்த ஓடையிலும், மூத்தோர் - நடுவிலுள்ள சிறிய அருவியுடன் கூடிய தடாகத்திலும், சாகச விரும்பி இளைஞர்கள் உயரத்தில் உள்ள அருவியிலும் - தடாகத்திலும் குதித்தும் - குளித்தும் குதூகலமடைந்தனர்.
அடம்பிடித்த இளசுகள்...
புதுமணப் பெண்ணைக் கண்ட மணமகனைப் போல - அருவி தந்த சுகத்தினின்றும் பிரியவே விரும்பாது அடம்பிடித்த இளைஞர்களை வற்புறுத்தி அழைத்து வருவதற்குள் போதும், போதும் என்றாகிவிட்டது.
புதுமுறையில் டேபிள் டென்னிஸ்:
தாமதமாக பசியாறியதாலும், குளித்த களைப்பினாலும் குளுகுளு சாரல் மழை இன்பத்தில் பெரும்பாலானவர்கள் குட்டித் தூக்கத்திற்கு போய் விட, நரைத்த பின்பும் துள்ளும் இளைஞர்களோ டேபிள் டென்னிஸ் விளையாடிக் கொண்டிருந்தனர்.
(இம்முறையிலான டேபிள் டென்னிஸ் விளையாட்டை ஒலிம்பிக்கில் இணைப்பது குறித்து உரியவர்கள் பரிசீலிக்கலாம். பார்க்க: படங்கள்.)
மட்டன் பிரியாணி:
மதிய வேளையில் அனைவருக்கும் இறைச்சியுடன் கூடிய - சுவைமிக்க பிரியாணி மதிய உணவாகப் பரிமாறப்பட்டது.
படகுச் சவாரி:
அதனைத் தொடர்ந்து, BALL BALANCING IN SPOON ON MOUTH போட்டி மட்டும் நடைபெற்றது. குழந்தைகளுக்கு பலூன் உடைக்கும் போட்டி, ஓட்டப்பந்தயம் என சில போட்டிகளும் நடத்தப்பட்டன.
உணவின் மஸ்தில் சிறிது களைப்பாறிவிட்டு, அருகிலுள்ள நதியில் துடுப்பைக் கொண்டு ஓட்டும் 4 படகுகளில் அனைவரும் சவாரி செய்யச் சென்றனர்.
மஃரிப், இஷா தொழுகை:
பயணத்தை முன்னிட்டு, மக்ரிப் - இஷா தொழுகைகள் ஜம்உவாக (சேர்த்து) தொழப்பட்டது. தொழுகைக்குப் பின் மசாலா வடை அனைவருக்கும் வழங்கப்பட்டது.
சிறுவருக்கான போட்டிகள்:
சிறுவர்களுக்கான மனனப் போட்டி, அவர்களைப் பேச வைத்தல், பாட்டு பாட வைத்தல் போன்ற நிகழ்வுகள் அடுத்தடுத்து நடைபெற்றன. திறமையானவர்களை தலைவர் வாவு சம்சுத்தீன் ஹாஜி அவர்கள் பாராட்டினார்கள்.
சிக்கன் பார்பிக்யூ:
நிகழ்விடத்திலேயே அனைவருக்கும் சூட்டுக் கறி BBQ சுடச் சுடப் பரிமாறப்பட்டது.
பாதுகாப்பு ஏற்பாடுகளுடன் மீண்டும் வினாடி-வினா:
மீண்டும் வினாடி வினாப் போட்டிக்காக 4 அணிகள் தெரிவு செய்யப்பட்டு, தகுந்த பாதுகாப்பு ஏற்பாடுகளுடன் நடத்தப்பட்டது. மொத்தம் 6 சுற்றுகளாக நடைபெற்ற இப்போட்டியில், முதல் 4 சுற்றுகள் வரை கடை நிலையில் இருந்த வைரக் கல் அணி 5ஆவது சுற்றில் அதிக மதிப்பெண் பெற்று நீலக் கல் அணியுடன் சம நிலையை அடைந்தது. இறுதியில் நடைபெற்ற சமன் முறிவு கேள்வியில் அசுர விரைவில் பதிலைச் சொல்லி வெற்றிக் கனியையும் சுவைத்தது வைரக்கல் அணி.
இரவுணவு:
இரவு உணவாக தந்தூரி சிக்கன், நான் ரொட்டி அனைவருக்கும் சூடாகவும், சுவையாகவும் பறிமாறப்பட்டது.
மீண்டும் அருவிக்குளியல்...
ஞாயிறு காலையில் இளைஞர்கள் அனைவரும் மீண்டும் அருவிக்குக் குளிக்கச் சென்றுவிட்டனர். காலை உணவிற்குப் பின், அருகிலுள்ள சுற்றுலாப் பூங்காவிற்கு அனைவரும் சென்றனர்.
கால்பந்து: இளமை திரும்பிய முதியோர்:
அங்குள்ள மைதானத்தில் கால்பந்துப் போட்டி நடைபெற்றது. தலைவர் சம்சுத்தீன் ஹாஜி தலைமையேற்ற அணி 3க்கு 1 என்ற கோல் கணக்கில் வெற்றிபெற்றது. கிழட்டுப் பருவத்தை எட்டிய பிறகும் திறமையுடன் விளையாடிய தலைவர் உள்ளிட்ட அனைவரும் உறுப்பினர்களால் பாராட்டப்பட்டனர்.
ஆற்றுக் குளியல்:
பின்னர், பூங்காவின் மையப் பகுதியில் ஓடும் ஆற்றில் இன்பக் குளியலில் இறங்கி, பகல் வரை நேரத்தைக் கழித்தனர்.
பாரம்பரிய முறைப்படி மதிய உணவு:
கமகமக்கும்காயல் நெய்ச்சோறு, களறிக் கறி, கத்திரிக்காய் மாங்காய் பருப்பு என மதிய உணவு அமர்க்களப்பட்டது.
இளைஞர் பல்சுவை நிகழ்ச்சிகள்:
நிகழ்வில் பங்கேற்ற இளைஞர்கள், நடிப்பு, நகைச்சுவை, பலகுரல் பேச்சு என பல்சுவை நிகழ்ச்சிகளால் பார்வையாளர்களின் கவனத்தைக் கவர்ந்தனர்.
பொதுக்குழுக் கூட்டம்:
சிறிது ஓய்விற்குப் பின், அருகிலுள்ள அணைக்கு அனைவரும் சென்றனர். அங்குள்ள பூங்காவில் தக்வாவின் பொதுக் குழுக் கூட்டம் நடைபெற்றது.
ஹோலி ஜெம்ஸ் எம்.எஸ்.முஹம்மத் இப்றாஹீம் ஹாஜி முன்னிலை வகித்தார். ஹாஃபிழ் எம்.ஐ.முஹம்மத் முஹ்யித்தீன் கிராஅத் ஓதி, கூட்டத்தைத் துவக்கி வைத்தார்.
தலைமையுரை:
தலைவர் வாவு சம்சுத்தீன் ஹாஜி தலைமையுரையாற்றினார். அவரது உரைச்சுருக்கம் வருமாறு:-
இந்தச் சுற்றுலா இவ்வளவு இனிமையாக அமைய இதற்காக உழைத்த தம்பி எம்.எச்.புஹாரி, எம்.எச்.அபுல் மஆலி, கம்பல்பக்ஷ் அஹ்மத் இர்.பான், என்.எஸ்.ஷேக், குறிப்பாக வாவு என்.எஸ்.காதர் சாஹிப், சூஃபீ ஹுஸைன், சோனா காதர் உள்ளிட்ட அனைவருக்கும் என்னுடைய பாராட்டுதல்களையும், நன்றியையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
இந்த மாதிரி ஒன்று கூடல்கள் மூலமாகத்தான் நம்மில் எத்தனை பேருக்கு என்னென்ன கலைத்திறமைகள் உள்ளன என்ற உண்மைகள் தெரிய வருகின்றன.
>> பெரிய படிப்பு இல்லாதவர்கள் கூட பொது அறிவு வினாடி வினா போட்டியில் அசத்தியது
>> சென்ற ஆண்டு பல ஆயிரங்கள் செலவழித்து இந்தியாவிலிருந்து வந்த பலகுரல் மன்னன் மாதிரி நம்மிடையேயும் பலகுரல் மன்னன் ஒருவர் ஒளிந்திருப்பது
>> நகைச் சுவைக் கதைகளை நயமாக எடுத்துரைக்கும் திறன் பெற்றிருப்பவர்கள்
>> வாழ்வில் மறக்க முடியாத சில நிகழ்வுகளை நினைவில் வைத்து, அதை நடிப்புடன் நம்மிடையே பகிர்ந்துகொண்டு நம்மை மகிழ்விக்கும் ஆற்றல் பெற்றவர்கள்
என இப்படிப் பல கலைத் திறமைகள் வெளிக்கொணரப்படுகின்றன. மேலும் தொழில், வியாபாரச் சூழலிருந்து புத்துணர்வு பெற பயனுள்ள ஒரு விடுமுறையும் கிடைக்கின்றது.
ஊரிலுள்ள பல நலத் திட்டங்களில் நம் மன்றம் பங்கெடுக்க நீங்கள் இது வரையில் உதவியதைப் போன்று மேலும் உங்கள் ஆதரவும், ஆலோசனையும் துஆவும் என்றென்றும் தேவை.
இவ்வாறு, தலைவர் ஹாஜி வாவு எம்.எம்.ஷம்சுத்தீன் தலைமையுரையாற்றினார்.
செயலர் உரை:
அடுத்து, செயலாளர் ஹாஜி எம்.எஸ்.செய்யித் முஹம்மத் பேசினார். மன்றக் கருவூலத்தில் இருக்கும் நிதியை ஊரின் திட்டங்களுக்கு ஒதுக்குதல் தொடர்பாக அவர் விளக்கிப் பேசியதோடு, அது தொடர்பாக அங்கத்தினரின் கருத்துக்களையும் கேட்டார்.
ஊரில் நம் மக்களுக்கு உதவுதல் ஒரு புறமிருக்க, இங்கேயே இருக்கும் நம் அங்கத்தினர்களுக்கு அவ்வப்போது குறுகிய காலத் தொழில் கடன் கொடுத்து உதவ வேண்டும் என்ற கருத்து விவாதிக்கப்பட்டு, இதுகுறித்து இறுதி முடிவு செய்திட செயற்குழுவுக்கு அதிகாரமளிக்கப்பட்டது.
வரவு-செலவு கணக்கறிக்கை:
அடுத்து பேசிய மன்றப் பொருளாளர் என்.எஸ்.ஹனீஃபா, மன்றத்தின் இதுநாள் வரையிலான நிதிநிலையறிக்கையையும், எஸ்.எம்.பி.ஸூஃபீ ஹுஸைன் - நடப்பு சுற்றுலாவிற்கான நிதி வசூல் மற்றும் செலவறிக்கையையும் கூட்டத்தில் சமர்ப்பிக்க, கூட்டம் அதற்கு ஒருமனதாக ஒப்புதலளித்தது.
பரிசளிப்பு:
சுற்றுலாவில் கலந்து கொண்ட அனைத்து சிறுவர்களுக்கும் அன்பளிப்புப் பொருட்களும், போட்டிகளில் வென்றோருக்கு கவர்ச்சிகரமான பரிசுகளும் வழங்கப்பட்டன.
நிறைவில், இந்த சுற்றுலாவில் பங்கேற்ற 37 உறுப்பினர்களுள் 11 பேர் குலுக்கல் முறையில் தேர்வு செய்யப்பட்டு, சிறப்புப் பரிசுகள் வழங்கப்பட்டனர்.
கூட்ட நிறைவு:
இறுதியாக விளக்கு நூர் முஹம்மது நன்றி கூற, ஷாதுலி ஆலிம் துஆவுடன் கூட்டம் மற்றும் சுற்றுலா இறையருளால் இனிதே நிறைவடைந்தது.
கவலை தோய்ந்த திரும்பல்...
மக்ரிப் இஷா ஜம்உத் தொழுகைகுப் பின் அனைவருக்கும் தேநீர் பரிமாறப்பட்டது. பிறகு அனைவருக்கும் இரவிற்கான உணவு பொட்டலமாக வழங்கப்பட்டது. மாலை 07.30 மணியளவில் சுற்றுலாவை இனிதே முடித்துக்கொண்டு அனைவரும் கவலை தோய்ந்த முகங்களுடன் பாங்காக் நகர் புறப்பட்டுச் சென்றனர்.
இவ்வாறு, தாய்லாந்து காயல் நல மன்ற (தக்வா) அமைப்பின் செயலாளர் ஹாஜி எம்.எஸ்.செய்யித் முஹம்மத் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
படங்கள்:
M.H.புகாரீ
மற்றும்
கம்பல்பக்ஷ் எஸ்.ஏ.அஹ்மத் இர்ஃபான்
[செய்தி திருத்தப்பட்டது @ 09:23 / 02.11.2013] |