வங்கக் கடலில் நிலைகொண்டிருந்த குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நாகப்பட்டினம் அருகே சனிக்கிழமை (நவம்பர் 16) மதியம் கரையைக் கடந்தது. கரையைக் கடந்தபோது பல இடங்களில் பலத்த மழை பெய்தது.
இது குறித்து வானிலை ஆய்வு மைய அதிகாரிகள் கூறியது:
அந்தமான் கடல் பகுதிக்கு அருகில் கடந்த சில நாள்களுக்கு முன்னர் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானது. இது காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று, தமிழக கடலோரப் பகுதிக்கு அருகில் நிலைகொண்டிருந்தது.
இந்தக் காற்றழுத்த தாழ்வு மண்டலம் வெள்ளிக்கிழமை நிலவரப்படி, சென்னையில் இருந்து தென்கிழக்கே 530 கி.மீ. தொலைவிலும் நாகப்பட்டினத்தில் இருந்து தென்கிழக்கே 420 கி.மீ. தொலைவிலும் நிலைகொண்டிருந்தது.
இந்த நிலையில் இது நாகப்பட்டினத்துக்கு 40 கி.மீ. வடக்கில் சனிக்கிழமை மதியம் 1.30 மணியளவில் கரையைக் கடந்தது. காற்றழுத்த தாழ்வு மண்டலம் கரையைக் கடந்தபோது வடதமிழகத்தின் பல பகுதிகளில் தொடர் மழை பெய்தது.
இப்போது இந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலையாக வலுவிழந்து தமிழக நிலப்பரப்பில் நிலைகொண்டுள்ளது.
மழை தொடரும்:
இந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் வலுவிழந்திருந்தாலும், காற்றழுத்த தாழ்வு நிலையால், வடதமிழகம், புதுவை மற்றும் தெற்கு ஆந்திர கடலோரப் பகுதிகளின் பல இடங்களில் மழை தொடரும். இந்த மழை மேலும் சில நாள்களுக்கு நீடிக்கும்.
தென்தமிழகத்தின் சில இடங்களில் மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மைய அதிகாரிகள் தெரிவித்தனர்.
கடல் சீற்றம்:
இந்த காற்றழுத்த தாழ்வு மண்டலத்தின் காரணமாக கடல் மிகுந்த சீற்றத்துடன் காணப்பட்டது. சில இடங்களில் 10 மீட்டருக்கும் அதிகமான உயரத்தில் அலைகள் எழும்பின.
மீனவர்கள் கடலுக்குள் செல்ல வேண்டாம் என்று ஏற்கெனவே எச்சரிக்கப்பட்டிருந்தனர்.
காற்றழுத்த தாழ்வு மண்டலம் கரையைக் கடந்தபோது, வழக்கத்தை விட அதிகமான வேகத்தில் காற்று வீசியது. தமிழக துறைமுகங்களில் எச்சரிக்கைக் கூண்டுகள் ஏற்றப்பட்டிருந்தன. வடதமிழகத்தின் பல இடங்களில் நாள் முழுவதும் தொடர்ந்து மழை பெய்தது.
சனிக்கிழமை காலை வரையிலான 24 மணி நேரத்தில் சிதம்பரத்தில் 70 மி.மீ. மழை பதிவாகியிருந்தது. காரைக்கால், பரங்கிப்பேட்டை, கொள்ளிடத்தில் 50 மி.மீ. மழையும், நெய்வேலி, கடலூரில் 40 மி.மீ. மழையும் பதிவானது.
விருத்தாசலம், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, புதுச்சேரி ஆகிய இடங்களில் 30 மி.மீ. மழையும், ஒரத்தநாடு, பெரம்பலூர், ஜெயங்கொண்டம் ஆகிய பகுதிகளில் 20 மி.மீ. மழையும் பெய்துள்ளது. நன்னிலம், நீடாமங்கலம், வலங்கைமான், திருவாரூர், ஸ்ரீமுஷ்ணம், காட்டுமன்னார்கோவில், செஞ்சி, கள்ளக்குறிச்சி, விழுப்புரம், மகாபலிபுரம், கும்பகோணம், திருவிடைமருதூர், பாபநாசம், திருச்சி, அரியலூர் ஆகிய பகுதிகளில் 10 மி.மீ. மழை பதிவாகியுள்ளது.
சனிக்கிழமை மாலை வரையிலான நிலவரப்படி சென்னை நுங்கம்பாக்கத்தில் 15.4 மி.மீ. மழையும், மீனம்பாக்கத்தில் 10.7 மி.மீ. மழையும் பதிவானது.
வானிலை முன்னறிவிப்பு:
வடதமிழகம் மற்றும் புதுவையில் ஞாயிற்றுக்கிழமை கனமழை பெய்யும். தென்தமிழகத்தில் ஆங்காங்கே மழை பெய்யும்.
தகவல்:
தினமணி |