கடற்கரை பகுதி மேலாண்மை திட்டத்தின் கீழ் (COASTAL ZONE MANAGEMENT PLAN) தூத்துக்குடி மாவட்ட வரைபடத்திற்கான பொதுமக்கள் கருத்துக் கேட்புக் கூட்டம் (PUBLIC HEARING) கடந்த டிசம்பர் மாதம் 10ஆம் தேதி செவ்வாய்க்கிழமையன்று மாலை 15.30 மணியளவில், தூத்துக்குடி மாவட்ட ஆட்சியரகத்தில் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் திருச்செந்தூர், காயல்பட்டினம் உட்பட பல ஊர்களிலிருந்தும் பொதுமக்கள் கலந்துகொண்டனர்.
திருச்செந்தூரிலிருந்து கூட்டத்தில் கலந்துகொள்ள வந்திருந்த பொதுமக்கள், கடலோரத்தில் அமையப்பெற்றுள்ள அவர்களது கட்டிடங்கள் தொடர்பாக கேள்விகள் பலவற்றை எழுப்பினர். சில குற்றச்சாட்டுகளையும் - குறைபாடுகளையும் முன்னிறுத்தி, மீனவ சமூகத்தினர் யாரும் இக்கூட்டத்தில் கலந்துகொள்ளவில்லை.
காயல்பட்டினத்திலிருந்து, எஸ்.அப்துல் வாஹித், நகர்மன்ற உறுப்பினர் எம்.எஸ்.எம்.ஷம்சுத்தீன், ஹாஃபிழ் எம்.எம்.முஜாஹித் அலீ, எஸ்.கே.ஸாலிஹ் ஆகியோர் கலந்துகொண்டனர். பின்வருமாறு கேள்விகள் காயலர்களால் எழுப்பப்பட்டது:-
>> 2011ஆம் ஆண்டில் அறிவிக்கப்பட்ட CRZ விதிமுறைகள் (CRZ NOTIFICATION) - Hazard Line என ஒன்றை அறிமுகப்படுத்தியுள்ளது. அந்தக் கோடு குறித்து இதுவரை முடிவு செய்யப்படாமல் இருக்கையில், CRZ விதிமுறைகளை எவ்வாறு நடைமுறைப்படுத்த முடியும்?
>> கடலைத் தவிர இதர நீராதரங்களுக்கு அருகேயுள்ள நிலங்களும் CRZ விதிமுறைகளுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளன. விதிமுறைகள் நீராதாரத்தின் வாயின் அகலம் அல்லது 100 மீட்டர் - இதில் எது குறைவோ அதுவே CRZ பகுதி என்று கூறுகின்றன. ஆனால் காயல்பட்டினத்தில் உள்ள DCW தொழிற்சாலைக்கு தெற்கில் உள்ள ஓடைக்கான அளவும், ஓடக்கரை அளவும் குறிப்பிடப்படவில்லை. இதுகுறித்த விளக்கம் என்ன?
>> காயல்பட்டினம் முழுவதும் CRZ 3 என அறிவிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் நகரின் கடலோரத்தில் கடலிலிருந்து 200 மீட்டருக்குள் பல கட்டுமானங்கள் (1991ஆம் ஆண்டிற்கு முந்தையது) உள்ளன. அவை (மட்டும்) CRZ 2 என கருதப்படுமா?
>> காயல்பட்டினம் புல எண் 278 நிலப்பரப்பு - பயோகேஸ் திட்டத்திற்காக காயல்பட்டினம் நகராட்சியால் பரிசீலிக்கப்பட்டு வருகிறது. CRZ விதிமுறைகள் படி இது எந்தத் தரத்தில் உள்ளது?
மேற்கண்ட கேள்விகள் உட்பட இன்னும் சில கேள்விகளும் எழுப்பப்பட்டன.
இக்கேள்விகளைத் தொடர்ந்து பேசிய தூத்துக்குடி மாவட்ட மாசு கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள், கேட்கப்பட்ட கேள்விகள் அனைத்தும் நுட்பமாக உள்ளதால் உடனடியாக விளக்கமளிக்க இயலவில்லை என்றும், காலம் தாழ்த்தாமல் இக்கேள்விகளை எழுத்தில் தருமாறும் காயலர்களைக் கேட்டுக்கொண்டார். காயல்பட்டினம் நகராட்சியின் சார்பில் ஆணையர் ஜி.அஷோக் குமாரும் இக்கூட்டத்தில் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.
அதன் தொடர்ச்சியாக, டிசம்பர் 14ஆம் தேதி சனிக்கிழமை நண்பகல் 12.00 மணியளவில், தூத்துக்குடி மாவட்ட மாசு கட்டுப்பாட்டு வாரிய அலுவலகத்திற்கு, ஹாஃபிழ் எம்.எம்.முஜாஹித் அலீ, எஸ்.கே.ஸாலிஹ் ஆகியோர் நேரில் சென்று, எழுத்துப்பூர்வமாக கேள்விகளை - மாசு கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகளிடம் சமர்ப்பித்து வந்தனர்.
கள உதவி:
ஹாஃபிழ் M.M.முஜாஹித் அலீ |