காயல்பட்டினம் அரசு நூலகத்திற்கு கணினி இயந்திரங்கள் மற்றும் ஒளிபடிப்பொறி (ஜெராக்ஸ் இயந்திரம்) ஆகியன வழங்கப்படும் என, சிறந்த நூலகருக்கான பாராட்டு விழாவில், தூத்துக்குடி மாவட்ட அரசு நூலக அதிகாரி அறிவித்துள்ளார். விபரம் வருமாறு:-
தமிழக அரசின் நன்னூலகர் விருது பெற்ற காயல்பட்டினம் அரசு நூலகர் அ.முஜீபுக்கு பாராட்டு விழா கடந்த டிசம்பர் மாதம் 28ஆம் தேதி சனிக்கிழமை மாலை 16.30 மணியளவில், காயல்பட்டினம் எல்.கே.மேனிலைப்பள்ளி வளாகத்தில் நடைபெற்றது.
எழுத்தாளர் கே.எஸ்.முஹம்மத் ஷுஅய்ப் விழாவிற்குத் தலைமை தாங்கினார். அரசு நூலக வாசகர் வட்ட தலைவர் ஹாஜி டி.ஏ.எஸ்.முஹம்மத் அபூபக்கர், வரலாற்று ஆய்வாளர் முனைவர் ஆர்.எஸ்.அப்துல் லத்தீஃப், நூலாசிரியர் ஹாஜி எஸ்.ஓ.அபுல்ஹஸன் கலாமீ, எல்.கே.மேனிலைப்பள்ளியின் தலைமையாசிரியர் எம்.ஏ.எஃப்.செய்யித் அஹ்மத், விஸ்டம் பப்ளிக் பள்ளியின் தலைமையாசிரியர் எம்.ஏ.முஹம்மத் ஹனீஃபா, ஐக்கியப் பேரவை நிர்வாகி ஹாஜி எம்.ஏ.செய்யித் முஹம்மத் அலீ, ஹாங்காங் தமிழ்ச்சங்க முன்னாள் தலைவர் ஹாஜி ஏ.எஸ்.ஜமால் முஹம்மத் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
ஹாஃபிழ் எம்.எம்.முஜாஹித் அலீ நிகழ்ச்சிகளை நெறிப்படுத்தினார். ‘கவிமகன்’ காதர் விழா அறிமுகவுரையாற்றினார்.
இவ்விழாவில், பணி நிறைவு பெற்ற தமிழாசிரியர் எஸ்.இருதயராஜ், ‘மானுட வசந்தம்’ தொலைக்காட்சி நிகழ்ச்சியாளர் டாக்டர் கே.வி.எஸ்.ஹபீப் முஹம்மத் ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாகக் கலந்துகொண்டு, வாசிப்பின் அவசியம், உலகில் அது ஏற்படுத்தியுள்ள தாக்கம் குறித்து உரையாற்றினர்.
தூத்துக்குடி மாவட்ட நூலகத்துறை அதிகாரி கே.மந்திரம் இவ்விழாவில் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார்.
அதிக புரவலர்களைக் கொண்டுள்ள காயல்பட்டினம் அரசு நூலகத்திற்கு கணினி இயந்திரங்கள் இரண்டும், ஒளிபடிப்பொறி (ஜெராக்ஸ் இயந்திரம்) ஒன்றும் நூலகத்துறை சார்பில் வழங்கப்படும் என அவர் தனதுரையில் அறிவித்தார்.
தமிழக அரசின் சிறந்த நூலகர் விருது பெற்ற காயல்பட்டினம் அரசு நூலகர் அ.முஜீபுக்கு, பாராட்டுக் கேடயம், சான்றிதழ் மற்றும் ரூபாய் 5 ஆயிரம் பணமுடிப்பு ஆகியவற்றை, மாவட்ட நூலக அதிகாரி கே.மந்திரம், சிறப்பு அழைப்பாளர் டாக்டர் கே.வி.எஸ்.ஹபீப் முஹம்மத் ஆகியோரிணைந்து வழங்கினர்.
பல்வேறு அமைப்புகளின் சார்பில் - சிறந்த நூலகருக்கு சால்வை அணிவித்து கண்ணியப்படுத்தப்பட்டது.
இவ்விழாவில், காயல்பட்டினத்தைச் சேர்ந்த எழுத்தாளர்கள் முனைவர் ஹாஜி ஆர்.எஸ்.அப்துல் லத்தீஃப், ஹாஜி எஸ்.ஓ.அபுல்ஹஸன் கலாமீ, ஏ.லெப்பை ஸாஹிப் என்ற ஏ.எல்.எஸ்., கே.எஸ்.முஹம்மத் ஷுஅய்ப் ஆகியோர் ஊக்கப்பரிசு வழங்கி கவுரவிக்கப்பட்டனர். சிறப்பழைப்பாளர்களுக்கும், சிறப்பு விருந்தினருக்கும் நினைவுப் பரிசு வழங்கப்பட்டது.
முன்னதாக, இலங்கை காயல் நல மன்ற (காவாலங்கா) செயற்குழு உறுப்பினர் ஹாஜி எஸ்.ஐ.புகாரீ, ஹாஜி ஏ.லுக்மான், ஹிஜாஸ் மைந்தன் என்ற எம்.என்.எல்.முஹம்மத் ரஃபீக் உள்ளிட்டோர் வாழ்த்துரை வழங்கினர். ஏ.ஆர்.இர்ஃபான் நன்றி கூறினார்.
ரூபாய் பத்தாயிரம் பணப்பரிசை உள்ளடக்கிய கட்டுரைப் போட்டிக்கான அறிவிப்பு விழா நிறைவில் வெளியிடப்பட்டது.
துபை காயல் நல மன்ற தலைவர் ஆடிட்டர் ஹாஜி ஜெ.எஸ்.ஏ.புகாரீ, காயல்பட்டினம் சென்னை வழிகாட்டு மைய (KCGC) செயலாளர் எஸ்.கே.ஷமீமுல் இஸ்லாம், இக்ராஃ கல்விச் சங்க துணைச் செயலாளர் ஹாஜி என்.எஸ்.இ.மஹ்மூது, அபூதபீ காயல் நல மன்ற செயற்குழு உறுப்பினர் எஸ்.ஏ.சி.ஹமீத், காயல்பட்டினம் சுற்றுச்சூழல் பாதுகாப்பு அமைப்பின் செயலாளர் பல்லாக் அப்துல் காதிர் நெய்னா, ஊழல் எதிர்ப்பு இயக்கம் - சென்னை அமைப்பின் காயல்பட்டினம் கிளை பொருளாளர் எம்.எல்.ஹாரூன் ரஷீத் உட்பட பலர் கலந்துகொண்டனர். தனியார் நிறுவனமும், உள்ளூர் இணையதளமும் இவ்விழாவை இணைந்து நடத்தின.
கள உதவி:
ஹிஜாஸ் மைந்தன்
செய்தியாளர் - காயல்பட்டணம்.காம் |