காயல்பட்டினம் ஐக்கிய விளையாட்டு சங்கம் நடத்திய யுனைட்டெட் சூப்பர் கோப்பைக்கான கால்பந்துப் போட்டியில், கே-11 அணி கோப்பை வென்றுள்ளது. விபரம் வருமாறு:-
பள்ளி மாணவர்களுக்கு கால்பந்து விளையாட்டின் மீதான ஆர்வத்தை அதிகரிக்கவும், அவர்களிடையே புதைந்திருக்கும் விளையாட்டுத் திறனை வெளிக்கொணரும் நோக்குடனும், காயல்பட்டினம் ஐக்கிய விளையாட்டு சங்கம் சார்பில், யுனைட்டெட் சூப்பர் கோப்பை கால்பந்து சுற்றுப் போட்டி, யுனைட்டெட் ஃபுட்பால் லீக் என்ற பெயரில் கடந்த 2012ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டது.
நடப்பாண்டின் யுனைட்டெட் ஃபுட்பால் லீக் போட்டிகள் கடந்த 2013ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 24ஆம் தேதியன்று துவங்கி, நடப்பு ஜனவரி 01ஆம் தேதி வரை நடைபெற்றது.
தலா 4 அணிகளைக் கொண்டு - 2 பிரிவுகளாக மொத்தம் 8 அணிகள் பங்கேற்கும் வகையிலும், ஒவ்வொரு பிரிவிலும் முதல் இரண்டிடங்களைப் பெறும் அணிகள் அரையிறுதிப் போட்டிக்குத் தகுதி பெறும் வகையிலும் இச்சுற்றுப்போட்டி வடிவமைக்கப்பட்டிருந்தது.
காலரி பேர்ட்ஸ், கே.பி.ஹார்ட் ராக்கர்ஸ், ஸில்வர் மைனர்ஸ், ஸ்பீட் ஸ்ட்ரைக்கர்ஸ் ஆகிய நான்கு அணிகள் முதல் பிரிவிலும், ஹார்டி பாய்ஸ், ஜி-கூல், கே-11, உட்லண்ட்ஸ் ஆகிய நான்கணிகள் இரண்டாவது பிரிவிலும் விளையாடின.
முதல் பிரிவில் கே.பி.ஹார்ட் ராக்கர்ஸ் அணியும், இரண்டாம் பிரிவில் கே-11 அணியும் முதலிடம் பெற்றதையடுத்து, இவ்விரு அணிகளும், இம்மாதம் 01ஆம் தேதி புதன்கிழமை மாலையில் நடைபெற்ற இறுதிப்போட்டியில் களம் கண்டன.
ஆட்ட நேர இறுதி வரை ஈரணிகளும் கோல் எதுவும் அடிக்காததால், போட்டி சமனில் முடிவுற்றது. பின்னர் சமனுடைப்பு முறை கையாளப்பட்டது. இதில், கே-11 அணி 3-1 என்ற கோல் கணக்கில் வெற்றிபெற்றது.
இரவு 19.00 மணியளவில் பரிசளிப்பு விழா - ஐக்கிய விளையாட்டு சங்க தலைவர் ஹாஜி பி.எஸ்.ஏ.பல்லாக் லெப்பை தலைமையில் நடைபெற்றது. ஹாஃபிழ் பாளையம் ஏ.ஆர்.ஹிதாயத்துல்லாஹ் கிராஅத் ஓதி விழா நிகழ்ச்சிகளைத் துவக்கி வைத்தார். இச்சுற்றுப்போட்டியின் ஒருங்கிணைப்பாளர் ‘கலாமீ’ யாஸர் அரஃபாத் வரவேற்புரையாற்றினார்.
ஐக்கிய விளையாட்டு சங்க கால்பந்து அணியில் பல்லாண்டுகளாக விளையாடி, பின்னர் துப்பாக்கி தொழிற்சாலையில் வேலைவாய்ப்பு பெற்று, ஐக்கிய விளையாட்டு சங்கத்தால் நடத்தப்பட்ட ஆஸாத் கோப்பை கால்பந்துப் போட்டியில் - தான் சார்ந்த துப்பாக்கி தொழிற்சாலை அணிக்காக விளையாடி, தற்போது பணி நிறைவு பெற்றிருக்கும் - தலைசிறந்த கால்பந்து வீரர் மோகன் இவ்விழாவில் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு வாழ்த்துரை வழங்கினார்.
பின்னர் துவங்கிய பரிசளிப்பு நிகழ்ச்சியில், துவக்கமாக போட்டி நடுவர்களான இஸ்மாஈல், இல்யாஸ், நெய்னா ஆகியோருக்கு சிறப்பு விருந்தினர் பரிசுகளை வழங்கினார்.
இறுதிப்போட்டியில் பங்கேற்ற அணிகள் தவிர - இச்சுற்றுப்போட்டியில் கலந்துகொண்ட இதர 6 அணிகளுக்கும், காயல் ஸ்போர்ட்டிங் க்ளப் (கே.எஸ்.ஸி.) செயலாளர் பேராசிரியர் கே.எம்.எஸ்.சதக்கு தம்பி சான்றிதழ்களை வழங்கினார்.
இச்சுற்றுப்போட்டியின் சிறந்த விளையாட்டு வீரருக்கான பரிசு அமீர் என்ற வீரருக்கும், சிறந்த கோல் காப்பாளருக்கான பரிசு ஷம்சுத்தீனுக்கும் வழங்கப்பட்டது. கே-11 அணியின் கிழுறு ஃபைஸல் என்ற வீரருக்கு அறிவிப்பாளர் பாலப்பா சார்பில் சிறப்புப் பரிசு வழங்கப்பட்டது. இப்பரிசுகள் அனைத்தையும் ஐக்கிய விளையாட்டு சங்க முன்னாள் செயலாளர் பாளையம் எஸ்.ஏ.அஹ்மத் முஸ்தஃபா அவற்றை வழங்கினார்.
இறுதிப்போட்டியில் இடம்பெற்ற அணியினருக்கு தனிப்பரிசுகள் வழங்கப்பட்டது. துவக்கமாக, இரண்டாம் இடம் பெற்ற கே.பி.ஹார்ட் ராக்கர்ஸ் அணியினருக்கு பி.எச்.எம். ரெஸ்டாரெண்ட் அதிபர் பிரபு ஹபீப் முஹம்மத் பரிசுகளை வழங்கினார். வெற்றிபெற்ற கே-11 அணியினருக்கு - ஐக்கிய விளையாட்டு சங்க செயலாளர் ஹாஜி பி.எஸ்.எம்.இல்யாஸ் வழங்கினார்.
அரையிறுதிப் போட்டி வரை முன்னேறிய ஸில்வர் மைனர்ஸ் மற்றும் உட்லண்ட்ஸ் அணிகளுக்கான பரிசுகளை டாக்டர் எஸ்.ஓ.செய்யித் அஹ்மத் வழங்கினார். அவற்றை முறையே – ஈரணிகளின் அதிபர்களான ஃபியாஸ், வி.ஏ.டி.செய்யித் அஹ்மத் ஆகியோர் பெற்றுக்கொண்டனர்.
இறுதிப்போட்டியில் இரண்டாமிடம் பெற்ற அணிக்கான கோப்பை, பணப்பரிசு ரூபாய் 5 ஆயிரம் ஆகியவற்றை, பேராசிரியர் கே.எம்.எஸ்.சதக்கு தம்பி அணியினரிடம் வழங்கினார்.
இறுதிப்போட்டியில் வெற்றிபெற்ற கே-11 அணிக்கான பணப்பரிசு ரூபாய் 10 ஆயிரம் - அதன் உரிமையாளர் லெப்பைக்கனியிடம் வழங்கப்பட்டது. பரிசுக்கோப்பை மற்றும் சான்றிதழ்களை - ஐக்கிய விளையாட்டு சங்க தலைவர் ஹாஜி பி.எஸ்.ஏ.பல்லாக் லெப்பை வழங்கினார்.
நிகழ்ச்சிகளை நெறிப்படுத்திய பல்லாக் அப்துல் காதிர் நெய்னா நன்றியுரையாற்றினார். போட்டிகள் மற்றும் பரிசளிப்பு விழாவில், நகரின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த கால்பந்து ஆர்வலர்கள் கலந்துகொண்டனர்.
முன்னதாக, சிறப்பு விருந்தினர் மோகன், சிறப்பழைப்பாளர்களான பேராசிரியர் கே.எம்.எஸ்.சதக்கு தம்பி, திருச்சி மாநகராட்சி முன்னாள் கவுன்சிலர் உவைஸ் ஆகியோருக்கு - ஐக்கிய விளையாட்டு சங்க முன்னாள் வீரர் ‘துணி’ எம்.ஓ.அன்ஸாரீ, அதன் ஆட்சிக்குழு உறுப்பினர் ஏ.எஸ்.புகாரீ, கால்பந்தாட்ட பயிற்சியாளர் ஜமால் ஆகியோர் ஆட்டத்தின் இடைவேளையின்போது ஈரணி வீரர்களையும் அறிமுகம் செய்து வைத்தனர்.
தகவல்:
பல்லாக் அப்துல் காதிர் நெய்னா
படங்கள்:
‘ஹார்டி பாய்ஸ்’ ஃபைஸல் |