தமிழ்நாடு மாநில இந்திய யூனியன் முஸ்லிம் லீக் சார்பில், திருச்சியில் நடத்தப்பட்ட மஹல்லா ஜமாஅத் ஒருங்கிணைப்பு மாநில மாநாட்டில் சமுதாய - அரசியல் தீர்மானங்கள் பல நிறைவேற்றப்பட்டுள்ளன. இதுகுறித்து, வெளியிடப்பட்டுள்ள அறிக்கை:-
இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மஹல்லா ஜமாஅத் ஒருங்கிணைப்பு மாநில மாநாடு 28.12.2013 சனிக்கிழமை மாலை திருச்சியில் நடைபெற்றது. இம்மாநாட்டையொட்டி பயங்கர வாதத்தை எதிர்த்தும், சமூக நல்லிணக்கத்தை வலியுறுத்தியும் இளம்பிறை எழுச்சி பேரணி மாலை 4 மணிக்கு தில்லை நகரிலிருந்து புறப்பட்டு தென்னூர் உழவர் சந்தை மைதானம் வரை நடைபெற்றது.
பின்னர் உழவர் சந்தை மைதானத்தில் பேராசிரியர் கே.எம்.காதர் மொகிதீன் தலைமையில் நடைபெற்ற மாநாட்டில், 16 முன் மாதிரி மஹல்லா ஜமாஅத்துகளுக்கு விருது வழங்கி கவுரவிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசிய தலைவரும் மத்திய வெளியுறவுத்துறை இணை அமைச்சருமான இ. அஹமது நாடாளுமன்ற உறுப்பினர்கள் இ.டி.முகம்மது பஷீர்,எம். அப்துல் ரஹ்மான் எம்.பி., கேரள மாநில பொதுச்செயலாளர் கே.பி.ஏ. மஜீத், தமிழக பொதுச்செயலாளர் கே.ஏ.எம். முஹம்மது அபூபக்கர், பொருளாளர் எம்.எஸ்.ஏ. ஷாஜகான், மற்றும் மாநில நிர்வாகிகள், சவூதி அரேபியா, மலேசியா, சிங்கப்பூர், தாய்லாந்து, ஐக்கிய அமீரகம், கத்தார், குவைத், ஹாங்காங், உள்ளிட்ட நாடுகளின் பிரதிநிதிகள் உரையாற்றினர்.
பேரணி மற்றும் மாநாட்டில் தமிழகத்தின் அனைத்துப் பகுதிகளைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான முஸ்லிம்கள் பங்கேற்றனர்.
இம்மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட சமுதாய தீர்மானங்கள்:
01. சமுதாய ஒற்றுமை காப்போம்:
சமுதாய ஒற்றுமை என்பது நம் மார்க்க கடமை; இந்த ஒற்றுமை சீர் குலைய நாம் ஒருபோதும் இடமளிக்க கூடாது.
ரமளான் - ஹஜ்ஜுப் பெருநாட்கள், தலைநோன்பு, நோன்பு திறக்கும் நேரம் போன்றவைகளில் எத்தகைய சர்ச்சைகளையும் ஏற்படுத்தாமல் காஜிகளின் அறிவிப்புகளுக்கு கட்டுப்பட்டு நடந்து கொள்ள ஒட்டுமொத்த சமுதாயத்தையும் இம்மாநாடு வலியுறுத்துகிறது.
போட்டி மஹல்லா, போட்டி ஜமாஅத் என ஏற்படுத்தி சமுதாயத்தில் பிளவுகள் ஏற்பட எவரும் காரணமாக இருக்க வேண்டாம் எனவும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மஹல்லா ஜமாஅத் ஒருங்கிணைப்பு மாநில மாநாடு வேண்டுகோள் விடுக்கிறது.
02. மஹல்லா ஜமாஅத் வலிமை காப்போம்:
பள்ளிவாசலை மையமாகக்கொண்ட மஹல்லா ஜமாஅத் அமைப்பே இயற்கையான சமுதாய அமைப்பாகும். இஸ்லாத்தின் சிறப்பம்சமாகிய மஹல்லா ஜமாஅத் வலிமையாக இருந்தால்தான் சமுதாயத்திற்கு பலமும் நலமும் ஏற்படும்.
எனவே பள்ளிவாசலை நிர்வகிப்பது, கபரஸ்தானை பராமரிப்பது என்ற அளவில் மட்டும் ஜமாஅத் கடமையை செய்யாமல், மஹல்லா ஜமாஅத் அனைத்து நலக்காரியங்களையும் முன்னெடுத்துச் செய்ய வேண்டும்.
பைத்துல்மால், ஷரீஅத் பஞ்சாயத், மத்ரஸா, கல்வி, தொழிற்பயிற்சி நிலையங்கள், நூலகங்கள், முஸ்லிம் பெண்களுக்கான உதவும் சங்கங்கள், கல்வி உதவி, ஏழை குமர் திருமண உதவி, ஆதரவற்றோர்-முதியோர் பராமரிப்பு, வட்டியில்லா கடனுதவி, மருத்துவ சேவை, திருமண பதிவேடு, பிறப்பு-இறப்பு பதிவேடு பராமரித்தல் உள்ளிட்டவைகளை ஒவ்வொரு மஹல்லா ஜமாஅத்திலும் செயல்படுத்துவது இன்றைய காலத்தில் அவசியமாகும்.
மத்திய-மாநில அரசுகள் வழங்கும் சிறுபான்மையினருக்கான நலத்திட்ட உதவிகள் குறித்து பள்ளிவாசலில் அறிவிப்பு செய்வதோடு மஹல்லா ஜமாஅத்திலும் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்றும் இந்த மாநில மாநாடு கேட்டுக்கொள்கிறது.
03. பள்ளிவாசல் பராமரிப்பு உதவி நிதியம்:
தமிழகத்தில் உள்ள கிராமங்களிலும், நகர்ப்புற பகுதிகளிலும் பராமரிக்க இயலாமல் உள்ள பள்ளிவாசல்களை கண்டறிந்து அவற்றை தத்தெடுக்கவும், பள்ளிவாசல் இல்லாத முஸ்லிம் குடியிருப்புகளில் பள்ளிவாசல்களை உருவாக்கும் வகையிலும் பள்ளிவாசல் பராமரிப்பு உதவி நிதியம் துவக்க இம்மாநாடு தீர்மானிக்கிறது.
404. தமிழகம் முழுவதும் ஒரே விதத்தில் திருமணப் பதிவேடு:
உச்சநீதிமன்ற அறிவுறுத்தலின் பேரில் தமிழ்நாட்டில் திருமணக் கட்டாய பதிவு சட்டம் 21/2009 கொண்டு வரப்பட்டது. இச்சட்டத்தின் ஷரத்துக்கள் மீது முஸ்லிம் சமுதாயத்தில் எழுந்த ஐயப்பாடுகள் தொடர்பாக அரசின் கவனத்திற்கு கொண்டு சென்று பெரு முயற்சி மேற்கொண்டதன் பலனாக 26.08.2010 அன்று இச்சட்டத்தில் திருத்தங்கள் செய்யப்பட்டு அரசாணை எண் 758 பிறப்பிக்கப்பட்டது.
இதன்படி இஸ்லாமிய திருமணங்களை பதிவு செய்வதற்கென்றே படிவம் 1(அ) வெளியிடப்பட்டுள்ளது. இப்படிவம் இஸ்லாமிய திருமணங்களை பதிவு செய்வதற்கென அனைத்து அம்சங்களையும் உள்ளடக்கியதாக உள்ளது.
எனவே தமிழகத்தின் அனைத்து ஊர்களின் பள்ளிவாசல்களிலும் 1(அ) படிவ அடிப்படையில் திருமண பதிவேடு, ஒவ்வொரு திருமணத்திற்கும் 4 நகல்களுடன் தயாரித்து, ஒன்று மணமகனுக்கும், மற்றொன்று மணமகளுக்கும் இன்னொன்று அந்தந்த பள்ளிவாசல்களில் பத்திரப்படுத்துவதற்காகவும், மற்றதை அந்தந்த ஊர் சார்பதிவாளருக்கு பதிவு செய்வதற்கு அனுப்பிடச்செய்யும் வகையிலும் ஒரே மாதிரியாக தயாரிக்க வேண்டுமென மஹல்லா ஜமாஅத்துக்களை இம்மாநாடு கேட்டுக்கொள்கிறது.
05. ஊர்கள்தோறும் மீலாதுன் நபி விழா:
நபிகள் நாயகம் (ஸல்) பிறந்த தின விழாக்களை நடத்தி அதில் பிற சமய அறிஞர் பெருமக்களையும் பேச வைத்தன் மூலம் இஸ்லாத்தை பற்றி பிற சமயத்தவர் அறிந்து கொள்ளவும், சமூக நல்லிணக்கம் ஏற்படவும் வாய்ப்பு கிடைத்து வந்தது. இடை காலத்தில் பல ஊர்களில் மீலாது விழாக்கள் நிறுத்தப்பட்டுள்ளன. சமூக நல்லிணக்கம் பல இடங்களில் பாதிக்கப்பட்டுள்ள இக்கால கட்டத்தில்,
நபிகள் நாயகம் (ஸல்) பிறந்த தின விழாக்களையும், பெருநாள் சகோதரத்துவ சந்திப்புகளாக ஈத்மிலன் நிகழ்ச்சிகளையும் ஊர்கள் தோறும் நடத்தி அவற்றில் மாவட்ட ஆட்சித் தலைவர், வருவாய்துறை, காவல்துறை அதிகாரிகள், சர்வ சமய பிரமுகர்களை அழைக்கவும், அதன் மூலம் சமூக நல்லிணக்கத்துக்கும் இஸ்லாத்தை மற்றவர்கள் புரிந்து கொள்ள செய்வதற்கும் வாய்ப்பு ஏற்படுத்துமாறு மஹல்லா ஜமாஅத்துகளை இம்மாநாடு கேட்டுக்கொள்கிறது.
06. சிறப்பு திருமண சட்டம் பற்றிய எச்சரிக்கை:
பாஸ்போர்ட் உள்ளிட்ட முக்கிய தேவைகளுக்கு விண்ணப்பிக்கும் போது சார்பதிவாளர் அலுவலகம் திருமண சான்று கேட்பதால், காலம் கடந்து திருமணங்களை பதிவு செய்வோர் அறியாமையாலோ-பத்திர எழுத்தர் அல்லது பதிவாளர்களின் தவறான வழிகாட்டுதலாலோ சிறப்பு திருமணச்சட்டம் (Special Marriage Act 1954)ன் கீழ் முஸ்லிம்கள் தங்கள் திருமணங்களை பதிவு செய்வதாக தகவல்கள் வருகின்றன.
தாய், தந்தையின் சகோதரி மக்களை திருமணம் செய்ய தடை, முதல் மனைவி இருக்க இரண்டாவது திருமணம் செய்ய தடை, மண விலக்கு பெற நீதிமன்றங்களுக்குத்தான் உரிமை. இஸ்லாமிய வாரிசு உரிமை சட்டப்படி சொத்து பாகப்பிரிவினை பெற தடை என்பன போன்ற ஷரீஅத் சட்டத்தை பாதிக்கும் அம்சங்களைக் கொண்ட இச்சட்டத்தின் கீழ் முஸ்லிம்கள் திருமணம் செய்யக்கூடாது என சமுதாயத்தில் விழிப்புணர்வு பிரச்சாரம் செய்ய மஹல்லா ஜமாஅத்துகளையும், பள்ளிவாசல் நிர்வாகிகள் மற்றும் இமாம்களையும் இம்மாநாடு கேட்டுக்கொள்கிறது.
07. காஜீகளுக்கு சட்ட அங்கீகாரம்:
முஸ்லிம் சமூக அமைப்பில் திருமணம், விவாகரத்து, வாரிசுரிமை போன்ற வாழ்வியல் விவரங்களை நிறைவேற்றுவதும், அதற்கான சான்றிதழ் வழங்குவதும் காஜிகள், நாயிப் காஜிகள் என்ற பள்ளிவாசல் இமாம்கள்-கதீப்களின் வழக்கமான பணியாக இருந்து வருகிறது.
ஆனால் இத்தகைய காரியங்களை செய்வதற்கு இவர்களுக்கு அதிகாரம் கிடையாது என அறிவிக்ககோரி வக்ஃப் வாரிய முன்னாள் தலைவர் திருமதி பதர் சயீத் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குதொடர்ந்துள்ளார்.
தமிழ்நாட்டில் உள்ள சமுதாய அமைப்புகள் எதுவும் இதுபற்றி வாய் திறக்காத நிலையில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தமிழ்நாடு மாநிலத் தலைவர் பேராசிரியர் கே.எம். காதர் மொகிதீன் அவர்கள் இந்த வழக்கிற்கு எதிராக வாதம் செய்ய தன்னை எதிர் மனு தாரராக இணைத்து செய்த மனுவை சென்னை உயர்நீதிமன்றம் ஏற்றுக் கொண்டுள்ளது.
காஜிகள், இமாம்களின் அதிகாரத்தை நிலைநாட்டி இஸ்லாமிய கட்டமைப்பை காப்பாற்ற இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மேற்கொண்டுள்ள இந்த சட்டப் போராட்டத்திற்கு துணை நிற்குமாறு சமுதாயத்தை இம்மாநாடு கேட்டுக்கொள்கிறது.
08. மஹல்லா ஜமாஅத் நிர்மாணப் பணிகளில் இளைஞர்களைப் பயன்படுத்தல்:
மஹல்லா ஜமாஅத்துக்களில் உள்ள மஸ்ஜிது, மதரஸா, மற்றும் ஜமாஅத் கட்டடங்களை ஆண்டில் இரண்டு முறை-ரபியுல் அவ்வல் மாதத்திலும், ரமளான் திங்களிலும் அந்தந்த மஹல்லா ஜமாஅத்தில் உள்ள இளைஞர்களை தூய்மைப்படுத்தும் பணியில் ஈடுபடுத்துமாறு மஹல்லா ஜமாஅத் நிர்வாகங்களை இந்த மாநாடு கேட்டுக்கொள்கிறது.
09. சங்கைமிக்க இமாம்களுக்கு தகுதியான ஊதியம்:
பள்ளிவாசல்கள், மதரஸா, மக்தப்களில் பணி புரிந்து வரும் சங்கை மிகுந்த ஆலிம்களின் தேவைகளைப் பூர்த்தி செய்யும் வகையில் அவர்களுக்கு வழங்கப்படும் சம்பளம் மற்றும் சலுகை உதவிகளை தாரளமாக நிர்ணயம் செய்யும்மாறு மஹல்லா ஜமாஅத் நிர்வாகிகளை இந்த மாநாடு கேட்டுக்கொள்கிறது.
ஏற்றுகொள்ளப்பட்டு அதற்கான ஆய்வு பணிகள் நடைபெற்று வருகின்றன. இத்திட்டம் நிறைவேறும்போது வேலுர் மாவட்டத்தில் தண்ணீர் பிரச்சனை தீரும்.
10. முஸ்லிம் லீக் தேர்தல் நிதி:
தமிழக முஸ்லிம் சமுதாயம், தனது 55 லட்சம் வாக்குகளை ஒவ்வொரு தேர்தல்களிலும் வழங்கி, நாட்டில் பாராளுமன்ற ஜனநாயக முறையை நிலை நிறுத்துவதற்கு ஒத்துழைத்து வருகிறது.
ஆனால் நாடாளுமன்ற , சட்டமன்ற தேர்தல்களில் முஸ்லிம் சமுதாயத்திற்குரிய பிரதிநிதித்துவம் நியாயமான முறையில் கிடைப்பதில்லை. முஸ்லிம்களுக்கென தனி தொகுதி முறையே விகிதாச்சார முறையில் பிரதிநிதித்துவம் அளிக்கும் முறையே இன்றைக்கு நாட்டில் நடைமுறையில் இல்லாமல் இருக்கிறது.
ஆகவே தமிழக முஸ்லிம் சமுதாயம், தமிழக சட்டப்பேரவையில் தனது பிரதிநிதிகள் 25 பேர்களாவது இருக்க வேண்டும் என்றும் நாடாளுமன்றத்தில் தமிழகத்திலிருந்து 4 பிரதிநிதிகளாவது இடம் பெற வேண்டும் என்றும் தொடர்ந்து கோரி வருகிறது.
இந்த நியாய உணர்வு மிக்க கோரிக்கையை நிரைவேற்றும் வகையில் தமிழகத்திலுள்ள பிரதான அரசியல் கட்சிகள் முஸ்லிம்களுக்குரிய பிரதிநிதித்துவம் வழங்கிட முன் வர வேண்டும் என்று இந்த மாநாடு வேண்டுகோள் விடுக்கிறது.
சமுதாயம் சார்ந்த அரசியல் கட்சியாக திகழும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் நாடாளுமன்ற தொகுதிகள் இரண்டிலும், சட்டமன்ற தொகுதிகள் 8-லும் போட்டியிட்டு வெற்றிபெற்று கேரள மாநிலத்தில் அங்கீகரிக்கப்பட்டுள்ள தேர்தல் சின்னம் ஏணிக்கு தமிழகத்திலும் தேர்தல் ஆணைய அங்கீகாரம் பெறும் வகையில் தனது தேர்தல் வியூகங்களையும் கூட்டணியையும் அமைத்து பாடுபட உதவுவதற்கும் தமிழகத்தில் நாடாளுமன்ற சட்டமன்ற தேர்தல்களில் ஈடுபடும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் இயக்கத்திற்கு தேர்தல் நிதி தாராளமாக வழங்கி உற்சாகம் ஊட்ட வேண்டும் என்றும் இந்த மஹல்லா ஜமாஅத் மாநில மாநாடு கேட்டுக்கொள்கிறது.
11. பசுமைப் பூங்கா நகர்:
கேரள மாநில இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தனது அரசியல் பணிகளுக்கு மத்தியில் ஏழை எளிய குடும்பங்களுக்கு வீடுகள் கட்டித் தரும் ‘பைத்துல் ரஹ்மா’ என்னும் நிறுவனத்தை உருவாக்கி இதுவரை 300 வீடுகளுக்கு மேல் கட்டி கொடுத்துள்ளது.
வசதியற்ற ஏழை குடும்ப நோயாளிகளுக்கு இலவசமாக மருந்து மற்றும் டயாலிசிஸ் சிகிச்சை அளிப்பதற்கு சி.எச்.முஹம்மது கோயா மெடிக்கல் மிஷின் நிறுவி உதவி செய்து வருகிறது.
குடிநீர் தட்டுப்பாடுகள் போக்க கிணறுகள் தோண்டி நீர்தேக்கங்கள் அமைத்து குடிநீர் விநியோகம் செய்யும் பணி ஆயிரத்திற்கும் மேற்பட்ட இடங்களில் நடைபெற்று வருவது போன்ற நலக்காரியங்களை தமிழகத்திலும் துவக்குவதற்கு இம்மாநாடு முடிவு செய்கிறது.
இத்தகைய பொதுநல சேவை செய்யும் நிறுவனங்களும் பள்ளி, கல்லூரி மற்றும் பொறியியல் கல்விச் சாலைகளும் அரபி உருது ஆசிரியர் பயிற்சியகங்களும், செம்மொழி அரபி தமிழ் சமஸ்கிருதம் ஆகியவற்றையும் இஸ்லாம் மற்றும் உலக சமயங்களின் கொள்கைகளையும் ஒப்பாய்வு ஆய்வு செய்யும் ஆய்வு மையங்கள்-
ஆதரவற்ற சிறவர் சிறுமியர் மற்றும் முதியோர் காப்பகங்களும், தாவா பணிகளும், அரபி மதரஸா, எழிலார்ந்த மஸ்ஜித் இணைந்த குடியிருப்புகளும் நிறைந்திருக்கும் புதிய நகர் ஒன்றை தமிழகத்திலும் நடு நாயகமான பகுதியில் 550 ஏக்கர் பரப்பளவில் உருவாக்கி அதற்கு பசுமை பூங்கா நகர் (கிரீன் கார்டன் சிட்டி) என பெயர் சூட்டுவது என இம்மாநாடு தீர்மானிக்கிறது.
ஏற்றுகொள்ளப்பட்டு அதற்கான ஆய்வு பணிகள் நடைபெற்று வருகின்றன. இத்திட்டம் நிறைவேறும்போது வேலூர் மாவட்டத்தில் தண்ணீர் பிரச்சனை தீரும்.
இந்த பசுமை பூங்காநகர் உருவாக்குவதை இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தனது 10 ஆண்டு திட்டமாக அறிவிக்கிறது. இந்த அரிய திட்டம் குறித்த காலத்திற்குள் நிறைவேறுவதற்கு இந்திய யூனியன் முஸ்லிம் லீகை சேர்ந்த விற்பன்னர் குழு அமைக்கவும், அக்குழு அமைக்கும் பரிந்துரையின் அடிப்படையில் பூங்கா நகர் உருவாக்கும் பணிக்கு அனுமதி அளிக்கும் அதிகாரத்தை மாநில தலைவருக்கு இம்மாநாடு வழங்குகிறது.
திருப்புமுனை ஏற்படுத்தும் திருச்சி மாநாட்டில் நிறைவேற்றப்படும் இத்தீர்மானம் நடைமுறைக்கு வந்து பசுமை பூங்கா நகர் விரைவில் உருவாக எல்லாம் வல்ல இறைவனிடம் பிரார்த்திக்கிறது.
இவ்வாறு, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தமிழ்நாடு மாநில தலைமையகத்திலிருந்து வெளியிடப்பட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. |