தமிழ்நாடு மாநில இந்திய யூனியன் முஸ்லிம் லீக் சார்பில், திருச்சியில் நடத்தப்பட்ட மஹல்லா ஜமாஅத் ஒருங்கிணைப்பு மாநில மாநாட்டில் சமுதாய - அரசியல் தீர்மானங்கள் பல நிறைவேற்றப்பட்டுள்ளன. இதுகுறித்து, வெளியிடப்பட்டுள்ள அறிக்கை:-
இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மஹல்லா ஜமாஅத் ஒருங்கிணைப்பு மாநில மாநாடு 28.12.2013 சனிக்கிழமை மாலை திருச்சியில் நடைபெற்றது. இம்மாநாட்டையொட்டி பயங்கர வாதத்தை எதிர்த்தும், சமூக நல்லிணக்கத்தை வலியுறுத்தியும் இளம்பிறை எழுச்சி பேரணி மாலை 4 மணிக்கு தில்லை நகரிலிருந்து புறப்பட்டு தென்னூர் உழவர் சந்தை மைதானம் வரை நடைபெற்றது.
பின்னர் உழவர் சந்தை மைதானத்தில் பேராசிரியர் கே.எம்.காதர் மொகிதீன் தலைமையில் நடைபெற்ற மாநாட்டில், 16 முன் மாதிரி மஹல்லா ஜமாஅத்துகளுக்கு விருது வழங்கி கவுரவிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசிய தலைவரும் மத்திய வெளியுறவுத்துறை இணை அமைச்சருமான இ. அஹமது நாடாளுமன்ற உறுப்பினர்கள் இ.டி.முகம்மது பஷீர்,எம். அப்துல் ரஹ்மான் எம்.பி., கேரள மாநில பொதுச்செயலாளர் கே.பி.ஏ. மஜீத், தமிழக பொதுச்செயலாளர் கே.ஏ.எம். முஹம்மது அபூபக்கர், பொருளாளர் எம்.எஸ்.ஏ. ஷாஜகான், மற்றும் மாநில நிர்வாகிகள், சவூதி அரேபியா, மலேசியா, சிங்கப்பூர், தாய்லாந்து, ஐக்கிய அமீரகம், கத்தார், குவைத், ஹாங்காங், உள்ளிட்ட நாடுகளின் பிரதிநிதிகள் உரையாற்றினர்.
பேரணி மற்றும் மாநாட்டில் தமிழகத்தின் அனைத்துப் பகுதிகளைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான முஸ்லிம்கள் பங்கேற்றனர்.
இம்மாநாட்டில் அரசியல் தீர்மானங்கள்:
01. நாடாளுமன்றத் தேர்தல்:
2014 ம் ஆண்டு நடைபெற உள்ள நாடாளுமன்றத் தேர்தலில், பன்முகத் தன்மை கொண்ட இந்திய திருநாட்டில் மதம், மொழி, இனம், மற்றும் கலாச்சார வழியிலான சிறுபான்மை மக்களின் தனித்தன்மைகளுக்கு பாதுகாப்பு அளிக்கக்கூடிய, மாநில உரிமைகளுக்கு உரிய மதிப்பும்- பொருளாதார துறையில் தன்னிறைவு பெறும் திட்டமிடலும் கொண்ட, இந்திய அரசியல் சாசன உரிமைகளை மதித்து காப்பாற்றுகின்ற- சமய சார்பற்ற சமதர்ம சமூகநீதி கொள்கைகளை பேணிக்காக்கின்ற ஜனநாயக சக்திகள் வெற்றி பெற்று நாட்டை ஆள வேண்டும் என்பதே தேசிய ஒருமைப்பாட்டில் அக்கறை கொண்ட மக்களின் விருப்பமாகும். இந்த விருப்பத்தை பூர்த்தி செய்ய இம்மாநாடு உறுதியேற்கிறது.
நாடாளுமன்றத் தேர்தலில் தமிழகத்தை பொறுத்த வரை அமையும் கூட்டணி 2004 தேர்தலை பிரதிபலிக்கும் வகையில் தி.மு.க. தலைமையில் வலுவானதாக அமைய வேண்டும் என்ற இந்திய யூனியன் முஸ்லிம் லீக் விருப்பத்தை இம்மாநாடு வரவேற்கிறது.
விலைவாசி உயர்வு- சட்டம் ஒழுங்கு சீர்குலைவு- மின்தடை அதனால் தொழில்கள் மூடப்படும் சூழ்நிலை இவைகளுக்கிடையே எதிர்க்கட்சி குரல் வளையையே நசுக்கும் சர்வாதிகார போக்கு என்ற அ.இ.அ.தி.மு.க. அரசின் ஜனநாயக- மக்கள் விரோத செயல்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் வாக்குகள் சிதறிவிடும் சூழலை ஏற்படுத்தி விடாத நிலைபாட்டை உருவாக்கிடுமாறு தமிழக கட்சிகளை இம்மாநாடு வலியுறுத்துகிறது.
02. மதவெறி ஃபாசிஸ சக்திகளை வீழ்த்துவோம்:
தாங்கள் ஆட்சிக்கு வந்தால் மக்களுக்கு என்ன செய்வோம் என்பதை சொல்வதே அரசியல் கட்சிகளின் மரபு. இதற்கு மாறாக """" பிரதமர் பதவிக்கு மோடி’’ என்ற முழக்கத்தை பாரதீய ஜனதா முன்வைத்துள்ளது.
இட ஒதுக்கீடு உள்ளிட்ட சமூக நீதி கொள்கைகளுக்கு எதிரான நிலைப்பாடு கொண்ட பாரதீய ஜனதா கட்சி தனது பிரதமர் வேட்பாளராக நரேந்திர மோடியை அறிவித்துள்ளது.
மோடி முதல்வராக உள்ள குஜராத் மாநிலத்தில் சிறுபான்மையினருக்கான எந்த திட்டங்களையும் நிறைவேற்றுவதில்லை- மத்திய அரசு வழங்குகின்ற நிதிகளைப் பெற்று சிறுபான்மையினருக்கு கிடைக்கச் செய்யாமல் அதனை திருப்பி அனுப்பும் செயலையும் மோடி செய்து வருகிறார்.
சிறுபான்மையினருக்கான பாரதப் பிரதமரின் 15- அம்ச திட்டத்திற்கு எதிராக இரு தனி நபர்கள் தொடுத்த வழக்கை குஜராத் உயர்நீதிமன்றம் அரசியல் சட்டப்படி இத்திட்டம் நியாயமானதே எனச் சொல்லி தள்ளுபடி செய்து விட்டது. இந்த நியாயமான தீர்ப்பை எதிர்த்து உச்சநீதிமன்றத்திற்கு குஜராத் மாநில அரசே மேல்முறையீடு செய்திருக்கிறது. இதன்மூலம் மோடியும், அவரது அரசும் சிறுபான்மை மக்கள் விரோத அரசு என்பதை மீண்டும் உறுதி படுத்தியிருக்கிறது.
கிராமம் முன்னேறினால் நாடு முன்னேறும் என்ற தேசப்பிதா மகாத்மா காந்தியின் கூற்றுப்படி கிராம ராஜ்ஜியத்தை மக்கள் கனவு கண்டு கொண்டிருக்கும் போது, மோடி அவர்கள் எரியும் நெருப்பில் எண்ணெய் ஊற்றுவது போல் கலவரம் பாதித்த உத்திர பிரதேசத்திற்கு மோடி சென்று ராமராஜ்ஜியம் அமைப்போம் என உணர்ச்சியை தூண்டி விடுகிறார். 2002- ம் ஆண்டு குஜராத்தின் அலங்கோல மனநிலை அவரை விட்டும் மாறவில்லை என்பதையே இது வெளிப்படுத்தி காட்டுகிறது.
எனவே மதவெறி பாசிச சக்திகளை வீழ்த்த இம்மாநாடு உறுதி ஏற்கிறது. ஆகவே ஜனநாயக சமய சார்பற்ற சமூக நீதியை நிலை நிறுத்தும் திராவிட நெறியின் பாரம்பரியத்தை தொடருமாறு தமிழகத்திலுள்ள அரசியல் கட்சிகளை இம்மாநாடு கேட்டுக்கொள்கிறது.
03. பூரண மதுவிலக்கு:
அனைத்து தீமைகளுக்கும் காரணமான மது ஒழிக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கை வலுத்து வரும் இக்காலகட்டத்தில், மதுவை ஒழிப்பதற்கு பதிலாக புதிது புதிதாக மதுபானக் கடைகளை திறப்பதும், அக்கடைகளை முக்கிய இடங்களில் அனுமதிப்பதும், இரவு நேரங்களில் கூட ஹோட்டல்களில் ‘பார்’ திறக்க அனுமதித்திருப்பதும், கட்டுப்பாடற்ற முறையில் மது விற்பனை செய்யப்படுவதும், பண்டிகை காலங்களில் இலக்கு நிர்ணயித்து மது விற்பனையை பெருக்குவதுமான காரியங்கள் அரசு தரப்பில் தொடர்ந்து நடைபெற்று வருவது கண்டிக்கத்தக்கது. இதனால் மாணவர்களும் பெண்களும் கூட மதுவுக்கு அடிமையாவது அதிர்ச்சியளிக்கிறது.
எனவே பூரண மதுவிலக்கை அமல்படுத்தி மக்களை காப்பாற்றுமாறு மத்திய, மாநில அரசுகளை இம்மாநாடு கேட்டுக் கொள்கிறது.
04. அரசியல் சாசனத்தின் 44ஆவது பிரிவை நீக்குக:
இந்திய அரசியலமைப்புச் சட்டப்பிரிவு 25ல் மதவழிபாடு சுதந்திரம் வழங்கப்பட்டுள்ளது. தான் விரும்பிய மதத்தை ஏற்கவோ பரப்பவோ இந்திய குடிமக்களுக்கு உரிமை உண்டு. அந்த அடிப்படையில்தான் தனியார்சட்டங்கள் அங்கீகரிக்கப்பட்டு நடைமுறையில் உள்ளன.
ஆனால் இந்த சட்டப்பிரிவுக்கு நேர் எதிராக பொது சிவில் சட்டத்தை கொண்டு வர முயற்சிக்க சொல்லும் 44 வது பிரிவு அமைந்துள்ளது. இதை காரணமாக வைத்தே முஸ்லிம் தனியார் சட்டத்துக் கெதிரான பரப்புரைகள் செய்யப்படுகின்றன. பொது சிவில் சட்டம் கொண்டு வந்தே தீருவோம் என்ற குரல்களும் ஒலிக்கின்றன.
அரசியல் சாசன அடிப்படை உரிமைகளுக்கும் மத சுதந்திரத்திற்கும் சமய சார்பற்ற ஜனநாயகம் என்ற தத்துவத்திற்கும் இந்த 44வது பிரிவு எதிராக உள்ளதால் இதனை அரசியலமைப்புச் சட்டத்திலிருந்து முற்றிலுமாக நீக்க வேண்டுமென மத்திய அரசை வலியுறுத்துவதோடு, இதற்கு உறுதுணைபுரியுமாறு மதசார்பற்ற ஜனநாயக சக்திகளை இம்மாநாடு கேட்டுக் கொள்கிறது.
05. மிஸ்ரா கமிஷன் பரிந்துரைகளை அமுல்படுத்தல்:
கல்வி, வேலைவாய்ப்பில் முஸ்லிம்கள், கிறிஸ்தவர்கள், சீக்கியர்கள், பார்ஸிகள் உள்ளிட்ட சிறுபான்மையினருக்கு 4.5 சதவீத இடஒதுக்கீட்டை வழங்குவதாக மத்திய அரசு அறிவித்தது. சிறுபான்மையில் பெரும்பான்மையாக உள்ள முஸ்லிம்களுக்கு எந்த நன்மையையும் இந்த இட ஒதுக்கீடு ஏற்படுத்தி விடாது என்ற நிலையில் கூட நீதிமன்றங்கள் அதை தடுத்து நிறுத்திவிட்டன.
ஆளும் ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசால் அமைக்கப்பட்டு 2007 மே 22 ல் பிரதமரிடம் சமர்ப்பிக்கபட்ட நீதியரசர் ரங்கனாத் மிஸ்ரா ஆணைய பரிந்துரை இன்னமும் அமல்படுத்தப்படாமல் உள்ளது.
இந்த ஆணைய பரிந்துரைகளில் மிக முக்கியமானது, கல்வி - வேலைவாய்ப்புகளில் சிறுபான்மையினருக்கு 15 சதவீத மும் அதில் 10 சதவீதம் முஸ்லிம்களுக்கு இட ஒதுக்கீடு வழங்கப்பட வேண்டும் என்பதே.!
இந்த 15 சதவீத இடஒதுக்கீட்டில் சிக்கல் ஏற்பட்டால் பிற்படுத்தப் பட்டோருக்கான 27 சதவீத இட ஒதுக்கீட்டில் 8.4 சதவீதம் சிறுபான்மையினருக்கு ஒதுக்கி அதில் 6 சதவீதத்தை முஸ்லிம்களுக்கு அளிக்கலாம் எனவும் விளக்கமளித்துள்ளது.
எனவே இன்னமும் காலம் தாழ்த்தாமல் மிஸ்ரா ஆணைய பரிந்துரையை ஏற்று நீதிமன்றங்கள் தடை ஏற்படுத்தாதவாறு சட்ட வழிமுறைகளுடன் முஸ்லிம்களுக்கு இட ஒதுக்கீடு அளிக்குமாறு மத்திய அரசை இம்மாநாடு கேட்டுக் கொள்கிறது.
06. தமிழகத்தில் முஸ்லிம்களுக்கான இட ஒதுக்கீட்டை உயர்த்தல்:
தமிழ்நாட்டில் கல்வி, வேலைவாய்ப்பில் பின்தங்கியுள்ள முஸ்லிம்களுக்கு 3.5 சதவீத இடஒதுக்கீட்டை கலைஞர் தலைமையிலான தி.மு.க. அரசு வழங்கியது. இதனை உயர்த்தி தர கோரிக்கை விடுத்துவந்தோம். தான் ஆட்சிப் பொறுப்பிற்கு வந்தால் நிச்சயம் உயர்த்தித் தருவேன் என தேர்தல் பிரச்சார கூட்டங்களில் தமிழக முதல்வர் மாண்புமிகு செல்வி ஜெயலலிதா குறிப்பிட்டிருந்தார். ஆனால் அதன்படி இதுவரை உயர்த்தி அறிவிக்காதது வேதனையளிக்கிறது.
எனவே முஸ்லிம்களுக்கான தனி உள் ஒதுக்கீட்டை 3.5 சதவீதத்திலிருந்து உயர்த்திதருமாறு தமிழ்நாடு அரசை இம்மாநாடு கேட்டுக்கொள்கிறது.
07. முஸ்லிமாக மதம் மாறியோருக்கு பிற்படுத்தப்பட்டோர் வகுப்பு சான்று:
தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் முஸ்லிமாக மதம் மாறியோருக்கு """" இஸ்லாமாக மதம் மாறியவர்’’ என்றே சான்று வழங்கப்படுகிறது. இதனால் நியாயமாக கிடைக்க வேண்டிய பிற்பட்ட வகுப்பினருக்குரிய எந்த வாய்ப்பும் இவர்கள் பெற முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
மதம் மாறி கிறிஸ்தவ மதத்தில் இணைந்தவர்களுக்கு பிற்படுத்தப்பட்ட வகுப்பு சான்று வழங்கப்படுகிறது. தாழ்த்தப்பட்ட சமூகங்களிலிருந்து கிறிஸ்தவ மதத்தில் இணைகின்றவர்களை தாழ்த்தப்பட்ட வகுப்பாக அறிவிக்க வேண்டும் என தமிழக அரசே மத்திய அரசுக்கு பரிந்துரை செய்கிறது.
ஆனால் எத்தனையோ முறை கோரிக்கை வைத்தும் அரசு இதை கவனத்தில் எடுக்கவில்லை என்பது வேதனைக்குரியது.
முற்பட்ட, பிற்பட்ட மிகவும் பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட என்ற எந்த ஒரு பட்டியலிலும் இல்லாத ஒன்றைச் சொல்லி சான்று வழங்குவதே சட்டவிரோதம்
எனவே தமிழக அரசு இதை கவனத்தில் எடுத்து தகுந்த உத்தரவு பிறப்பித்து இஸ்லாமாக மதம் மாறியவர்களும் பிற்பட்ட வகுப்பினர் என்று சான்று வழங்க இம்மாநாடு வலியுறுத்துகிறது.
08. இந்தியாவில் இஸ்லாமிய வங்கி முறை தேவை:
பொருளாதார சுரண்டலை முற்றிலும் தடுக்கும் வகையிலும், மக்களின் பொருளாதார வாழ்வாதாரம் மேம்படையவும் வட்டியில்லா வங்கி முறையான இஸ்லாமிய வங்கி முறையே சாத்தியமானது என உலகளவில் நிரூபனமாகியுள்ளது. இந்தியாவில் வங்கிமுறையின் மேம்பாட்டு நிலையை ஆய்வு செய்ய அமைக்கப்பட்ட ரகுராம் ராஜன் குழுவும் இஸ்லாமிய வங்கி முறையை இந்தியாவில் அமல்படுத்தலாம் என பரிந்துரை செய்தது.
மலேசிய நாட்டில் பயணம் மேற்கொண்ட பிரதமர் மன்மோகன்சிங்கும், இஸ்லாமிய வங்கி முறை மிகச்சிறந்த ஒன்று அது இந்தியாவிற்கும் சாலச்சிறந்தது என குறிப்பிட்டிருந்தார்.
ஐரோப்பிய நாடுகளின் பிரபல வங்கிகள் வழக்கத்தில் உள்ள நடைமுறைகளோடு வட்டியில்லா வணிகத்தையும் நடத்த தனிப்பிரிவுகளை உருவாக்கி பெரிய அளவில் செயல் படுத்துகின்றன.
இஸ்லாமிய வங்கிமுறையை இந்தியாவில் அமல்படுத்தலாம் என பரிந்துரை செய்த பொருளாதார நிபுணர் ரகுராம் ராஜனே தற்போது இந்திய ரிசர்வ் வங்கி ஆளுனராக பொறுப்பில் உள்ளார். கேரளாவில் ரூ 1000 கோடி மூலதனத்தில் இஸ்லாமிய பைனான்ஸ் நிறுவனத்திற்கும் ரிசர்வ் வங்கி அனுமதியளித்துள்ளது.
இப்படிப்பட்ட சூழ்நிலையில் இந்திய பொருளாதாரத்தை தூக்கிப்பிடிக்கும் இஸ்லாமிய வங்கியை இந்தியாவில் நடைமுறைப்படுத்த இம்மாநாடு மத்திய அரசை வேண்டுகோள் வைக்கிறது.
09. பள்ளிவாசல் திருமணப் பதிவை ஏற்று பாஸ்போர்ட் வழங்குக:
தமிழ்நாட்டில் பாஸ்போர்ட் கேட்டு விண்ணப்பிக்கும் போது பாரம்பரிய அடிப்படையிலான உள்ளூர் திருமண சான்றிதழ்களை இணைத்திருந்தாலும் சார்பதிவாளர் அலுவலக சான்றை கேட்டு விண்ணப்பத்தை நிராகரித்து வருகின்றனர். இதனால் பாஸ்போர்ட் கிடைக்காமல் பாதிக்கப்படுகின்றோர் எண்ணிக்கை பெருமளவில் உயர்ந்து கொண்டே போகிறது.வெளிநாட்டு வேலை வாய்ப்புகளில் இருப்பவர்களும் பாஸ்போர்ட் கிடைக்காமல் தங்கள் குடும்பத்தை அழைத்துச் செல்ல முடியாமல் தவியாய் தவிக்கின்றனர்.
இது தொடர்பாக இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மத்திய வெளிவிவகார அமைச்சகத்திற்கும், பாராளுமன்றத்திலும் இப்பிரச்சினையை கொண்டு சென்று பாஸ்போர்ட் உயர் அதிகாரிகளிடம் ஆலோசனை நடத்தியும் தீர்வு காணப்படவில்லை.
எனவே அனைத்து சமுதாயத்தினரிடமும் வழக்கமாக இருந்து வரக்கூடிய பள்ளிவாசல், கோயில், தேவாலயங்களில் நடைபெறும் திருமணங்கள் தொடர்பாக அந்தந்த நிர்வாகங்கள் தரும் சான்றிதழை திருமண பதிவு ஆதாரமாக ஏற்று பாஸ்போர்ட் வழங்க வேண்டும். அல்லது பாஸ்போர்ட் விதி முறைகளில் ஒன்றான கணவன்- மனைவி புகைப்படம் ஒட்டப்பட்ட உறுதிமொழி பத்திரத்தை (அபிடவிட்) ஏற்று பாஸ்போர்ட் வழங்க மத்திய அரசை இம்மாநாடு கேட்டுக் கொள்கிறது.
10. காஜீகள் சட்டத்தில் திருத்தம் தேவை:
திருமணம், மணமுறிவு, வாரிசுதாரர் போன்றவற்றுக்குச் சான்றிதழ் வழங்கும் வழக்கம் காலங்காலமாக தலைமை காஜி, மாவட்ட காஜிகள் மற்றும் மஹல்லா ஜமாஅத் இமாம்களான நாயிப் காஜிகளிடம் இருந்து வருகிறது.
இத்தகைய மாநில, மாவட்ட, மஹல்லா காஜிகள் வழங்கும் சான்றிதழ்கள், அரசு அலுவலகங்களிலும், நீதிமன்றங்களிலும், பாஸ்போர்ட் வழங்கும் மத்திய அரசு அலுவலகங்களிலும் அங்கீகரிக்கப்பட்டு ஏற்றுக்கொள்ளப்பட்டு காஜிகளுக்குரிய அதிகாரங்களை அரசு உறுதி கொள்ளும் வகையில் இந்திய காஜிகள் சட்டத்தில் திருத்தம் கொண்டுவர வேண்டுமென மாநில அரசை இம்மாநாடு கேட்டுக்கொள்கிறது.
இத்தகைய திருத்தம் செய்யும்போது அண்டைய மாநிலமான ஆந்திர பிரதேசத்தில் நடைமுறையில் உள்ள காஜிகளின் அதிகார அங்கீகரிப்பை முன் மாதிரியாகக்கொள்ள வேண்டும் என்றும், காஜிகளை நியமிக்கும் பொறுப்பை ஆந்திரபிரதேச வக்ஃபு வாரியத்துக்கு வழங்கப்பட்டிருப்பதோடு மாவட்ட , மஹல்லா காஜிகள் பதிவாளர்களாக அங்கீகரிக்கப்பட்டு, அவர்களின் சான்றிதழ் வக்ஃபு வாரியத்தில் திருமணம், மணமுறிவு, வாரிசுதாரர் பட்டியல் போன்றவை பதிவு செய்யப்படுகின்றன என்பதையும், மாநில அரசு கவனத்தில் கொண்டு உரிய சட்டத்திருத்தம் செய்ய வேண்டுமென இந்த மாநாடு கோரிக்கை வைக்கிறது.
11. ஓரினச்சேர்க்கை சீராய்வு மனுவை திரும்பப் பெறுக:
ஒருபால் உணர்வு குற்றமல்ல என்று டெல்லி உயர்நீதிமன்றம் அளித்த தீர்ப்பினை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீடு மனுக்களை விசாரித்த உச்சநீதிமன்றம், உயர்நீதிமன்றம் தீர்ப்பை ரத்து செய்ததோடு இந்திய தண்டனைச் சட்டம் பிரிவு 377 இருக்கும் வரை அது குற்றம் அல்ல என கூற முடியாது எனவும் தெளிவுபடுத்தியுள்ளது.
இந்த தீர்ப்பை எதிர்த்து மத்திய அரசு உச்சநீதிமன்றத்தில் சீராய்வு மனு தாக்கல் செய்துள்ளதோடு தனி நபர்களின் உரிமை பாதுகாக்கப்படும் எனவும் அறிவித்துள்ளது.
எல்லா மதங்களும் தடைசெய்துள்ள இயற்கைக்கு மாற்றமான ஒருபால் உறவுக்கு அங்கீகாரம் கொடுக்கும் எந்த முயற்சியிலும் ஈடுபட வேண்டாம் என மத்திய அரசை வற்புறுத்துவதோடு அந்த சீராய்வு மனுவை திரும்பப் பெற வேண்டும் எனவும் இம்மாநாடு வலியுறுத்துகிறது.
12. பல்கலைக்கழக துணைவேந்தர் பதவிகளில் முஸ்லிம்கள்:
மத்திய-மாநில பல்கலைக்கழக துணை வேந்தர் நியமனங்களின் போது முஸ்லிம்கள் இடம் பெறாமல் இருந்து வருவது மிகுந்த வேதனை அளிக்கிறது.
எனவே திறமையும் தகுதியும் வாய்ந்த முஸ்லிம்களை துணை வேந்தர் பதவிக்கு நியமிக்க மத்திய மாநில அரசுகளை இம்மாநாடு கேட்டுக்கொள்கிறது.
13. சென்னை உயர்நீதிமன்றத்தில் முஸ்லிம் நீதிபதிகள்:
சென்னை உயர்நீதிமன்ற60 நீதிபதி இடங்களில் தற்போது 48 பணியிடங்கள் மட்டுமே நிரப்பப்பட்டுள்ளன. அந்த 48 நீதிபதிகளில் ஒருவர் மட்டுமே முஸ்லிமாக உள்ளார். இன்னும் 12 இடங்கள் நிரப்பப்பட வேண்டும்.
எனவே, சென்னை உயர்நீதிமன்றத்திற்கு 5 முஸ்லிம் நீதிபதிகளையாவது நியமிக்க வேண்டுமென இம்மாநாடு வலியுறுத்துகிறது.
14. திருச்சி ஜங்ஷன் ரெயில்வே மேம்பாலம்:
திருச்சி ஜங்ஷன் ரயில்வே மேம்பாலம் பிரிட்டிஷ் காலத்தில் கட்டப்பட்டதாகும்.
சென்னை-மதுரை நெடுஞ்சாலை தொடர்புடைய இப்பாலம், மத்திய பேருந்து நிலையத்திற்கு ஒரே வழியாக அமைந்துள்ளதால் போக்குவரத்து நெரிசல் அதிகரித்துவிட்டது.
போக்குவரத்து முக்கியத்துவம் வாய்ந்த இப்பாலம் குறுகலாக இருப்பதால் அகலப்படுத்தி அமைக்கப்பட வேண்டும் என்பது திருச்சி மாநகர மக்களின் நீண்டநாள் கோரிக்கை.
எனவே, இனியும் காலம் தாழ்த்தாமல் திருச்சி ஜங்ஷன் ரயில்வே-மேம்பலத்தை அகலப்படுத்தி புதிதாக அமைக்க இம்மாநாடு வலியுறுத்துகிறது.
15. காந்தி மார்க்கெட்டை புதுப்பித்து உருவாக்குக:
திருச்சி காந்தி மார்க்கெட் மிக நீண்ட கால வரலாறு கொண்டது.
மக்களுக்கு மிகவும் பயனாக இருக்கும் காந்தி மார்க்கெட்டை அகற்றாமல், ஆக்கிரமிப்புக்களை மட்டும் அகற்றி நவீன முறையில் அதே இடத்தில் புதுப்பித்து கட்டுமாறு திருச்சி மாநகராட்சியை இம்மாநாடு கேட்டுக்கொள்கிறது.
16. மூடப்பட்ட தோல் பதனிடு தொழிற்சாலைகள், சாயப்பட்டறைகளுக்கு இழப்பீடு:
தமிழகத்தில் தோல் பதனிடும் தொழிற்சாலைகளும்,சாயப்பட்டறைகளும் மாசு கட்டுப்பாட்டு வாரியத்தால் எத்தகைய முன்னறிவிப்புமின்றி மூடப்பட்டு வருவதால் அதில் பணியாற்றிய லட்சக்கணக்கான தொழிலாளர்கள் மட்டுமின்றி அவர்களை நம்பியிருந்த பல லட்சம் குடும்பங்களும் நடுத்தெருவிற்கு வந்துவிட்டன.
இதனை நடத்தி வந்த அதிபர்களும் பெரும் நட்டத்திற்கு ஆளாகியுள்ளனர். இவர்களுக்கு உரிய இழப்பீட்டை அரசு வழங்குவதோடு சுற்றுச்சூழல், விவசாயம் குடிநீர் பிரச்சனை இல்லாமல் இவை இயங்குவதற்குரிய முயற்சிகளை துரிதப்படுத்துமாறு மத்திய, மாநில அரசுகளை இம்மாநாடு கேட்டுக்கொள்கிறது.
17. ஆயுள் சிறைவாசிகள் விடுதலை:
ஆயுள் சிறைவாசிகள் தண்டனை விஷயத்தில் ஒவ்வொரு மாநிலமும் வெவ்வேறு நடைமுறைகளை கையாண்டு வருகின்றன. ஆயுள் தண்டனை தொடர்பாக உச்சநீதிமன்றம் பல தீர்ப்புகளில் குறிப்பிட்ட பின்னரும் மாநில அரசுகள் குறுகிய காலத்தில் அவர்களை விடுதலை செய்திருக்கின்றன.
கடந்த கால முன் மாதிரிகளை கருத்தில் கொண்டு தமிழகத்தில் 12 ஆண்டு காலம் தண்டனை கழித்துவிட்ட ஆயுள் சிறைவாசிகள் அனைவரையும் விடுதலை செய்யுமாறு தமிழக அரசை இம்மாநாடு கேட்டுக்கொள்கிறது.
18. முஸ்லிம்களுக்கு இலவச கல்வி:
கல்வி வேலை வாய்ப்பில் மிகவும் பின் தங்கியுள்ள முஸ்லிம்களை கைதூக்கி விடுவதற்காக, தாழ்த்தப்பட்ட, பழங்குடியினருக்கு வழங்குவதை போல் முஸ்லிம்களுக்கும் இலவச உயர் கல்வி வழங்குமாறு தமிழக அரசை வலியுறுத்துவதோடு, ஏழை எளிய மாணவர்களுக்கு கல்வி கடன் துரிதமாகவும் உறுதியாகவும் கிடைக்கவும், அக்கடனுக்கான வட்டியை அரசே ஏற்க வழி வகை செய்ய வேண்டும் எனவும் மத்திய மாநில அரசுகளை இம்மாநாடு கேட்டுக்கொள்கிறது.
19. தென் மாநில நதிநீர் இணைப்பு
தமிழகத்தில் நீர் ஆதாரத்தை பெருக்குவதற்கு இந்திய யூனியன் முஸ்லிம் லீக் நாடாளுமன்றத்திலும் மத்திய அரசிடமும் முயற்சி மேற்கொண்டதன் பயனாக தென்பெண்ணை பாலாறு இணைப்பு திட்டம் ஏற்றுகொள்ளப்பட்டு அதற்கான ஆய்வு பணிகள் நடைபெற்று வருகின்றன. இத்திட்டம் நிறைவேறும்போது வேலூர் மாவட்டத்தில் தண்ணீர் பிரச்சனை தீரும்.
கர்நாடகத்தில் நேத்ராவதி ஆறு மேற்நோக்கி பாய்ந்து கடலில் வீணாகும் நீரை பயன்படுத்த நேத்ராவதி-காவிரியின் துணை ஆறான ஹேமா வதி இணைப்பு திட்டத்தை செயல்படுத்த வேண்டும் என்ற இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கோரிக்கை ஏற்கப்பட்டு அந்த ஆய்வு பணியும் தொடங்கப்பட உள்ளது.
தென்பெண்ணை பாலாறு இணைப்பு திட்டம் பற்றிய நமது கோரிக்கை ஏற்கப்பட்டு அந்த ஆய்வு பணிகள் முடிக்கப்பட்டுள்ளன என்பது மகிழ்ச்சியை தருகிறது. இதற்காக மத்திய அரசுக்கு நன்றி தெரிவிப்பதோடு ,
கிருஷ்ணா நதி, பெண்ணாறு, காவிரி அணைக்கட்டு இணைப்பு பணி திட்டமும் ஏற்கப்பட்டு அதற்கான ஆய்வுப்பணிகளும் தொடங்கப்பட்டுள்ளன. இத்திட்டம் நிறைவேறினால் காவிரியின் கடை மடை கடைசி பகுதி வரை தண்ணீர் வரும் என்பதால் இத்திட்டத்தை விரைந்து நிறைவேற்றுமாறு மத்திய அரசை இம்மாநாடு வலியுறுத்துகிறது.
இவ்வாறு, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தமிழ்நாடு மாநில தலைமையகத்திலிருந்து வெளியிடப்பட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. |